என் உடை.. என் இஷ்டம்! கரூர் எம் பி ஜோதிமணி ‘நறுக்’ ன்னு சொன்ன நாலு வார்த்தை!

பெண்களின் உடை ஏன் எப்போதுமே விவாதத்துக்கு உள்ளாகிறது? தனிப்பட்ட ஒருவரது விருப்பத்தின் மீது அடுத்தவர்களுக்கு அப்படி என்ன ஆர்வம்?
jothimani dress controversy
jothimani dress controversy

பொதுவெளியில் தனது கருத்துக்களைத் தைரியமாக முன் வைக்கக் கூடிய பெண் அரசியல் தலைமைகளில் மிக முக்கியமானவர் கரூர் எம் பி ஜோதிமணி.  இவர் தற்போது ஐநா சபையின் கீழ் இயங்கும் ‘விட்டல் வாய்ஸ்’ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சார்பாகச் சென்றுள்ளார். இந்த கெளரவம் ஜோதிமணிக்கு புதிதல்ல. இது அவருக்கு இரண்டாம் முறையாகக் கிடைத்திருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியொரு அழைப்பை ஏற்று மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தவர் தான் ஜோதிமணி.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்படும் தலைவர்கள் தங்களைப்பற்றியும், தங்களது பின்னணி பற்றியும், எவ்விதச் சூழலில் தாங்கள் அரசியலில் இணைந்தோம் என்பது பற்றியும் இதுவரையிலும் தாங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் வெற்றி நடை போட தாங்கள் சந்தித்த இடர்கள் குறித்தும், அவற்றை வெற்றிப்படிகளாக்க தான் சந்திக்க நேர்ந்த துயர்கள் குறித்தும் அந்த மாநாட்டில் தமது அனுபவங்களை முன் வைக்கலாம்.

சுமார் 25 நாடுகளைச் சேர்ந்த பெண் ஆளுமைகள் பங்கேற்கும் அப்படியானதொரு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற எம் பி ஜோதிமணியை சென்னை விமானநிலையத்தில் வைத்து செந்தில் பாலாஜி பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார். அத்துடன் மாநாடு குறித்து சில வார்த்தைகள் கூறிச் சிறப்பித்து, அப்படியோர் மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்லும் எம் பி ஜோதிமணியை தாய், தந்தை ஸ்தானத்தில் இருந்து வாழ்த்திய போது எடுத்த புகைப்படம் எனக்கூறி வழியனுப்பிய போது எடுத்த புகைப்படம் ஒன்றை தனது முகநூல் பதிவில் பகிர்ந்திருந்தார்.

உடனே கிளம்பி விட்டார்கள் ஜோதிமணி வெறுப்பாளர்கள். உடனே அந்தப் புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த உடைகளைக் காரணமாக வைத்து ஜோதிமணியை விமரிசிக்கத் தொடங்கி விட்டார்கள். புகைப்படத்தில் ஜோதிமணி ஜீன்ஸ், ஷர்ட் அணிந்திருந்தார்.

அவர் ஜீன்ஸ், ஷர்ட் அணிந்த புகைப்படங்கள் முன்பே ஊடகங்களில் வெளியாகி இருக்கின்றன. இதொன்றும் புதிதில்லை.

ஆயினும். தனது உடை குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகும் விமரிசனம் கண்டு ஜோதிமணி நறுக்கென பதில் சொல்லி அத்தகைய  விமரிசனத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

ஜோதிமணியின் பதில்...

‘உலகம் முழுதுமுள்ள பெண் அரசியல்வாதிகள் பங்கேற்கும் மாநாட்டில் கலந்து கொள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பாராட்டி, என் தொகுதி, மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வாழ்த்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன. என் உடை குறித்து விமர்சிக்கும் காவிவாதிகளின், பெண் வெறுப்பாளர்களின் நெஞ்சு பொருமலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த நிகழ்ச்சிக்கு எப்படி டிரஸ் அணிய வேண்டும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இது என் தனிப்பட்ட உரிமை. அதனால் அமைதியாகுங்கள்.

பெண்களின் உடை ஏன் எப்போதுமே விவாதத்துக்கு உள்ளாகிறது? தனிப்பட்ட ஒருவரது விருப்பத்தின் மீது அடுத்தவர்களுக்கு அப்படி என்ன ஆர்வம்? இப்படி உடை குறித்து விமர்சிக்கும் எல்லா ஆண்களும், தமிழ் கலாச்சாரத்தின்படி வேஷ்டி தான் அணிகிறார்களா? முதலில் மற்றவர்களை மதிப்பதுதான் தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரம். அதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.

காட்டன் புடவைகள், ஜீன்ஸ், டீ ஷர்ட்டுகள் எனக்கு மிகப் பிடித்த உடைகள். நான் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும் போது நீங்கள் இன்னும் எரிச்சல் அடையும் வகையில் பதிவிடுவேன். அதுவரைக்கும் கலாச்சாரம் என்றால் என்ன என்பதை தேடி கொண்டிருங்கள். பெண்களுக்கு மட்டும் முன்னேறி செல்வதில் ஏன் இவ்வளவு சுமைகள்? ஆண்களுக்கு இப்படி இல்லையே..

பெண் தலைவர்கள் தான் தங்களது தோற்றம், உடை, சிரிப்பு, திருமண வாழ்க்கை போன்றவற்றின் அடிப்படையில் எப்படிஇப்படியெல்லாம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆண்கள் ஏன் அப்படியெல்லாம் அணுகப்படுவதில்லை என்பது குறித்தும் விவாதிப்பதே இந்த கூட்டத்தின் சாராம்சம். பெண்கள் மீது தொடர்ந்து வெளிப்படுத்தும் இந்த வெறுப்பை எதிர்த்துதான் நாங்கள் திடமாக போராடுகிறோம். எங்களுடன் இணைந்திருக்கும் எல்லா ஆண்களுக்கும் நன்றி’

- என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com