தால் ஏரியில் தாமரைத் தண்டு அறுவடை! ‘காஸ்ட்லி’ உணவு வகையின் சிறப்பு என்ன?

தாமரைத் தண்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு வகைகள் காஷ்மீரின் பண்டிகைக் காலங்களுக்கு மட்டுமே உரித்தானவையாகக் கருதப்படுகின்றன. காரணம் அவற்றின் அதிக விலையே!
தால் ஏரியில் தாமரைத் தண்டு அறுவடை செய்யும் விவசாயி
தால் ஏரியில் தாமரைத் தண்டு அறுவடை செய்யும் விவசாயி

காஷ்மீர் தால் ஏரியில் நேற்று முதல் மீண்டும் தாமரைத் தண்டு அறுவடை தொடங்கியது. இதனால் அங்கிருக்கும் விவசாயிகளின் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சியைக் காண முடிகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் காஷ்மீரில் ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. வெள்ளத்தின் காரணமாக ஏரிகளில் இருந்த தாமரை விதைகள் அனைத்தும் துடைத்தெடுத்தாற் போல காணாமல் போய்விட்டன. இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தாமரைத் தண்டு அறுவடை என்பதே அங்கு இல்லாமலானது. இவ்விதமாகக் குறைந்திருந்த தாமரைத் தண்டு அறுவடையானது மீண்டும் தொடங்கியதன் காரணமாகத் தற்போது அங்கிருக்கும் விவசாயிகள் மற்றும் வணிகர்கள்  மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

தாமரைத் தண்டு
தாமரைத் தண்டு

காஷ்மீரில் தாமரைத் தண்டை ‘நத்ரு’ என்று அழைக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை ‘நத்ரு’ விலையுயர்ந்த விளைபொருட்களில் ஒன்று. 15 ஆம் நூற்றாண்டில் காஷ்மீர் மன்னராக இருந்த சுல்தான் ஜெய்ன் -உல்- அபிதீன் காலத்தில் நத்ருவின் புகழ் இந்தியா முழுவதும் பரவியது. தால் ஏரியைச் சுற்றி குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து வந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக நத்ரு சாகுபடி செய்து வருகின்றனர். ஆயினும், தாமரைத் தண்டு சாகுபடி செய்வதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. பல ஆண்டுகளாக நத்ரு சாகுபடி செய்து வரும் அனுபவம் மிக்க தால் ஏரியின் மூத்த விவசாயிகளுடன்  அறுவடையின் போது துணைக்குச் சென்று கற்றுக் கொள்ள வேண்டிய வித்தை அது. 

ஏரிக்குள் தாமரைத் தண்டு அறுவடை
ஏரிக்குள் தாமரைத் தண்டு அறுவடை

நத்ரு சாகுபடி என்பது நாம் வயலில் காய்கறிகளை நட்டு அறுவடை செய்வதைப் போன்றது அல்ல. சிறு படகுகளில் ஏரிக்குள் பயணித்துக் கொண்டே ஏரியின் ஆழமான பகுதிகளில் கிளைத்துப் பரவியிருக்கும் தாமரைத் தண்டுகளை கண்டறிந்து அவற்றைப் பதமாக வெட்டி எடுக்க வேண்டும். அனுபவமற்ற புதியவர்களுக்கு இது ஆபத்தான பணியாகக் கருதப்படுகிறது. 

காஷ்மீரிகள், ஏரிகளைக் கனல்களாகப் பிரித்துக் கொள்கின்றனர்.  கனல் என்பது பிரிட்டிஷ் காலத்தில் இருந்த அடிப்படை நில அளவை முறைகளில் ஒன்று. ஒரு கனல் என்பது சரியாக 605 சதுர கெஜம் அல்லது 1⁄8 ஏக்கருக்கு சமம்; இது சுமார் 505.857 சதுர மீட்டருக்கு சமம்) ஒரு கனலில் 200 முதல் 250 தாமரைத் தண்டு கட்டுக்களை அறுவடை செய்ய முடியும் என்கிறார்கள். ஒரு கட்டு நத்ரு அல்லது தாமரைத் தண்டின் விலையானது ரூபாய் 250 முதல் 350 ரூபாய் வரை இருக்கலாம்.

தாமரைத் தண்டு கட்டுகள்..
தாமரைத் தண்டு கட்டுகள்..

தாமரைத் தண்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு வகைகள் காஷ்மீரின் பண்டிகைக் காலங்களுக்கு மட்டுமே உரித்தானவையாகக் கருதப்படுகின்றன. காரணம் அவற்றின் அதிக விலையே! காஷ்மீரில் தால் ஏரியைச் சுற்றி மட்டுமே அறுவடை செய்யப்பட்டாலும் கூட காஷ்மீர் முழுதுமே அனைத்து காய்கறிச் சந்தைகளிலும் தற்போது ‘நத்ரு’ எனப்படும் தாமரைத் தண்டு கிடைக்கும் சீசன் இது என்கிறார்கள்.

தாமரைத் தண்டில் விட்டமின் சி நிறைந்திருப்பதால் வைரஸ் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தாமரைத் தண்டில் இருக்கும் வேர்ப்பகுதியில் துத்தநாகம், மெக்னீசியம், தாமிரம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்திருப்பதால் மனித உடலில் ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அது உதவுகிறது.

எனவே காஷ்மீரிகள் மட்டுமல்ல மொத்த இந்தியர்களுக்குமே தற்போது தாமரைத் தண்டின் முக்கியத்துவம் தெரிய வந்து நாடு முழுவதுமே அதற்கான தேவை அதிகரித்துள்ளது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com