தலையணை மந்திரோபதேசம்!

இனிமேல் அத்திக்காயும், ஆலங்காயும் வாங்கி வந்தால் நான் மாட்டுக்குப் போட்டு விடுவேன். மாடு கூட அத்திக்காயை திங்குமோ திங்காதோ சந்தேகம். அதற்குள்ள அறிவு கூட உமக்கில்லை. நல்லது மலிவு என்று அத்திக்காயை வாங்
curtain lectures
curtain lectures

கணவனுக்கும், மனைவிக்குமான அன்றாடச் சண்டைகளில் நிச்சயம் இந்த காய்கறி பர்சேஸுக்கும் முக்கிய இடமுண்டு. ஒன்று மனைவியே நேராக கறிகாய் வாங்க முடிந்து விட்டால் சச்சரவுகளுக்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை மனைவிக்கு கறிகாய் வாங்கச் செல்ல நேரமின்றி அந்தப் பொறுப்பு கணவரிடத்தில் ஏதோ சில நாட்கள் ஒப்படைக்கப்படுகிறது என்று வையுங்கள். தீர்ந்தது கதை! கணவர் வாங்கி வந்த தக்காளி சொத்தை, கத்தரிக்காயில் புழு ஊர்கிறது. பப்பாளி அழுகல், கீரை வாடி வதங்கியது, வெங்காயத்தில் பூஞ்சை பிடித்து விட்டது. கேரட்டைப் பார் இப்படியா வெடித்துப் பிளந்த காய்களாகப் பார்த்து பார்த்து வாங்கி வருவது!

அடச்சே! இந்த ஆம்பிளைங்கள கடைக்கு அனுப்பினாலே இப்படித்தான், எல்லாம் அழுகலும், வாடலும், மட்கலுமாக வாங்கி வந்து சமையலறையை நிரப்பி விடுவார்கள். இவர்களை அனுப்புவானேன்? பிறகு புலம்புவானேன்?! 

- என்று சலித்துக் கொள்ளாத மனைவிகளே இல்லை.

இது இன்று நேற்றல்ல உலகத்தில் மனித நாகரீகம் தோன்றி கணவன், மனைவி பந்தங்கள் தோன்றிய காலத்திலிருந்தே தொடங்கி விட்ட பிரச்னை எனலாம். 

அதற்கொரு சான்று தான் கீழுள்ள சுவாரஸ்யமான பகிர்வு.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் ஆரம்பகால முக்கியப் படைப்பாளி பண்டித நடேச சாஸ்திரி. தலையணை மந்திரோபதேசம் என்ற இந்த படைப்பின் செய்நேர்த்தி நம்மை வியக்க வைக்கிறது. அடுத்தது சாஸ்திரியின் அற்புதமான நகைச்சுவைத்திறன். தினம்தோறும் கதாநாயகன் ராமபிரஸாத் இரவு படுக்கும் போது மனைவி அம்மணிபாயிடம் கேட்கும் புகார்க் காண்டத்தையே நூலாக்கியுள்ளார் ஆசிரியர். அதிலிருந்து ஒரு பகுதி.

ராமபிரஸாத் காய்கறி வாங்கினதற்காக மனைவி அம்மணிபாய் புகழ்தல்

இன்றைக்கு நீங்கள் வாங்கி வந்த வாதமொடக்கிக் கீரை வாய்க்கு நன்றாக இருந்ததா? உங்களுக்கு பித்து தான் பிடித்திருக்கிறது. ஒருவள் ஒருநாளைக்கு எத்தனை கீரைகள் சமையல் செய்வாள்! வாதமொடக்கி ஒரு கட்டு, அகத்திக்கீரை இரண்டு முடிப்பு. சேமைக்கீரை ஒரு கூடை, எல்லாம் ஒரே அடியாய் வாங்கி வந்தீர்கள். வாடிப் போகாதா, என்று கேட்டால் வாய் திறக்கவில்லை. இன்று துவாதசியில்லையே. அகத்தி ஏன் என்றால், பூவும் பிஞ்சுமாக இருந்தது, ஆசையாயிருந்தது என்றீர்கள். மூன்றாங்கீரை என்னத்திற்கு என்றால் உடம்புக்கு நல்லது என்று பல்லிளிக்கிறீர்கள். நாளைக்கு நமது கொல்லையில் முளைத்திருக்கும் அருகம்புல்லை அறுத்து அதை உப்புப்போட்டு சுண்டி இலையில் போட்டால் அதுவும் ஒரு ருசி தான். தினந்தோறும் கீரை தின்றால் குழந்தைகளுக்கு வயிற்றில் கிருமி உண்டாகாதா? அது போகட்டும்.

கீரையில்  தான் மூன்று விதம். எத்தனைவிதம் கறி வாங்கி வந்தீர்கள். கொத்தவரை ஒரு தூக்கு; மூக்குத்திக்காய் கால்கூடை; அத்திக்காய் இரண்டு தூக்கு. சுண்டைக்காய் கால்கூடை. பயத்தங்காய் பத்துக்கட்டு, கீரைத்தண்டு, வாழைத்தண்டு, இவ்வளவும் வாங்கிவந்தால் எதை முன்னால் பண்ணுகிறது? உங்களுக்கு என்று கறிகள் அகப்படுகின்றனவே. இவ்வளவு காய்கறிகள் வாங்கி வருவதை விட பஞ்சு பறக்கிறாஉ வாழைக்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், புடலம்பிஞ்சு இவைகள் வாங்கி வரக்கூடாதா? கீரையும் வாங்கி கீரைத்தண்டு வாங்கி வரப்பட்ட புத்திமான்களை நான் கண்டதே இல்லை!

“நான் முளைக்கீரை வாங்கவில்லையடி!”

காலமே எழுந்திருந்து அது ஒரு கூடை வாங்கி வந்து வேறு காரியம் பாருங்கள். இனிமேல் அத்திக்காயும், ஆலங்காயும் வாங்கி வந்தால் நான் மாட்டுக்குப் போட்டு விடுவேன். மாடு கூட அத்திக்காயை திங்குமோ திங்காதோ சந்தேகம். அதற்குள்ள அறிவு கூட உமக்கில்லை. நல்லது மலிவு என்று அத்திக்காயை வாங்கி வந்தீர்களா? மலிவு மலிவு தான். அதை உரலில் போட்டு நான்கு நாழிகை இரண்டு கைகளும் விட்டுப் போக இடிக்க வேண்டுமே. அது யாராலாகும்? அப்படியே தான் இடித்து எடுத்துவிட்டால் அதை வேகவிட சரியாய் ஒரு சாமம் செல்லும். அதன் தலையில் ஒருபடி எண்ணெய் ஊற்ற வேண்டும். ஊற்றினாலும் சக்கை சக்கையாக இருக்கும். இலுப்பைக் கட்டி போலிருக்குமே ஒழிய கறியாக லட்சணமாக இருக்கமாட்டாது. அத்துடனில்லை, அதற்கு இரண்டு தேங்காயாவது அரைப்படை பருப்பாவது கலக்க வேண்டும். இவ்வளவு சிங்காரமும் பண்ணினால் ஒரு அத்திக்காய் கறி பண்ணி முடியும். லாபம்! வெகு லாபமாயிற்றே! எல்லா விஷயத்திலும் லாபத்தை உத்தேசித்து செலவு நடத்தித்தானே இந்த குடும்பம் இவ்வளவு ஷேமத்திற்கு வந்திருக்கிறது! வெட்கக்கேட்டை வாய்விட வேண்டாம்! நாலை முதல் ஒரே தீர்மானம்! ஈரை என்பது இனி என் உத்தரவில்லாமல் வாங்கக்கூடாது; வாங்கி வந்தீர்களோ, அப்ப்படியே வாசலில் கொட்டி விடுவேன்!

“நல்லது”

அத்திக்காய் வேண்டவே வேண்டாம். கொத்தவரை வேண்டவே வேண்டாம். சுண்டை, மூக்குத்தி -இவைகள் யாருக்குப் பிடிக்கும்? அவைகளும் வேண்டாம். நல்லதாய் இரண்டொரு காய்கறி வாங்கி வந்தால் போதும். வாடி வதங்கி குப்பையில் போவதில் என்ன பிரயோஜனம்!

“அப்படியே” 

“நல்லது, அப்படியே” என்று வெகு யோக்கியர்கள் போல் சொல்லிவிட்டு உமது மனப்போக்குப்படி எல்லாம் வாங்கி வந்து கொண்டிரும். என் பேச்சை லட்சியம் பண்ணாதேயும், என்ன பதிலில்லை!

எப்படி பதில் வரும்? ராமபிரஸாத் ஏற்கனவே தூங்கி விட்டான்.

நன்றி: தினமணி தீபாவாளி மலர் 2005

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com