‘நிம்மி’ சூப்பர் ஸ்டாரின் நெஞ்சுக்குள் பெய்திட்ட மாமழை! ஆம்.. கபாலி ஸ்டைலில் ஒரு கவிதைக் காதல் மொமெண்ட்! 

இப்போது என்னிடம் பணம் இருக்கிறது, புகழ் இருக்கிறது, பெயர் இருக்கிறது. ஆனால்,. அதையெல்லாம் நான் அடைவேன் என்று சொன்ன நிம்மியை மட்டும் என்னால் இன்று வரை காணவே முடியாமல் போய் விட்டது.
young rajini
young rajini

மலையாள நடிகர் தேவன் மனோரமா நியூஸ் யூ டியூப் சேனலுக்கு அளித்திருந்த நேர்காணல் ஒன்றில் சூப்பர் ஸ்டார் குறித்து நெகிழ்வான சில விஷயங்களைப் பகிர்ந்திருந்தார்.

தேவன் ‘பாட்ஷா’ திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார். அதை யாரும் மறந்திருக்க முடியாது.

அந்தப் படத்துக்கான படப்பிடிப்பு மும்பையில் நடந்து கொண்டிருந்த போது, நாங்கள் ‘ஹாலிடே இன்’னில் தங்கி இருந்தோம். அப்போது ரஜினி சாரின் அறையும், எனது அறையும் பக்கத்து பக்கத்தில் அமைந்து விட்டன. படப்பிடிப்பின் போது ஒருமுறை ரஜினி சார் என்னிடம், தேவன்.. இரவு உணவுக்கு என் அறைக்கு வாருங்கள், சேர்ந்து சாப்பிடலாம் என்று அழைத்தார்.

நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பலர் சும்மா முகமனுக்காக இப்படித்தான் அழைப்பார்கள், ஆனால், பிறகு மறந்து விடுவார்கள். அதைப்போலத்தான் இவரும் அழைக்கிறார் என்று நினைத்துக் கொண்டு மாலையில் ஷூட்டிங் முடிந்ததும் விஜயகுமார் சாருடன் இணைந்து ஷாப்பிங் சென்று விட்டேன். பிறகு இரவு 10 மணிக்கு நாங்கள் இருவரும் ஹோட்டலுக்குத் திரும்பினோம். அறைச் சாவி வாங்க ஹோட்டல் ரிசப்ஷனுக்குச் சென்றால் அங்கே ஒரு கத்தை காகிதக் குறிப்புகளைக் கொடுத்தார் ஹோட்டல் பணியாளர். இதென்னடா என்று பார்த்தால், அதில் 80.30 க்கு ஒருமுறை 8.45 க்கு ஒருமுறை 9 மணிக்கு ஒருமுறை என்று 10 மணி வரையிலும் 1/4 மணி நேரத்துக்கு ஒருமுறை ரஜினி என்னை அழைக்க ஃபோனில் தேடி இருக்கிறார் என்ற விவரம் இருந்தது. எனக்கு ஒரே ஆச்சர்யம். இதை விஜயகுமார் சாரிடம் சொன்ன போது, ஐயோ.. போய்யா, அவர் உனக்காக காத்துக்கிட்டு இருக்கார் போல, சீக்கிரமா போ என்று அனுப்பினார். ஆச்சர்யப்பட்ட நான்  உடனடியாக என் அறையில் எனது உடைமைகளை வைத்து விட்டு ரஜினி சாரின் அறைக்கு ஓடினேன். அங்கே போய் கதவைத் தட்டினால் நல்ல அழகான வெள்ளை உடையில் நெற்றியில் திருநீற்றுக் கீற்றுடன் ரஜினி கதவைத் திறந்தார்.

நான், தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டேன்.

அவர், அடடா, அதெல்லாம் பரவாயில்லை, உள்ளே வாருங்கள் என்று வரவேற்றார்.

அறைக்குள் ஒரு டேபிள் அதைச்சுற்றி நாற்காலிகள் டேபிள் மேலே ஒரு பெரிய பாட்டில், கண்ணாடி கிளாஸ்கள் எல்லாம் இருந்தது.

அதைப்பார்த்ததும் நான் என்னுடன் விஜயகுமார் சாரும் ஷாப்பிங் வந்திருந்தார் என்று சொன்னேன். உடனே ரஜினி, அவரையும் கூப்பிடு என்று பணித்தார்.

பிறகு அந்த இரவில் நான், ரஜினி சார், விஜயகுமார் சார், ஜனகராஜ் என்றொரு நடிகர் இருந்தார், அவர் நான்கு பேரும் சேர்ந்து பேசிக் கொண்டே எங்களது தாகசாந்தியைத் தொடங்கினோம்.

அன்று நிறையப் பேசினோம்.. பேச்சு எங்கெங்கோ சென்றது.. ஒரு 12 மணியிருக்கும் எங்களது பேச்சு காதலில் வந்து நிலைகொண்டது. அப்போது ரஜினி சார் கேட்டார்;

‘தேவன்... உங்களுக்கு ஃபர்ஸ்ட் லவ் இருந்ததா?’ என்றார்...

நான் உடனே... ‘யாருக்குத்தான் இருக்காது, ஆமாம் சார் இருந்தது’ என்றேன். 

‘அப்படியா? நிஜமாகவா?’ என்றார்.

நானும், ‘ஆமாம் சார், யாராவது அதெல்லாம் இல்லை என்று சொன்னால், அது பொய், எல்லோருடைய வாழ்க்கையிலும் முதல் காதலென்ற ஒன்று நிச்சயமாக இருக்கும்’ என்றேன்.

அப்படின்னா, உங்க காதல் கதையை எனக்குச் சொல்லுங்கள் என்றார்..

எனக்கு இவர் எதற்கு என் காதல் கதையைப் பற்றியெல்லாம் கேட்கிறார் என்று தோன்றினாலும்... என் கதையை அவரிடம் சொல்லத் தொடங்கினேன்.

என் முதல் காதல் என்பது மிக பயங்கரமானதொரு அனுபவம். துன்பத்தில் முடிந்த அந்தக் காதலைப்பற்றி நான் சொல்லச் சொல்ல ரஜினி சாரின் முகம் விசனப்பட்டு மாறிக் கொண்டே இருந்தது. நான் சொல்லி முடிக்கும் போது அவர் கண்கலங்கி அழத்தொடங்கி இருந்தார். எனக்கோ, இதென்னடா இது! ஈயாள் என் கதையைக் கேட்டு இப்படி அழுகிறாரே! என்று சங்கடமாக இருந்தது. 

சொல்லி முடித்து விட்டு நான் ரஜினி சாரிடம் கேட்டேன். சார், ஏன் அழுகிறீர்கள்? உங்கள் வாழ்க்கையிலும் முதல் காதல் இருந்ததா? என்று கேட்டேன்.

நெகிழ்ந்து போயிருந்த ரஜினி, ஆமாம், என்றார்.

அப்போ, உங்க காதல் கதையையும் எனக்குச் சொல்லுங்களேன் சார் என்று நான் அவரைக் கேட்டேன்.

ரஜினி சொல்லத் தொடங்கினார்...

பெங்களூரு, சிவாஜி நகரில் ரஜினி கண்டக்டராக இருந்த போது, ஒருநாள் திடீரென ஒரு இளம்பெண் இவரது பேருந்தில் முன்புறமாக ஏறி வந்திருக்கிறார். பேருந்தில் பின்புறப் படிகளில் தான் ஏற வேண்டும். முன்புற படி வழியே இறங்க வேண்டும் என்று விதி இருந்தது. அதனால் ரஜினி, என்னம்மா இது? இப்படி பண்றியே, பின்னால வந்து ஏறும்மா என்று தடுக்க, அந்தப் பெண்ணோ, ரஜினியின் கைகளைத் தட்டி விட்டுவிட்டு அசால்ட்டாகச் சென்று இருக்கை தேடி அமர்ந்து விட்டார். ரஜினிக்கோ, ஹே.. இதென்ன, இப்படியொரு பெண்ணா?! என்று அந்தப் பெண்ணின் மீது கொஞ்சம் சுவாரஸ்யமாகி விட்டது. அந்தப் பெண்ணின் பெயர் நிர்மலா, ரஜினி அவரை நிம்மி என்று குறிப்பிட்டார். பிறகு அந்தப் பெண் தினமும் ரஜினி இருந்த பேருந்திலேயே கல்லூரி செல்லத் தொடங்கி இருக்கிறார். அவரொரு மருத்துவ மாணவி. அப்போது எம் பி பி எஸ் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். இவர்களது இந்தச் சந்திப்பு பிறகு மெல்ல மெல்ல காதலாக மாறத் தொடங்கிய வேளையில் ஒருமுறை ரஜினி வசித்த காலனிப்பகுதியில் நாடகம் போட்டிருக்கிறார்கள். அதில் ரஜினியும் நடித்திருக்கிறார். அதனால் தனது நடிப்பை காண நிம்மியையும் ரஜினி அழைத்திருக்கிறார். அந்தப் பெண்ணும் வந்தார். நாடகத்தில் ரஜினியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணும் பாராட்டி விட்டுச் சென்று விட்டார். பிறகு சில நாட்களின் பின் ரஜினிக்கு அடையாறு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயில அட்மிஷன் கார்டு வந்திருக்கிறது. அதைக் கணு ஆச்சர்யப்பட்டுப் போன ரஜினி, அதைப்பற்றி அந்தப் பெண் நிம்மியிடம் பகிர்ந்திருக்கிறார்.

நான் முயற்சிக்கவே இல்லை. ஆனால், யாரோ என் பெயரில் அப்ளிகேஷன் போட்டிருக்கிறார்கள். எனக்கு அட்மிஷன் கிடைத்திருக்கிறது. ஆனாலும் என்ன செய்ய? என்னிடம் நயாப்பைசா இல்லை, அங்கே சென்றால் தானே சேர்ந்து படிப்பதைப் பற்றி யோசிக்க என்று வருத்தப்பட்டிருக்கிறார். அதற்கு நிம்மி. உன் பெயரில் நான் தான் அங்கே அப்ளிகேஷன் போட்டேன். அதற்குத்தான் இப்போது அழைப்பு வந்திருக்கிறது. நீ அங்கே போய் படி. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. என்று கூறி ரஜினிக்கு 500 ரூபாய் பணத்தையும் (500 ரூபாய் என்பது அந்தக்காலத்தில் பெரிய பணம்) கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

அப்போது நிம்மி சொன்ன ஒரு வார்த்தை, உனக்கு சினிமாவில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். உன்னால் முடியும். கூடிய விரைவில் நகரத்தின் சுவர்களில் எல்லாம் உன் போஸ்டர் ஒட்டப்பட வேண்டும். நீ பெரிய நடிகனாக வேண்டும் என்று தன் விருப்பத்தைக் கூறி இருக்கிறார்.

சரி என்று நிம்மியிடம் பணம் வாங்கிக் கொண்டு சென்னைக்கு வண்டியேறி இருக்கிறார் ரஜினி.

இங்கே வந்து திரைப்படக்கல்லூரியில் அட்மிஷன் போட்டு விட்டு வார விடுமுறையில் மீண்டும் நிம்மியைக் காண பெங்களூருக்குச் சென்றார் ரஜினி.

ஆனால், அங்கே நிம்மி வழக்கமாக பேருந்தில் ஏறும் நிறுத்தத்தில் அவளைக் காணோம்.

அவருடன் பயிலும் மாணவிகளிடம் கேட்டதில், அவள் மூன்று நாட்களாகவே கல்லூரிக்கு வரவில்லை என்று தெரிந்தது.

சரி, வீட்டுக்கே சென்று பார்த்து விடலாம் என்று நண்பர்கள் உதவியுடன் விசாரித்து அவளது வீட்டுக்குச் சென்று பார்த்தால் அங்கே  பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.

ரஜினிக்கு ஆற்றாமையாகப் போய்விட்டது. அங்கு விசாரித்ததில்.. அவளது குடும்பம் மூன்று நாட்களுக்கு முன் வீட்டைக் காலி செய்து கொண்டு போனது தெரிய வந்தது.

அன்று தொலைத்த நிம்மியை, ரஜினி இன்று வரையிலும் தேடிக் கொண்டிருக்கிறார்.

ரஜினிக்கு என்ன வேதனை என்றால், அவள் என்னிடம் சொன்னதை எல்லாம் நான் இன்று நிறைவேற்றி விட்டேன். இப்போது என்னிடம் பணம் இருக்கிறது, புகழ் இருக்கிறது, பெயர் இருக்கிறது. ஆனால்,. அதையெல்லாம் நான் அடைவேன் என்று சொன்ன நிம்மியை மட்டும் என்னால் இன்று வரை காணவே முடியாமல் போய் விட்டது. அவள் நிச்சயமாக எங்கேயாவது இருந்து கொண்டு இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருப்பாள். அவளது மனசு என்ன மனசு?! என்று நான் வியந்து கொண்டிருக்கிறேன். இன்று இந்தியாவில் என்னைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. ஆனால், நிம்மி என்னை ஒருமுறை கூட வந்து பார்க்க முயற்சிக்கவே இல்லையே! என்று நினைத்து நினைத்து நான் அழாத நாள் இல்லை.. 

- சொல்லி விட்டு கதறிக் கதறி அழத் தொடங்கி விட்டார் ரஜினி சார்.

அந்த மாதிரியான ஒரு அழுகையை நான் அவரிடம் எதிர்பார்க்கவே இல்லை.

அப்படியொரு அழுகை...

அந்த நிமிடத்தில்... ரஜினி சார் மாதிரியான வெற்றிகரமான மனிதர் இப்படி அழுதார் என்றால் வாழ்க்கையின் வெற்றிகளுக்கும், மனதின் சந்தோஷங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று தானே அர்த்தம் என்று அப்போது எனக்குத் தோன்றியது.

அழுது சமாதானமான பிறகு ரஜினி சார் சொன்னது...

'இன்றும்  நான் இமயமலைக்குச் சென்றாலும் சரி, அமெரிக்காவுக்குச் சென்றாலும் சரி, கோடம்பாக்கத்தில் ஒரு தெருவில் சென்று கொண்டிருந்தாலும், மெட்ராஸ், பெங்களூரு என்று எங்கு சென்றாலும் சரி, அங்கிருக்கும் தெருக்களில் என் கண்கள் தேடிக் கொண்டிருப்பது நிம்மியைத்தான், அவளை எப்படியாவது ஒருமுறை பார்த்து விட மாட்டேனா? என்று தான் என் கண்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன. என்றார் மிகுந்த ஏக்கத்துடன்.

நான்; ‘ரஜினி சார், நிச்சயமாக ஒருநாள் நீங்கள் அவளைக் காண்பீர்கள்’ என்றேன்.

சந்தோஷத்தில் அவர் என் கைகளைப் பற்றிக் கொண்டு பள்ளிச் சிறுவனைப் போல குதூகலம் கலந்த நம்பிக்கையுடன், ‘தேவன் சார், அப்படியா?!’ என்றார்.

நான்  ‘டெஃபனட்லி சார், நான் சொல்றேன், ஒருநாளைக்கு வரும் ’ என்றேன்.

என் பதிலைக் கேட்டதும், அவர் ’ஹப்பா’ என்று பயங்கர சந்தோஷமாகி விட்டார்.

மலையாளம் புரியுமென்றால் தேவனின் நேர்காணலை விடியோ வடிவில் காண இங்கே செல்லுங்கள்.

நன்றி: மனோரமா நியூஸ் யூ டியூப் சேனல்.

Image courtesy: Instafeed.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com