சுசித்ரா.. தேவையா சுசி இதெல்லாம்?!

சுசித்ரா, அன்றைய முதல்வர் ஜெயலலிதா தன்னை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டி விருந்து கொடுத்த அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார். விருந்து எதற்காக என்றால்‘குறுமிளகின் பயணம்’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்கு
Suchitra RJ
Suchitra RJ

சுசித்ராவை எப்போதிருந்து தெரியும் என்று யோசித்துப் பார்த்தேன். ஒருமுறை பிரபல வாரப்பத்திரிகை ஒன்றில் சுசித்ராவின் நேர்காணல் வெளியாகியிருந்தது. அதில் சுசித்ரா, அன்றைய முதல்வர் ஜெயலலிதா தன்னை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டி விருந்து கொடுத்த அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார். விருந்து எதற்காக என்றால்‘குறுமிளகின் பயணம்’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்கு 2003 - 2004 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் சிறுகதைப் போட்டியில் முதல்பரிசு கிடைத்திருந்தது. சுசித்ராவின் இந்த திறமையைப் பாராட்டவே ஜெயலலிதா அவரை வீட்டுக்கு அழைத்திருந்தார். அவருடனான அந்த சந்திப்பைத் தன்னால் வாழ்நாள் முழுமைக்குமாக மறக்கவே முடியாது என்று சுசித்ரா அந்த நேர்காணலில் கூறியிருந்தார். 

அடுத்து சுசித்ராவைப் பற்றி சற்று அதிகமாகத் தெரிந்து கொள்ள நேர்ந்தது, அவர் விஜய் தொலைக்காட்சியில் நடத்திய ‘காஃபி வித் சுசி’ ரியாலிட்டி ஷோவின் போது. சுசி அந்த நிகழ்ச்சியை நடத்தும் போது அதில் சுசியின் விருந்தினர்களாகப் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் இயக்குனர் பாக்யராஜ் கலந்து கொண்ட ஒருநாளில் சுசியின் குரலை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். அவரது மனைவி பூர்ணிமா, சாருக்கு உங்க எஃப் எம் நிகழ்ச்சின்னா ரொம்ப பிடிக்கும். தவறாம கேட்பார் என்று கூறினார். இது சுசித்ராவுக்கான பாராட்டு மட்டுமல்ல, அவருக்கான மரியாதையும் கூட. இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விருந்தினர்களை சில சமயங்களில் நிகழ்ச்சியின் காம்பியர்கள் தான் அதீதமாகப் புகழ வேண்டியதாயிருக்கும், ஆனால், சுசி அந்த ஷோவை நடத்தும் போது கலந்து கொண்ட விருந்தினர்களில் பலரும் சுசியின் குரலுக்கு ரசிகர்களாக இருந்தார்கள். காஃபி வித் சுசி யை நடத்தும் முன்பே சுசித்ரா ரேடியோ மிர்ச்சி வாயிலாக பிரபல ஆர் ஜே வாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேடியோ மிர்ச்சியில் சுசி நடத்திய ‘ஹலோ சென்னை’ க்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆர் ஜே சுசி.. சுச்சி.. சுச்சி என்று இளம் எஃப் எம் ரசிக உள்ளங்களை உருக வைத்தார். இத்தனை அருமையான குரலுக்குச் சொந்தமானவருக்கு பெரிய திரையில் வாய்ப்பு வராமலிருக்குமா? வந்தது... அடடா! எத்தனை எத்தனை ஸ்டைலிஷ் குத்துப் பாடல்கள்? 

2003 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஜே ஜே’ திரைப்படத்தின் ‘மே மாதம் 98 ல் மேஜர் ஆனேனே’ முதல் அதே விதமாக வெஸ்டர்ன் குத்துப்பாட்டுகளை பல திரைப்படங்களில் பாடிக் கலக்கினார் சுசித்ரா.

சுசி பாடியதில் பெரும்பான்மையும் வெஸ்டர்ன் டைப் குத்துப் பாடல்கள் தான் அவரது குரலுக்கு மெலடி பாடல்களை எந்த இயக்குனரும் ஏன் முயன்று பார்க்கவில்லை எனத் தெரியவில்லை. ஒருவேளை இளைஞர்களுக்குப் பிடித்த உற்சாகம் கொப்பளிக்கும் குரலாக இருந்ததால் இவர் மெலடிக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று நினைத்து விட்டார்களோ?!

ஆனாலும்.. சுசியின் குரலில் 2004 ல் வெளிவந்த மன்மதன் திரைப்படத்தின் ‘என் ஆசை மைதிலியே’  காக்க காக்க திரைப்படத்து ‘உயிரின், உயிரே’ போன்ற பாடல்களை வை மறக்க முடியுமா?

ஆம், அப்போது சுசியின் குரலுக்கு தங்கள் மனதைப் பறிகொடுக்காதவரகளே இல்லை எனும்படியாக சுசி தன் கனமான பட்டுக்குரலில் தமிழ்நாடு மட்டுமல்ல மொத்த தென்னிந்தியாவையுமே கட்டிப் போட்டிருந்தார்.

தொடர்ந்து திரைப்படங்களில் பாடிக்கொண்டே பிரபல நடிகைகளுக்கு பின்னணி குரலும் அளித்தார்.

திருட்டுப் பயலே திரைப்படத்தில் மாளவிகாவுக்கும், கந்தசாமியின் ஸ்ரேயாவுக்கும், மங்காத்தாவின் லஷ்மி ராய்க்கும், கோவாவில் பியாவுக்கும், நான் சிகப்பு மனிதனில் இனியாவுக்கும் பின்னணி பேசியிருந்தார் சுசி.

இப்படி சுசியைப் பொறுத்தவரை அவரது கேரியர் கிராஃப் ஆரோக்யமாகவே இருந்தது.

நடுவில் ‘அலைபாயுதே’ திரைப்படத்தில் அமெரிக்க மாப்பிள்ளையாக அறிமுகமானாரே நடிகர் கார்த்திக் குமார் அவருடன் திருமணம் ஆனாது சுசிக்கு. அன்றிலிருந்து வெறும் சுசியாக அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருந்தவர் பிறகு சுசித்ரா கார்த்திக் குமார் ஆனார். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. 

ஒருமுறை.. எந்த வார இதழ் என்று நினைவில்லை/ ஆனால், ஏதோ ஒரு சினிமா இதழில் சுசித்ராவைப் பற்றி கிசுகிசு போல செய்தித் துணுக்கு ஒன்று இடம்பெற்றிருந்தது.

‘பார்ன் வித் ச்ல்வர் ஸ்பூன்’ புகழ் பிரபல வாரிசு நடிகர் ஒருவருடன் இணைந்து லேட் நைட் பார்ட்டிகளில் பங்கெடுத்துக் கொள்கிறார். இதெல்லாம் அவருக்குத் தேவையா? அவர் தனது குரல் மூலமாக லைம்லைட்டில் இதுவரை அடைந்திருக்கும் பிரபல்யத்திற்கு இதெல்லாம் ஒத்து வருமா?! என்று நெருங்கிய நட்புகள் எச்சரித்த போதும், அதெல்லாம் எப்படிப்பட்ட நட்பையும் ஒரு லிமிட்டில் வைத்துக் கொண்டு தன்னால் ஹேண்டில் செய்ய முடியும் என்று நட்புகளின் எச்சரிக்கையைப் சுசி அலட்சியப் படுத்தியதாகவும்... இந்த விபரீதப் பயணம் எங்கு சென்று முடியுமோ? என்றும் சுசியின் இன்றைய நிலைக்கு கட்டியம் கூறிச் சென்றது அந்த செய்தித் துணுக்கு.

அதற்குப் பிறகு தான் சுசியின் வாழ்வில் ஏழரைச் சனியின் ஆதிக்கம் தொடங்கியதென்றால் அது மிகையில்லை.

தொடர்ந்து சில ஆண்டுகளிலேயே சுசிலீக்ஸ் சர்ச்சை வெளியானது. காரணமாக மேலே குறிப்பிட்ட வாரிசு நடிகரின் பெயர் இடம்பெறவில்லை, அந்த வாரிசுக்குப் போட்டி நடிகராகக் கருதப்பட்ட மற்றொரு வாரிசு நடிகரின் பெயரும், இளம் இசையமைப்பாளர் ஒருவரது பெயரும் சுசிலீக்ஸில் அம்பலமேறியது. அப்போது சுசியின் சமூக ஊடகப்பக்கம் ஹேக்கர்களால் களவாடப்பட்டதாகவும் அதில் வெளியான செய்திகளுக்கெல்லாம் சுசி பொறுப்பில்லை என்றும் சுசியின் கணவர் கார்த்திக் குமார் தன் மனைவி சார்பாக விளக்கமளித்த பின் அந்த சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

சுசிலீக்ஸ் ஒரு அருமையான ஆர் ஜே வை முடக்கிப் போட்டது என்றால் மிகையில்லை.

தவறு யார் மீது என்று புரியாத நிலை. மிக அரிய திறன்கள் கொண்ட ஒரு இளம்பெண்.. ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு புத்திசாலி எனக் கொண்டாடப்பட்ட ஒரு இளம்பெண். தனது கேரியரின் உச்சத்தில் இருக்கும் போது வீணாக இப்படிப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி இருக்க வேண்டாம். ஆனால் சுசி வகையாக சிக்கிக் கொண்டு இந்தச் சுழலில் இருந்து எப்படி வெளிவருவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார். நடுவில் சில காலம் சுசியைப் பற்றி எந்த சர்ச்சைகளும் இல்லை.

சுசிலீக்ஸ் சர்ச்சை வெளிவந்த சமயத்தில் சுசிக்கு மனநலம் சரியில்லை. அவர் அதற்கான சிகிச்சையில் இருக்கிறார் என்றெல்லாம் கூட செய்திகள் வெளியாகின. அது நிஜமோ, வதந்தியோ தெரியவில்லை. ஆனாலும், தனது திறமைகளுக்காக மதிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்த ஒரு பெண்ணை இன்று நிலைமைக்கு ஆளாக்கியது யார்?

அவரது சஞ்சல மனதா?

இல்லை இந்த ஊடக வெளிச்சத்தின் மீதான பிரேமையும், பிரமையுமா?

அல்லது அவர் கொண்ட ஏடாகூட நட்புக்களுக்கான விலையா?

அதற்கான பதில் சுசிக்கு மட்டுமே தெரிந்திருக்க கூடும்.

எப்படியாயினும் சுசி இந்த சுழலில் இருந்து விடுபட்டு மீண்டும் பழைய சுசியாக ஆவதென்பது அவரது மனோதிடத்தில் தான் இருக்கிறது.

தேவையா சுசி இதெல்லாம்? என்று அவரது நெருங்கிய நட்புகள் எச்சரித்த போதே அவர்களது கருத்துக்கு சுசி காது கொடுத்திருந்தால் இன்று இந்த நிலைக்கு ஆளாகாமல் இருந்திருப்பாரோ?! என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இதோ இப்போது கூட சுசித்ரா பற்றிய சர்ச்சை ஒன்று ஊடகங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சுசித்ராவைக் காணவில்லை என அவரது தங்கை சுனிதா கடந்த 11 ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகத் தகவல் வெளியானது. அவரது புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறை தேடுதல் வேட்டையில் இறங்கியதில் அடையாறில் இருக்கும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சுசித்ரா இருப்பது தெரிய வந்தது. சுசியிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் , தான் காணாமல் போகவில்லை என்றும், ஓய்வெடுப்பதற்காகவே அங்கு சென்று தங்கியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com