வெங்காய விலையேற்றம் அச்சுறுத்துகிறதா? அதனாலென்ன வெங்காயம் இல்லாமலும் சமைக்கலாம்.. பிடிங்க டிப்ஸ்!

வெங்காயம் சேர்க்காத காரணத்தால் இந்த உணவு ஐட்டங்களில் சுவை குன்றிவிடும் என்று நினைக்காதீர்கள். இப்போது சமையலில் நாம் தவிர்க்கப்போவது வெங்காயம் மற்றும் பூண்டை மட்டுமே.. அவை தவிர எத்தனை விதமான
no onion recipe tips
no onion recipe tips

வெங்காயம் விலை ஏறிக்கொண்டே செல்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் மிக முக்கியமானது மகாராஷ்டிரத்திலும், கர்நாடகத்திலும் பருவமழை கொட்டு கொட்டென்று கொட்டித் தீர்த்ததில் அந்த மாநிலங்களில் வெங்காய சாகுபடி குறைந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு வெங்காய வரத்து குறைந்தது. இதில்.. முன்னரே சேகரித்த வெங்காயச் சுமைகளை சில பேராசை மிக்க வணிகர்கள் பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய இதோ வெங்காயம் விலை ஏற்றத்தின் உச்சத்தில்  நிற்கிறது. சரி அதைவிடுங்கள், வெங்காயத்திற்கு அரசுகளைக் கவிழ்க்கும் அளவுக்கு சக்தி இருக்கையில் இது எம்மாத்திரம்?!

இந்தியாவில் வெங்காய விலை இப்படி  திடீர் திடீரென விஸ்வரூபம் எடுப்பது புதிதொன்றும் இல்லை.

  • தமிழ்நாட்டில் இன்றையதேதிக்கு பெரிய வெங்காயம் கிலோ ரூ 96 க்கும்,
  • சின்ன வெங்காயம் கிலோ ரூ 120 க்கும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

அதிலும் இப்போது மழைக்காலமும் இல்லாமல் வெயில் காலமுமில்லாமல் சீதோஷ்ணம் ஒரு மார்க்கமாக இருப்பதால் எப்போது மழை வரும்? எப்போது குளிர் நடுக்கும் என்று தெரியாத நிலை. இதனால் இல்லத்தரசிகள் அதிகமாக வெங்காயம் வாங்கி சேமிப்பில் வைத்துக் கொள்ளவும் முடியாத நிலை. கிராமங்கள் என்றால் இடவசதி இருக்கும். விலை குறைவான காலகட்டங்களில் கிலோக்கணக்கில் வெங்காயம் வாங்கி வைத்துக் கொண்டு அவற்றை வடகமிட்டுக் காயவைத்து சம்புடங்களில் எடுத்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது தாளிதத்துக்கும், பருப்பு, சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளவும் பயன்படுத்துவார்கள். ஆனால், இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் வெங்காயத்தை வீடுகளில் சேமித்து வைத்துக் கொள்ளக்கூட முடியாத நிலை. அப்படியே வடகம் செய்து வைத்துக் கொண்டாலும் தினமும் அதை வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும். மறந்தோமென்றால் அதோகதி... பூஞ்சை படிந்து மொத்த வடகமும் கெட்டுப் போகும்.

வெங்காய விலை வேறு உச்சத்தில் இருக்கும் இந்த நிலையில் இதெல்லாம் தேவையா?

வெங்காய விலையேற்றத்தில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா? என்று கதறுவோருக்கு சில எளிய குறிப்புகளை இங்கே வழங்கவிருக்கிறோம்.

ஏனென்றால், வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை நம் உணவில் இருந்து நாமே மனமுவந்து விலக்க விரும்பும் நேரங்களும் நம்முடைய வாழ்வில் இருக்கத்தான் செய்கின்றன.

  • சிலருக்கு மதம் சார்ந்த காரணங்கள் இருக்கலாம். அவர்கள் தங்களது சடங்கு சம்பிரதாயங்களை முறையாகப் பின்பற்ற குறிப்பிட்ட நாட்களில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கவே கூடாது எனப் பிடிவாதமாக இருந்தாக வேண்டும்.
  • தவிர, ஆயுர்வேத அடிப்படையிலான வாழ்க்கைமுறையைத் தேர்வு செய்தவர்களும் கூட வெங்காயம் மற்றும் பூண்டை விலக்கியாக வேண்டும் என்ற நிபந்தனைகள் உண்டு.
  • இவை தவிர, வெங்காயத்தை விலக்க மற்றுமொரு முக்கிய காரணமாக நாம் மேலே கண்ட  விஸ்வரூப விலையேற்றத்தையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

அப்படியான நிர்பந்தம் கொண்டவர்களுக்கு சில எளிமையான வெங்காயமில்லா சமையல் ரெசிப்பிகளை இங்கே பகிர்கிறோம்.

வெங்காயம் சேர்க்காத காரணத்தால் இந்த உணவு ஐட்டங்களில் சுவை குன்றிவிடும் என்று நினைக்காதீர்கள். இப்போது சமையலில் நாம் தவிர்க்கப்போவது வெங்காயம் மற்றும் பூண்டை மட்டுமே.. அவை தவிர எத்தனை விதமான வாசனையூட்டிகள் இருக்கின்றன நமது இந்தியச் சமையல் அறைகளில்.. வாருங்கள் அவற்றைப் பயன்படுத்தி சில சுவையான உணவு வகைகளைச் சமைப்பது எப்படி என்று பார்க்கலாம். வெங்காயம் இல்லாமலும் சுவையான உணவு வகைகளைத் தயாரிக்க முடியும் என்பது தான் இதன் சவாலே!

1. வேர்க்கடலை-எள்மசாலா அடைத்த ஸ்டஃப்டு குட்டிக் கத்தரிக்காய் ரெசிப்பி!

2. லாக்கி ஆலூ... சுரைக்காய் மற்றும் உருளைக்கிழங்கு வெட்டிப் போட்ட சூப்

3. கட்டா மிட்டா பபீட்டா: இனிப்பும் புளிப்புமான பப்பாளி பொரியல்

4. கீரை உருளைக் கிழங்கு கறி

5. மசித்த கடலைப்பருப்பில் பொரித்த திராட்சைப் பழங்களைச் சேர்த்துச் செய்யும் ஒருவகை டிஷ்!

6. வெங்காயம் பூண்டு சேர்க்காத சோலே மசாலா 

7.ஆலூ போஸ்டோ.. உருளைக்கிழங்கு  கடுகுக் கறி

8. சிவப்பு பூசணிக்கறி

9. மசித்த கடலைப்பருப்பு மலபார் வெள்ளரிக்கூட்டு

10. இஞ்சி, மிளகு, தயிர் சேர்த்து வேகவைத்த பிஞ்சு வெண்டைக்காய்க் கறி    

அடேயப்பா! இத்தனை ரெசிப்பிகள் இருக்கின்றனவே வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட. பிறகென்ன கவலை?

அதுசரி, இதேது... எல்லாம் ஒரே வட இந்திய ரெசிப்பிக்களாக இருக்கிறதே என்று கடுப்பாகாதீர்கள் மாதுசிரோமணிகளே! இங்கே இருக்கும் எல்லா ரெசிப்பிக்களும் நம்முடைய தமிழ்நாட்டு ரெசிப்பிகளும் தான். ஆனால், அவற்றின் தமிழ்ப் பெயரைச் சொன்னால் நிச்சயம் அது உங்களுக்கே புரியுமோ என்னவோ? அதனால் தான் இன்றைக்கு ரெஸ்டாரெண்டுகளில் அவற்றிற்கு என்ன பெயரோ அந்தப் பெயரில் இங்கே குறிப்பிட்டிருக்கிறோம். தேவையான எல்லா பொருட்களும் நம்மூர் சூப்பர் மார்கெட்டில் மட்டுமல்ல கோயம்பேடு காய்கறி மார்கெட்டிலும் கிடைக்கும்.

வெங்காயம், பூண்டு தவிர்த்து செய்யக்கூடிய இந்த ரெசிப்பிக்களை தினமொன்றாகச் செய்து அசத்துங்கள்.

அடப்போங்க! வெங்காயமும், பூண்டும் உரித்துப் போட்டு எண்ணெயில் வேக விட்டால் ஒரு மணம் வருமே! அதற்கு ஈடாகுமா? வெங்காயம் இல்லாத சமையல்? என்று அலுத்துக் கொள்வோர் கவனத்துக்கு.. வெங்காயம் இல்லாவிட்டால் ஒன்றும் நஷ்டமாகி விடாது. மனிதன் வெங்காயம் கண்டிபிடிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வாசனைக்காக சீரகம், கடுகு, வெந்தயம், கொத்துமல்லி விதை, எனப் பலவகையான அஞ்சறைப்பெட்டி சமாச்சாரங்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறான். அவற்றைக் கொண்டு இன்றும் கூட நம்மால் வெங்காயம் இல்லாத சுவையான பண்டங்களைத் தயாரிக்க முடியும் என்று நம்புங்கள்.

வேறு என்ன தான் செய்வது? இன்று பாருங்கள் சின்ன வெங்காயம் கிலோ ரூ 120, பெரிய வெங்காயம் கிலோ ரூ 96. இப்படிச் சென்று கொண்டிருந்தால் அப்புறம் வெங்காயம் இல்லாத சமையலை கற்றுக் கொள்வதைத் தவிர விலைவாசியைச் சமாளிக்க வேறு என்ன வழியாம்?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com