அந்தோ பரிதாபம்! செல்ல நாய் நக்கியதால் எஜமானர் மரணம்!

செல்லநாயுடன் விளையாடிக் கொண்டிருந்த 63 வயது நபர் ஒருவர் திடீரென வளர்ப்பு நாய் செல்லமாக அவரை நக்கி விளையாடிய சில நிமிடங்களில் தீவிர உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளானார். அவரது உடலில் அரியவகை நோய்த்தொற்று
Pet Dog Licking Man
Pet Dog Licking Man

செல்லநாயுடன் விளையாடிக் கொண்டிருந்த 63 வயது நபர் ஒருவர் திடீரென வளர்ப்பு நாய் செல்லமாக அவரை நக்கி விளையாடிய சில நிமிடங்களில் தீவிர உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளானார். அவரது உடலில் அரியவகை நோய்த்தொற்று ஏற்பட்டு கொப்புளங்களும், விசித்திரமான காயங்களும் தோன்றின. இதையடுத்து அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சில வாரங்களில் அவர் மரணத்தைத் தழுவினார்.

அவருக்கு ஏற்பட்டது ஆபத்தான பாக்டீரியா தொற்று என மருத்துவர்கள் தெரிவித்தனர். முறையாகப் பராமரிக்கப்படும் வளர்ப்பு நாய்கள் மூலமாக மனிதர்களுக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படுவது அரிதானது என்றாலும் கூட வளர்ப்பு நாய்களுடன் விளையாடும் போது எஜமானர்கள் தங்களது உடலில் திறந்த நிலையில் காயங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களின் உமிழ்நீரில் கலந்திருக்கும் கேப்னோசைட்டோபாகா எனும் பாக்டீரியாக்கள் மனிதர்களின் திறந்திருக்கும் காயங்களின் வழியே ஊடுருவி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு மோசமான தன்மை கொண்டவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை பாக்டீரியாக்கள் மனிதர்களின் உடலில் ஊடுருவினால் மொத்த நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் காலி செய்து தீவிரமான உடல் நலக் கோளாறுகளுக்கு வழி வகுக்கக் கூடிய சக்தி கொண்டவையாகக் கருதப்படுகின்றன. எனவே, நீங்கள் ஒரு வளர்ப்பு நாய் பிரியர் என்றால், உங்கள் நாய் அல்லது பூனையுடன் விளையாடும் முன் உங்கள் உடலில் திறந்த நிலையில் காயங்கள் ஏதும் உள்ளதா? என்பதைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

மேற்கண்ட சம்பவத்தில் பலியான அந்த 63 வயது நபர் முதலில் நோய்க்கூறுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய முடியாமலே தான் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அவருக்கு வந்த மர்ம நோயைக் கண்டறிய மருத்துவர்கள் போராட வேண்டியிருந்தது. இறுதியில் அவர்களுக்குத் தெரியவந்தது நோய்த்தொற்றுக்குக் காரணமானவர் வேறு யாருமல்ல, அவருடைய செல்ல நாயே தான் என.

தனது அன்பான செல்ல நாயுடன் விளையாடிய சிறிது நேரத்திலேயே, காய்ச்சல் மற்றும் தசை வலிக்கான அறிகுறிகளை உணர்ந்ததாக அந்த நபர் தெரிவித்தார். சுவாசிப்பதில் சிரமம், முகத்தில் கொப்புளங்கள் மற்றும் அவரது உடலின் கீழ்ப்பாகத்தில் விசித்திரமான காயங்கள் போன்ற அறிகுறிகளையும் கண்ட போது  முதலுதவி சிகிச்சை பெறத் தாமதமாகி விட்டது. ஆம், அவரது நிலையானது நிதானமான சிகிச்சைக்கு உட்படும் நிலையில் இல்லை. அது மிக  விரைவில் மோசமடைந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும், அந்த நபருக்கு செப்டிக் அதிர்ச்சி ஏற்பட்டு அது மாரடைப்பில் முடிந்தது. தொடர்ந்து அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கத் தொடங்கின, அவருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டது.

அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நான்கு நாட்களின் பின்னரே மருத்துவர்கள் நோய்க்கான  காரணத்தைக் கண்டறிந்தனர். வீட்டு பூனைகள் மற்றும் நாய்களின் உமிழ்நீரில் இருக்கக்கூடிய பொதுவான ஒரு வகை பாக்டீரியாவால் தான் அவருக்கு இத்தகைய விசித்திர நோய்த்தாக்குதல் ஏற்பட்டிருக்கிறது என்பதை ஒருவழியாக மருத்துவர்கள் கண்டறிந்து அவருக்கு சிகிச்சை முறையைத் தீவிரமாக்குவதற்கு முன்பு அவர் இறந்து விட்டார். செப்டம்பர் மாதம் ஐரோப்பிய மருத்துவ வழக்கு அறிக்கைகளில் உள்நாட்டு மருத்துவப் பிரிவில் வெளியிடப்பட்ட ஒரு கேஸ் ஹிஸ்டரியின் படி . 16 நாட்கள் சிகிச்சையின் பின்னர், அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிகிறது.

கேப்னோசைட்டோபாகா எனப்படும் பாக்டீரியா செல்லப்பிராணிகளில் காணப்படும் ஒரு பொதுவான நுண்ணுயிர் தான். இது பெரும்பாலும் ஆபத்தானது இல்லை எனக் கருதப்பட்டாலும் சில அரிதான கேஸ்களில் மரணம் வரை இட்டுச் செல்லும் அளவுக்கு மோசமான தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. அதனால் தான் சொல்கிறார்கள், உடலில் காயங்களுடன் இருக்கையில் மனிதர்கள் தங்களது வளப்பு மிருகங்களிடமிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது என. ஏனெனில்,  
அவற்றின் மூலமாகத்தான் இத்தகைய பாக்டீரியாக்கள் எளிதாக மனித உடலை ஊடுருவிச் சென்று உயிராபத்தை விளைவிக்கின்றன.

மனிதர்களிடையே இந்த வகை நோய்த்தொற்றுகள் 25% வரை அரிதானவை என்றாலும், 74% நாய்கள் இந்த வகை பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளன. எனவே வளர்ப்பு மிருகங்களுடன் கொஞ்சி விளையாடும் முன்பு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

மேற்கண்ட சம்பவத்தில் உயிரிழந்த அந்த 63 வயது நபருக்கு உடலில் காயங்கள் ஏதும் இல்லை என்றபோதும் அவர் ஏன் மரணத்தைத் தழுவினார் என்றால், நாட்பட்ட நோய்கள், தொடர் குடிப்பழக்கம், புற்றுநோய், எச் ஐ வி பாதிப்பு உள்ளிட்ட நோய்க்கூறுகள் கொண்டவர்களுக்கும் கூட இந்த நோய் மிக எளிதில் பரவிவிடும் வாய்ப்பு உண்டு. அதன் காரணமாக அவர்களது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியும் மிக கடுமையான அளவில் குறைந்து அவர்களை மரணம் வரை இட்டுச் செல்கிறது.

அதற்காக செல்லப்பிராணிகளே வளர்க்கக் கூடாது. உயிருக்கு ஆபத்து என மடத்தனமாக நினைக்கத் தேவையில்லை. செல்ல நாய்களை அடிக்கடி மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று காட்டி அதன் ஆரோக்யத்தைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் செல்ல நாய் தானே கடித்தது, நக்கியது என்று சாதாரணமாக அதைக் கடக்காமல் நாய் நக்கினாலோ, கடித்தாலோ என்னென்ன விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் கையாள வேண்டும் என்பதை முன்கூட்டியே விலங்குகளுக்கான மருத்துவர்களிடம் கேட்டு நாம் அறிந்து வைத்துக் கொளவது நல்லது.

Image courtesy: Yahoo news

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com