Enable Javscript for better performance
why we can't recover from the AJino Moto Panic!- Dinamani

சுடச்சுட

  

  அஜினோ மோட்டோ பீதியிலிருந்து நம்மவர்கள் மீள முடியாது போலிருக்கே!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 11th November 2019 05:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ajino_moto

  ajino moto panic

   

   

  ஒரு உணவு குப்பை என்று தெரிந்தும் அதையே நாம் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்றால் என்ன அர்த்தம்? நாம் முட்டாள்கள் என்று அர்த்தம்.

  அஜினோ மோட்டோவின் வரலாற்றை ஆதியோடு அந்தமாக வாசித்து அறியும் போது இப்படித்தான் சொல்ல வேண்டியதாகிறது. நமக்குத் தெரியும்.. எதைச் சாப்பிட வேண்டும்? எதைச் சாப்பிடக்கூடாது என்று! ஆனால், சாப்பிடக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டதையே தொடர்ந்து நாம் சாப்பிடுகிறோமோ இல்லையோ நம் குழந்தைகளுக்கு வாங்கித் தந்து கொண்டிருக்கிறோம் என்றால் அதை வேறு எப்படித்தான் சொல்வது?

  அஜினோ மோட்டோ சேர்ப்பதால் தான் குர்குரே, லேய்ஸ், சில வகை பிரியாணிகள், புலாவ்கள், நூடுல்ஸ்கள் எல்லாம் அதீத சுவையுடன் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. அப்படி நாவின் சுவை அரும்புகளில் மாயம் செய்யும் இந்த அஜினோ மோட்டோவின் பிடியிலிருந்து நம்மால் மீளவே முடியாதா? இயற்கையிலேயே நமக்குத் தக்காளி ரொம்பப் பிடித்த உணவு. அதை நீக்கி விட்டால் சமையல் முழுமையடையாது என்று நம்பக் கூடியவர்கள் நாம். தக்காளியின் வித்யாசமான சுவைக்குக் காரணம் அதிலிருக்கும் க்ளூட்டன்களே. இயற்கையில் கிடைக்கும் க்ளூட்டன்களில் தக்காளியில் கிடைப்பதே அதிகம் என்கிறார்கள் தாவரவியலாளர்கள். 

  அஜினோமோட்டோவில் இருந்து விடுதலை பெற நினைப்பவர்கள் சிறிதுகாலம் தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்க்கப் பார்க்கலாம். புளிப்புக்கு தக்காளி தவிர்த்து எலுமிச்சை அல்லது புளி சேர்க்கலாம். கோங்குரா கீரையைக் கூட முயற்சிக்கலாம். நமது ஒரே நோக்கம் க்ளூட்டன் ஃப்ரீ உணவுகள் மட்டுமே.

  அஜினொ மோட்டோவிலிருந்து விடுபட தக்காளியை ஏன் தவிர்க்க வேண்டும்?

  லாஜிக் இடிக்கிறதில்லையா?

  இயற்கையில் தக்காளியில் தான் மோனோ சோடியம் க்ளூட்டாமேட் அதிகமாக இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்க முடியும்?! அதனால் குறிப்பிட்டேன்.

  சரி இனி அஜினோ மோட்டோ கதைக்கு வரலாம். 

  அஜினோ மோட்டோ கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு..

  இந்த அஜினோ மோட்டோவின் வரலாற்றை ஆராயும் போது... அதன் பூர்வீகம் ‘கோம்பு’ எனும் கடற்பாசி என்பதாக அறிய முடிகிறது. இந்த கடற்பாசியை பலப்பல ஆண்டுகளுக்கு முன்னரே சீனர்களும், ஜப்பானியர்களும் தங்களது உணவில் சேர்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதன் வித்தியாசமான சுவைக்கு அடிமையாகிப் போன அம்மக்கள் அதை தங்களது அடுத்தடுத்த சந்ததிகளுக்குக் கடத்தியிருக்கிறார்கள். அப்படியே வந்து கொண்டிருந்த இந்த உணவுப் பாரம்பரிய வளையமானது அந்த கடற்பாசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது கொஞ்சம் அறுபட்டிருக்கிறது/ அந்த நேரத்தில்.. தோராயமாகச் சொல்வெதென்றால் 1908 ஆம் வருஷ வாக்கில் கிகுனே இகேடா என்ற ஜப்பானிய வேதியியல் பேராசியர் ஒருவர் அந்த கடற்பாசியில் இருந்து கிடைக்கும் வித்தியாசமான சுவையை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா என்று சோதித்துப் பார்க்க ஒரு ஆய்வைத் தொடங்குகிறார்.

  செயற்கை உப்பில் கிடைத்த ‘உமாமி’ எனும் புதுச்சுவை ...கடற்பாசியின் சுவைக்கு அடிப்படை அதிலிருக்கும் க்ளூட்டாமிக் அமிலங்கள் தான் என்று என்பதைக் கண்டறிகிறார். அந்த வித்தியாசமான சுவைக்கு ‘உமாமி’ என்று பெயர் பெயரிட்ட கிகுனே சந்தைத் தேவைக்காக இயற்கையில் தக்காளி மற்றும் கோதுமையில் கிடைக்கும் க்ளூட்டனின் அமிலங்களை Coreneybacterium எனும் பாக்டீரியாவுடன் நொதித்தலுக்கு உட்படுத்தி அதனுடன் சோடியம் உப்பைக் கலந்து வாசனை அற்ற வெண்மையான உப்புப் படிகங்களாக வடித்தெடுக்கின்றனர். இந்த உப்புப் படிகங்களைத் தான் மோனோ சோடியம் க்ளூட்டாமேட் அல்லது அஜினோ மோட்டோ என்ற பெயரில் நாம் பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், நொறுக்குத் தீனிகள் என எல்லாவற்றிலும் கலந்து உண்டு ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  மோனோ சோடியம் க்ளூட்டாமேட் @ அஜினோ மோட்டோ.. 

  கண்டுபிடித்த அடுத்த ஆண்டே அதாவது 1909 ஆம் ஆண்டே தமது செயற்கை உப்புக்கு காப்புரிமை பெற்ற கிகுனே இகேடா அதைத் தமது பணக்கார நண்பர் ஒருவருடன் இணைந்து அஜினோ மோட்டோ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி ஊருக்குள் விற்கவும் தொடங்கினார். இப்படித்தான் ஜப்பானில் ஆரம்பமானது அஜினோ மோட்டோவின் வரலாறு.

  முதலில் ஜப்பானில் தொடங்கினாலும் ஒரு வியாபாரத்தின் வெற்றி என்பது அதன் உலகளாவிய தன்மையில் தானே இருக்கிறது. அஜினோ மோட்டோ தனது செயற்கை உப்பை உலகம் முழுக்க பரவச் செய்யும் பேராவல் கொண்டிருந்தது. அதுவரை மோனோ சோடியம் க்ளூட்டாமேட் என்றிருந்த அதன் பெயரையே மறக்கடிக்கச் செய்யும் அளவுக்கு நிறுவனத்தின் பெயரை மக்கள் மனதில் பதியச் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டது நிர்வாகம். ஆம், அஜினோ மோட்டோ 1956 வாக்கில் அமெரிக்காவில் கால் பதித்தது.

  அப்புறமென்ன உலகம் முழுக்க 23 நாடுகளில் தன் ஆக்டோபஸ் கரங்களை விரித்து வைத்துக் கொண்டு அஜினோ மோட்டோவை விற்கத் தொடங்கியது ஜப்பான்.

  அப்படித்தான் அது இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. முதலில் பெரு நகரங்களில் மாத்திரம் கிடைத்துக் கொண்டிருந்த அஜினோ மோட்டோ இன்று பெட்டிக் கடைகள் தோறும் கிடைக்கிறது.

  குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா? ஒரு சிட்டிகை அஜினோ மோட்டோ சேருங்கள்.. சுவை நாவைக் கட்டிப்போடும். அப்புறம் பாருங்கள் உங்கள் குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கவே மாட்டார்கள் என்கிற ரீதியில் தொலைக்காட்சியில் விளம்பரங்கள் எல்லாம் கூட சில காலம் ஓடிக் கொண்டிருந்தது. 

  நூடுல்ஸில் அளவுக்கதிகமான மோனோ சோடியம் க்ளூட்டாமேட்  கலக்கப்படுவதால் குழந்தைகளின் மூளைச்செயல் திறன் பாதிப்படைகிறது என்றொரு குற்றச்சாட்டு வெடித்த பிறகு தான் நம் மக்கள் விழித்துக் கொள்ளத் தொடங்கினர். கடைகள் தோறும் குறிப்பிட்ட அந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகள் தேங்கிப்போயின. எல்லோருமே அந்த நூடுல்ஸை வாங்குவதை மட்டும் தவிர்த்து விட்டு இன்னபிற அஜினோ மோட்டோ கலந்த சமாச்சாரங்களை எவ்வித அச்ச உணர்வும் இன்றி அடித்து நொறுக்கிக் கொண்டு தான் இருந்தோம் அப்போதும்.

  சரி இந்த அளவுக்கு பீதி கிளப்ப அதில் அப்படி என்ன தான் இருக்கிறது?

  • பெரிதாக ஒன்றுமில்லை ஜெண்டில் மேன்ஸ்.. அஜினோ மோட்டோ கலந்த உணவுப் பொருளை விஞ்ஞானிகள் தங்களது ஆய்வுக்கூடத்தில் இருந்த கருவுற்ற ஒரு எலிக்கு தொடர்ந்து கொடுத்து சோதித்துப் பார்க்கையில் அந்த எலி பிரசவித்த குட்டிகளின் மூளைச் செல்கள் அளவில் சுருங்கி இருப்பதைக் கண்டறிந்தார்கள். 
  • அது மட்டுமல்ல, அஜினோ மோட்டோ கலந்து உணவுப் பொருட்களை தொடர்ந்து சாப்பிடும் போது குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால் வளர்ச்சி தடைபட்டு உயரம் குறைகிறது.
  • அத்துடன் இந்த ரசாயனப் பொருளுக்கு உடல் எடையைத் தாறுமாறாக அதிகரிக்கச் செய்யும் ஆற்றலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • மூளை மட்டுமல்ல சிறுகுடல், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளில் அழற்சி, ரத்தக்கசிவு ஏற்படும்... குழந்தைகளுக்கு வரும் காரணம் கண்டறிய முடியாது வயிற்று வலிக்கு கூட இந்த ரசாயனம் தான் காரணமாக இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
  • இதன் மீது ஒவ்வாமை கொண்டவர்கள் அஜினோ மோட்டோ கலந்த உணவுப் பொருளை உண்டார்கள் என்றால் அவர்களுக்கு அந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே நெஞ்சு எரிச்சல், மூச்சுத்திணறல், ஏற்பட்டு உடல் வியர்க்க ஆரம்பித்து விடுகிறது. இந்த மாதிரியான அறிகுறிகளுக்கு சைனா உணவக சிண்ட்ரோம் குறைபாடு என்று அமெரிக்கர்கள் தனிப்பெயரே சூட்டும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமாக இருந்திருக்கிறது.
  • அப்போதே அதாவது 70 களின் ஆரம்பத்திலேயே அமெரிக்காவில் டாக்டர்கள் இந்த உப்பைத் தடை செய்யக்கோரி பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். அதனால் தான் அமெரிக்க அரசு 1 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது எனத் தடை விதித்தது.

   

  இந்தியாவில் அஜினோ மோட்டோவின் வரவு..

  ஆனால், அதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இன்று 2003 ஆம் ஆண்டு வாக்கில் அஜினோ மோட்டோ இந்தியாவில் பரவலாகக் கடை விரிக்கத் தொடங்கியது. வந்த ஆரம்ப காலங்களில் பால், பால் சேர்க்கப்பட்ட பொருட்கள், மினரல் வாட்டர், ஐஸ்கிரீம், காபி, டீ போன்றவற்றில் இதைக் கலக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு தான் அஜினோமோட்டோ நிறுவனத்திற்கு இந்திய அரசு அனுமதி அளித்தது.

  ஆனால், இந்திய உணவுப் பொருள் கலப்பட தடுப்புச் சட்டத்திற்கு எதிராக இந்தப் பொருள் விளம்பரப்படுத்தப்பட்டு , தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாக இன்று பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏனெனில், இன்று அனைத்து இந்திய உணவு வகைகளிலுமே டேஸ்ட் மேக்கர் என்ற பெயரில் வேலையைக் காட்டத் துவங்கி விட்டது அஜினோமோட்டோ. இதனால் தான் வெளிச்சாப்பாடு பலருக்கு ஒத்துக் கொள்வதில்லை.

  பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்றத் தன்மை, தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய் மற்றும் சர்க்கரை நோய் என அஜினோமோட்டோ அள்ளி வழங்கும் நோய்களை சர்வதேச மருத்துவ ஆய்வாளர்கள் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

  நமக்கு இந்த நோய்கள் எல்லாம் நிச்சயம் வேண்டும் என்றால் நாம் தாராளமாக அஜினோமோட்டோவை நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

  வேண்டாம் என நினைப்பவர்கள் தயவு செய்து இனிமேல் அஜினோ மோட்டோ சேர்த்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai