தங்களது பிரபல்யத்தை மோசடி விளம்பரங்களில் நடிக்கப் பயன்படுத்திய இரு நடிகர்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் வைத்த குட்டு!

இந்த வழக்கின் தீர்ப்பைக் கண்ட பிறகாவது முன் யோசனையின்றி தங்களது பிரபலத் தன்மையை இவ்விதமான மோசடி விளம்பரங்களில் நடிக்கப் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் திருந்துவார்களா?
GOVINDA & JACkIE
GOVINDA & JACkIE

ராதிகாவும், மீனாவும், சுகன்யாவும், கே ஆர் விஜயாவும் கோல்டு லோன் வாங்கச் சொல்கிறார்கள். காஜல் அகர்வாலும், சமந்தாவும் வீட்டை உடைத்துக் கொண்டு வந்து பிரபல உப்பு நிறைந்த டூத் பேஸ்டை பயன்படுத்தச் சொல்கிறார்கள். ஜோதிகா வேறு  மசாலா பெளடரும், துணிகளுக்கு வாசனையூட்டும் திரவமும் வாங்கச் சொல்கிறார். ரகுமான் என்னவோ ஹேர் டை விளம்பரம் பண்ணுகிறார். இன்னும் நிறைய நடிகர், நடிகைகள் நிறைய நிறைய விளம்பரங்களில் வந்து அதை வாங்குங்க, இதை வாங்குங்க என்று படு சாமர்த்தியமாக மூளைச்சலவை செய்கிறார்கள். அதைப் பார்க்கும் ரசிகர்கள் என்ன செய்கிறார்கள்? இந்த விஷயத்தில் நான் புத்திசாலிகளைப் பற்றி பேசவில்லை. விளம்பரங்களுக்கு மயங்கும் சில, பல அப்பாவிகளைச் சொல்றேன். அவர்களுக்கெல்லாம் சினிமா நடிகர், நடிகைகள் விளம்பரத்தில் வந்து சொல்லிவிட்டால் போதும், அந்தப் பொருட்களைத்தான் கடைகளில்  சென்று வாங்குவார்கள். 

அப்படிப் பட்டவர்களில் ஒருவர் தான் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இப்போது நீதிமன்றப் படிகளில் ஏறி தான் ஏமாந்த கதையைச் சொல்லி நிவாரணம் பெற்றிருக்கும் அபிநவ் அகர்வால். 

நடந்த கதை இது தான்..

2012 ஆம் ஆண்டில் முசாபர் நகரைச் சார்ந்த வழக்கறிஞரான அபிநவ் அகர்வால், தனது 70 வயதுத்  தந்தை பிரிஜ்பூஷன் அகர்வாலுக்காக 3,600 ரூபாய் கொடுத்து வலி நிவாரண எண்ணெய் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறார். குறிப்பிட்ட அந்த வலி நிவாரண எண்ணெயை அவர் எப்படித் தெரிந்து கொண்டார் என்றால், தொலைக்காட்சி விளம்பரங்கள் பார்த்துத்தான். ஆம், அந்த எண்ணெய் 15 நாட்களில் பூரண நிவாரணம் அளிக்கும் என பாலிவுட் நடிகர்கள் கோவிந்தாவும், ஜாக்கி ஷெராஃபும் சம்மந்தப்பட்ட அந்த எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றி நடித்து பொதுமக்களுக்கு சேதி சொல்லி இருக்கின்றனர். இதை நம்பிட்தான் அபிநவ் தன் தந்தைக்கு அதே எண்ணெயை ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார். ஆனால், அந்த நடிகர்கள் சொன்னது போல 10 நாட்களுக்குள் வலி நிவாரணம் கிடைக்கவில்லை. 3,600 ரூபாய் வீண் தானா? என்று யோசித்த அபிநவ்வுக்கு, சம்மந்தப்பட்ட அந்த எண்ணெய் நிறுவனம் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த வாக்குறுதி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என்னவென்றால்? தாங்கள் அளித்த வாக்குறுதியின் படி தங்களது தயாரிப்பான எண்ணெய் வலி நிவாரணம் தரவில்லை என்றால் அதற்கான பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதி வாடிக்கையாளர்களுக்கு உண்டு என்பதே அது. 

இதை அப்படியே நம்பிய அபிநவ், குறிப்பிட்ட அந்த வலி நிவாரண எண்ணெய் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தன் தந்தைக்கு வலி இன்னும் தீர்ந்தபாடில்லை. அதனால், நான் எண்ணெய்க்குச் செலுத்திய தொகையை திரும்பத் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். அந்த நிறுவனமும் நல்ல பிள்ளைத்தனமாக, சரி நீங்கள் எங்களது எண்ணெயைத் திருப்பி அனுப்புங்கள், உடனடியாக உங்களது பணம் உங்களுக்கு திருப்பி அனுப்பப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அதை நம்பி அபிநவ் தன் அப்பாவுக்காக வாங்கிய வலி நிவாரண எண்ணெயைத் திருப்பி அனுப்பி இருக்கிறார். அனுப்பி பல நாட்களான பின்னும் அபிநவ்வுக்கு ரீஃபண்ட் தொகை கிடைக்கவில்லை.

மீண்டும் அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டாலோ, அவர்கள் இப்போது அபிநவ்வை மிரட்டத் தொடங்கி விட்டார்கள். இதனால் கடுப்பான அபிநவ், சம்மந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாகவும், தான் நடிகர்கள் கோவிந்தா மற்றும் ஜாக்கி ஷெராஃபை நம்பியே இப்படி அவர்களிடம் பணத்தை இழந்ததோடு மன உளைச்சலாலும் அவஸ்தைப் பட்டு வருவதாகவும் கூறி, இது மிகப்பெரிய மோசடி என்று குறிப்பிட்டு  புகார் எழுதி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு விட்டார்.

அந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வந்திருக்கிறது. காலம் கடந்த தீர்ப்பு என்றாலும் இதெல்லாம் நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஊட்டக்கூடிய தீர்ப்புகளில் ஒன்று என்பதால் இதை நாம் பாராட்டினால் தகும்.

தீர்ப்பின் விவரம் பின்வருமாறு;

வலி நிவாரண எண்ணெயை விளம்பரத்தில் நடித்து தங்களது பிரபலத்தை மோசடியான ஒரு பொருளின் விற்பனையை அதிகரிக்க பொதுமக்களை நம்ப வைத்து ஏமாற்றியதற்காக உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் நடிகர்கள் கோவிந்தா மற்றும் ஜாக்கி ஷிராஃப் ஆகியோருக்கு தலா ரூ .20,000 அபராதம் விதித்துள்ளது அவர்களுடன் சேர்த்து அந்த எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்திற்கும் அபராதம் விதித்துள்ளது.

ஒரு மூலிகை எண்ணெய் நிறுவனம் மற்றும் அதன் இரண்டு பிரபல பிராண்ட் தூதர்கள் மீது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளைஞர் அளித்த புகாரின் பேரில் நுகர்வோர் நீதிமன்றம் இவ்விதமாகத்  தீர்ப்பு வழங்கி இருப்பது பிற நடிகர், நடிகைகளுக்கான ஒரு எச்சரிக்கையாகவும் கூட எடுத்துக் கொள்ளத் தக்கதே!

இவ்வழக்கின் தீர்ப்பில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக ரூ .20,000 செலுத்த கோவிந்தா, ஜாக்கி ஷிராஃப், டெலிமார்ட் ஷாப்பிங் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் மற்றும் மேக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய ஐந்து பங்குதாரர்களுக்கும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்ல.. அபிநவ் அகர்வால் செலுத்திய ரூ .3,600 ஐ ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடனும் மற்ற சட்ட செலவினங்களுடனும் திருப்பித் தரவும் மூலிகை எண்ணெய் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பைக் கண்ட பிறகாவது முன் யோசனையின்றி தங்களது பிரபலத் தன்மையை இவ்விதமான மோசடி விளம்பரங்களில் நடிக்கப் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் திருந்துவார்களா?

அவர்கள் திருந்துவது என்பது எப்படியோ? குறைந்தபட்சம் பொதுமக்களாவது இத்தகைய நடிகர், நடிகைகளை நம்பி ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் முதல் கன்ஸூமர் பொருட்களுக்கான விளம்பரங்கள் வரை நம்பி ஏமாந்து மோசடி பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி ஏமாறுவதை நிறுத்திக் கொள்வார்களா?! என்றால்.. அதெல்லாம் உறுதியாகச் சொல்லி விட முடியாது என்ற நிலை தான் இப்போதும்.

Image Courtesy: you tube

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com