சண்டிகர் நகருக்கு மற்ற இந்திய நகரங்களுக்கு இல்லாத சிறப்புகள் இருக்கின்றன.
சண்டிகர் நகருக்கு மற்ற இந்திய நகரங்களுக்கு இல்லாத சிறப்புகள் இருக்கின்றன. இந்த நகரம் பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்குத் தலைநகர் மட்டுமல்ல! இந்த தலைநகரே ஒரு யூனியன் பிரதேசமாகவும் உள்ளது!
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நகரம் ஒரு உருவாக்கப்பட்ட நகரம்! பிரெஞ்சுக் கட்டிடக் கலைஞரான "லெகொபூசியே' வால் உருவாக்கப்பட்ட இந்த நகரம் நகரமைப்புக்கான முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
முறையான சாலைகள், திறந்தவெளி இடங்கள், முறையான கழிவு நீர் பாதைகள், திடக்கழிவு மேலாண்மை, எல்லாத் தரப்பு மக்களும் வாழ்வதற்கான வசிப்பிடங்கள் பாதசாரிகள் நடக்க அகலமான தனி நடைமேடை என எல்லாம் முறைப்படி உருவாக்கப்பட்ட சிறந்த நகரம் சண்டிகர்!
சண்டிகர் யூனியன் பிரதேசம்
சண்டிகர் வட இந்தியாவின் உள்ள ஒரு நகரம். இயற்கை எழிலும், பசுமையும் நிறைந்த நகரம். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு இடையில் எல்லையில் அமைந்துள்ளது. 114 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இந்நகரம் மத்திய அரசால் நிர்வாகம் செய்யப்படும் யூனியன் பிரதேசமாகும்.
1947 - இல் இந்திய விடுதலைக்குப் பின் நடந்த பஞ்சாப் பிரிவினையில் அதுவரை தலைநகரமாக இருந்த லாகுர் பாகிஸ்தானுடன் இணைந்தது. அதனால் இந்தியாவிற்கு சொந்தமான கிழக்கு பஞ்சாபிற்கு ஒரு புதிய தலைநகரம் தேவையாய் இருந்தது.
ஆகவே அப்போதைய இந்தியப் பிரதமரான ஜவஹர்லால் நேரு சண்டிகரில் ஒரு புதிய நகரம் அமைக்க ஏற்பாடு செய்தார். அதன்பின் திட்டமிட்டு பல கட்டிடங்கள் கட்டப்பட்டது. சுதந்திர இந்தியாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட முதல் நகரம் சண்டிகர்தான்.
சண்டிகர் நகரமே பஞ்சாப், அரியானா ஆகிய 2 இந்திய மாநிலங்களுக்கும் தலைநகரமாக விளங்குகிறது. சண்டிகர் எந்த மாநிலத்தையும் சேர்ந்தது அல்ல. இரண்டு மாநிலங்களும், சண்டிகாரை தங்களுக்கு வேண்டும் எனக் கேட்டதால் அதனை யூனியன் பிரதேசமாக அறிவித்து இரண்டுமாநிலங்களுக்கும் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது!
சுற்றுலாத் தலங்கள்!
கேபிடல் காம்ப்ளெக்ஸ்
திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட சண்டிகர் நகரத்தின் பிரதான அடையாளமாக, 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட, இந்த வளாகம் திகழ்கிறது. இங்குதான் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் சட்ட மன்றங்கள், தலைமை செயலகம் மற்றும் உயர்நீதிமன்றம் போன்ற அரசு அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுக்குள் சென்று பார்க்க சுற்றுலாப் பயணிகள் விசேஷ அனுமதி பெற்றுத்தான் செல்ல முடியும்.
திறந்த கை நினைவுச் சின்னம்!
இந்த நினைவுச் சின்னம் கேபிடல் காம்ப்ளெக்ஸ் வளாகத்தினுள் அமைந்துள்ளது. இது சண்டிகர் நகரின் குறியீடாக அறியப்படுகிறது. பறக்கும் பறவையைப் போல் தோன்றும் இச்சின்னம் 26 மீட்டர் உயரம் கொண்டது. காற்றில் சுழலுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நேப்லி!
நேப்லி என்னும் இந்த வனப்பகுதி கன்சால் கிராமத்திலிருந்து சிறிது தூரத்தில் வடக்கு எல்லையில் உள்ளது. 3245 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வனத்தில் கழுதைப்புலி, கலைமான், மான், நரி, போன்ற விலங்குகள் வாழ்கின்றன. இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அனுமதி பெற்றுதான் செல்ல முடியும்.
சுக்னா காட்டுயிர் சரணாலயம்!
சுக்னா ஏரியின் வடகிழக்கு பகுதியில் இந்த காட்டுயிர் சரணாலயம் 2600 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இச்சரணாலயத்தில் பாலூட்டி விலங்குகள், பூச்சி இனங்கள், மற்றும் பறவைகளும் வாழ்கின்றன.
ஜாகிர் ஹூசைன் ரோஜா தோட்டம்!
ரோஸ் கார்டன் எனப்படும் இப்பூந்தோட்டம் 1967 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் 1600 வகையான 50,000 ரோஜாச் செடிகள் வளர்க்கப்படுகின்றன.
மேலும் பல வகையான மூலிகைத் தாவரங்களும் இங்கு வளர்க்கப்படுகின்றன. இந்த பூங்காவில் ஆண்டுதோறும் "ரோஜா திருவிழா' என்னும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சுக்னா ஏரிக்கு அருகில் உள்ள இப்பூங்காவிற்கு ஒரு நாளில் 5000 பார்வையாளர்கள் வருகின்றனர். ஆசியாவின் மிகப் பெரிய பூங்கா என்ற பெருமைக்குரியது!
பாறை சிற்பத் தோட்டம்
சண்டிகரின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம்! 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இச் சிற்பத் தோட்டம் "நேக் சந்த்' என்பவரால் உருவாக்கப்பட்டது!
இங்குள்ள கலைச்சிற்பங்கள் தனித் தன்மை வாய்ந்தவை! உடைந்த வளையல் துண்டுகள், பீங்கான் துண்டுகள், மின்கம்பிகள், உபயோகமற்ற பழைய வாகன உதிரி பாகங்கள், பழைய மின் விளக்குகள், கட்டிடக் கழிவுகள், மண்பானைத் துண்டுகள் போன்றவற்றைப் பயன் படுத்தி மனித உருவங்கள், மிருகங்களின் உருவங்கள், கட்டிடங்கள் போன்ற பல்வேறு சிற்பங்கள் இங்கு அழகுறக் காட்சியளிக்கின்றன.
கன்சால் வனம்!
சண்டிகர் எல்லையில் அமைந்துள்ள கன்சால் கிராமத்திற்கு அருகில் உள்ளது இந்த வனம். பார்க்க ரம்மியமான மிகப் பெரிய புல்வெளி இங்குள்ளது! அனுமதி பெற்றுத்தான் செல்ல முடியும்.
தேசிய அருங்காட்சியகம்!
நாட்டின் முதன்மையான அருங்காட்சியகங்களின் சண்டிகர் அருங்காட்சியகமும் ஒன்று. இங்கு காந்தரா சிற்பங்கள், ராஜஸ்தான் பாணி ஓவியங்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட 10,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது!
பஞ்சாப் பிரிவினையின் போது லாகூர் அருங்காட்சியகத்தில் இருந்த பழமையான பொருட்களில் 40% பொருட்களை பாகிஸ்தான் இந்தியாவிற்கு வழங்கியது. அப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.
வாழ்க்கைப் பரிணாமஅருங்காட்சியகம்!
இங்கு மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சி, விசேஷ காட்சியமைப்புகள், மற்றும் ஓவியங்கள் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் அரசு அருங்காட்சியகத்தின் வளாகத்திலேயே அமைந்துள்ளது.
இன்டர் நேஷனல் டால்ஸ் மியூசியம்!
1985 - ஆம் ஆண்டில் குழந்தைகளை மகிழ்ச்சிப் படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே இந்த மியூசியம்! இங்கு 25 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பொம்மைகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. பாரம்பரியமான இந்திய உடைகள் கொண்ட இந்திய பொம்மைகளுக்கென்று ஒரு தனிப்பிரிவும் உள்ளது, இதன் உள்ளேயே குழந்தைகளுக்காக வெவ்வேறு பகுதிகளை இணைக்கும்ú உல்லாச ரயில் ஒன்றும் இயக்கப்படுகிறது.
சாத்பீர் வனவிலங்கு பூங்கா!
சண்டிகரின் துணை மொகாலி அருகில் இந்த சாத்பீர் வனவிலங்கு காட்சியகம் உள்ளது.
1977 - இல் தொடங்கப்பட்ட இந்த மிருகக் காட்சிசாலை 202 ஏக்கர் பரப்பளவு கொண்ட இயற்கையான வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மிருகக் காட்சி சாலையில் 85 வகையான விலங்குகள், பறவைகள், மற்றும் ஊர்வன என 950 உயிரினங்கள் உள்ளன. நம் நாட்டிலயே ராயல் பெங்கால் புலி இங்குதான் உள்ளது.
குருத்வாரா கூனி சாஹிப்!
இந்த சீக்கிய வழிபாட்டுத்தலத்தில் குரு கோவிந்த் சிங் தனது படைவீரர்களுடன் ஒரு வார காலம் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அழகும் கம்பீரமும் கொண்ட ஆலயம்!
காந்தி பவன்!
மகாத்மா காந்தி தொடர்பான் படிப்புகளை பயில்வதற்கான மையம். காந்தியம் தொடர்பான அனைத்து நூல்களும் இங்குள்ளது. இங்குள்ள கூட்ட அரங்கம் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
கட்டிட கலையிலும், இயற்கை காட்சிகளிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு சண்டிகர் யூனியன் பிரதேசம் அற்புதமான சுற்றுலாப் பெருநகரம்!
தொகுப்பு : கே . பார்வதி, திருநெல்வேலி டவுன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.