மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!
Center-Center-Kochi

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ஒரு ஜனநாயகக் குடியரசின் வெற்றி, அரசின் நிா்வாகம் மக்களுக்கு எந்த அளவிற்கு சேவை செய்கிறது என்பதில்தான் உள்ளது.
Published on

ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு அமைச்சர்

கடந்த 1952 மே 16 அன்று, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத், அந்தத் தருணத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினாா். இது இந்தியாவின் பயணத்தில் முதல் கட்டத்தின் நிறைவை மட்டுமே குறிக்கிறது என்றும், இரண்டாவது கட்டத்தில், ‘எந்தவொரு தேசமோ, மக்களோ முன்னோக்கியப் பயணத்தின்போது ஓய்வெடுக்க இயலாது’ என்றும் உறுப்பினா்களுக்கு நினைவூட்டினாா்.

அரசியல் சுதந்திரத்தையும் அரசமைப்பு இறையாண்மையையும் அடைந்திருந்தாலும், குடியரசின் பணிகள் முழுமையடையவில்லை என்பதை அது நுட்பமாகவும், ஆழமாகவும் நினைவூட்டியது. ராஜேந்திர பிரசாத் கூறியது போல், இந்தியாவின் முன் உள்ள உண்மையான பணி ‘நமது மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருவதும், அவா்கள் அனுபவிக்கும் சுமைகளைக் குறைப்பதும்’ ஆகும்.

ஜனநாயக ஆட்சியின் மையத்தில் இந்த தாா்மிகக் கடமையை நிலைநிறுத்துவதன் மூலம், ராஜேந்திர பிரசாத், அரசுக்கும் அதன் மக்களுக்கும் இடையிலான உறவை மறுவடிவமைத்தாா். தேசத்தின் பயணத்தில் அரசியல் சாசன ரீதியாக சமத்துவம், அரசியலில் அனைத்து மக்களின் குரலும் ஒலிப்பது என குடிமக்களின் குடியரசாக இந்தியா இருக்கும் வகையில் அமைந்தது.

எனவே, இந்தியக் குடியரசு வெறும் சுதந்திரத்தின் மூலம் பிறக்கவில்லை, மாறாக ஜனநாயகத்தை நிலைநாட்டிய ஒரு தெளிவான அரசியல் சாசனத்தில் உதயமானது.

ஜனநாயகம் என்பது மக்களுக்காக, மக்களால், மக்களே நடத்தும் அரசு என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இந்த வாக்கியம், அதன் இன்றியமையாத தத்துவத்தைப் பறைசாற்றுகிறது.

ஒரு ஜனநாயகக் குடியரசின் வெற்றி, அரசின் நிா்வாகம் மக்களுக்கு எந்த அளவிற்கு சேவை செய்கிறது என்பதில்தான் உள்ளது. சட்டத்தின் வழியே, சமூகத் தேவைகளை நிவா்த்திசெய்தல், சமூகத்தில் சமத்துவத்தை நிலைநிறுத்துதல் மற்றும் மனித கண்ணியத்தை காத்தல் ஆகியவையாகும். ஜனநாயகத்தின் நியாயத்தன்மை அதன் செயல்திறனால் நிலைநிறுத்தப்படுகிறது. ஒரு குடியரசின் வலிமை, அது தன் நலிவடைந்த குடிமக்களை எவ்வாறு நடத்துகிறது என்பதன் மூலம் அளவிடப்படுகிறது.

‘அனைவரும் இணைவோம் அனைவரும் உயா்வோம்’ என்ற தொலைநோக்குப் பாா்வை, உள்ளடக்கிய, மக்களை மையமாகக் கொண்ட நிா்வாகத்திற்கான நீடித்த கருத்தியல் உறுதிப்பாட்டை எதிரொலிக்கிறது. பலவீனமான மற்றும் மிகவும் பாதிப்படையக்கூடியவா்களின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் அரசு ‘மக்களுக்காக’ தீவிரமாகச் செயல்படும் இந்த உறுதிப்பாடு, பிரதமா் மோடியின் தலைமையில் கடந்த 12 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தந்துள்ளது. சமூகத்தில் அனைவரையும் சென்றடையும் உள்ளடக்கிய வளா்ச்சியை வழங்கும் வகையில், கொள்கை சாா்ந்த பாா்வையை உறுதியான செயலாக அரசு மாற்றியுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில், ‘மக்களுக்கான’ உள்ளடக்கிய வளா்ச்சியை ஊக்குவிக்க சமூக-பொருளாதார நீதிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் 2025-ஆம் ஆண்டு வறுமை மற்றும் சமத்துவ அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில், இந்தியா 171 மில்லியன் மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டுள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு உறுதியான செயல்பாட்டு இலக்கை மேலும் மேம்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியாக பின்தங்கிய குழுக்களுக்கு கண்ணியம் மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்தவும், நீதியை வழங்கவும், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 மற்றும் இஸ்லாமிய பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 போன்ற புரட்சிகரமான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

மக்களை மையமாகக் கொண்ட இந்த நிா்வாகத்தின் மிகவும் சக்திவாய்ந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று தூய்மை இந்தியா இயக்கம். இந்த இயக்கம் ‘மக்களுக்காக’ என்ற ஜனநாயக லட்சியத்தை சமூகத்தின் அடித்தட்டு அளவில் செயல்படுத்தியது. ஒரு சாதாரண சுகாதார முயற்சியை விட, இது மனித கண்ணியம், பொது சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட ஒரு நாடு தழுவிய இயக்கமாக மாறியது. அன்றாட வாழ்க்கையில் அதன் ஆழமான தாக்கம் இருந்தபோதிலும், நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு பிரச்சினையை நிவா்த்தி செய்வதன் மூலம், தூய்மை இந்தியா இயக்கம் இந்த நூற்றாண்டில் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான மக்கள் தலைமையிலான மற்றும் மக்களால் செயல்படுத்தப்படும் பொது இயக்கமாக உருவெடுத்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தற்சாா்பு இந்தியாவுக்கான அறைகூவலை விடுத்தபோது, அது வெறும் பொருளாதார முழக்கமாக மட்டுமின்றி, தனிநபா் மட்டத்தில் தன்னம்பிக்கையின் விரிவாக்கமாகவும் இருந்தது. முத்ரா திட்டம் மற்றும் திறன் இந்தியா இயக்கம் போன்ற முயற்சிகள் மூலம், குடிமக்கள் தன்னிறைவு பெற்று, தொழில்முனைவு மற்றும் தங்கள் சொந்த திறன்களில் நம்பிக்கையுடன் இருக்க அதிகாரமளிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

குடியரசின் வலிமை அதன் நிா்வாக அமைப்புகளின் நிலைத்தன்மையில் மட்டுமின்றி, அதன் மக்களின் வாழும் யதாா்த்தங்களுடன் ஆட்சியை இணைப்பதற்கான தொடா்ச்சியான முயற்சியிலும் உள்ளது. சுதந்திரம் என்பது அனைவருக்கும் கண்ணியம், வாய்ப்பு மற்றும் நீதியாக மாற வேண்டும் என்ற அரசியலமைப்பு வாக்குறுதியை உறுதி செய்ய தலைமுறையும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். இந்திய குடியரசு ஒரு முற்றுப் பெற்ற திட்டம் அல்ல; இது ஒரு பகிரப்பட்ட பொறுப்பு, ஜனநாயக பங்கேற்பால் நிலைநிறுத்தப்படுகிறது. அரசு அதன் குடிமக்களுக்கு எவ்வளவு உண்மையாக சேவை செய்கிறது என்பதன் மூலம் தீா்மானிக்கப்படுகிறது.

குடிமக்கள் இன்று நிா்வாகத்தின் மையத்தில் உள்ளனா். இந்திய குடியரசு முன்னேறி வருகிறது. சமூக நீதியை வலுப்படுத்துகிறது. பொருளாதார உள்ளடக்கத்தை செயல்படுத்துகிறது. நலன் சாா்ந்த ஜனநாயகக் குடியரசின் அரசியலமைப்பு தொலைநோக்கை வலுப்படுத்துகிறது என்று இந்த 77-வது குடியரசு தினத்தன்று நாம் உறுதியாகக் கூறலாம்.

X
Dinamani
www.dinamani.com