

குழந்தைகள் பிறக்கும்போதே இதயத்தில் துளையுடன் பிறப்பது அல்லது இதயத்தின் அமைப்பு அல்லது ரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடே பிறவி இதய நோய் (Congenital Heart Disease- CHD) என்று சொல்லப்படுகிறது.
குழந்தைகள் பெரும்பாலும் கருவில் இருக்கும்போதே ஏற்படும் இந்த குறைபாட்டால் இதயத்தில் ரத்த ஓட்டம் பாதிப்பு, அடைப்புகள், சுவாசப் பிரச்னைகள் உள்ளிட்டவை ஏற்படலாம். ஆனால் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும்போது பாதிப்பிலிருந்து மீள முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட இதய மற்றும் ரத்த நாள அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சங்கராம் கேசரி பெஹெரா இதுபற்றி கூறுகையில்,
"பிறவி இதய நோய் பெரும்பாலும் பிறப்பிலிருந்தே இருக்கும். லேசானது முதல் கடுமையான அறிகுறிகளுடன் இருக்கும். உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இது உயிருக்கு ஆபத்தானதாக மாறக் கூடும். இந்தியாவில் பல குழந்தைகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு நிலைதான்" என்று கூறினார்.
பிறவி குறைபாடுகளில் பிறவி இதய நோய் மிகவும் பொதுவானது. மொத்த குறைபாடுகளில் பிறவி இதய நோய் 28% உள்ளது. ஒவ்வொரு 1,000 குழந்தைகளுக்கும் 8-10 என்ற விகிதத்தில் பிறவி இதய நோய் ஏற்படுகிறது. சில நேரங்களில் பிறக்கும்போது குழந்தை இறப்பு, கருச்சிதைவு, குறைப் பிரசவம் போன்றவை ஏற்படலாம். இதன் விகிதம் தற்போது அதிகரித்து வருகிறது.
கர்நாடகத்தின் சாமராஜநகர் மருத்துவ அறிவியல் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவால் நடத்தப்பட்டு 'யூரோப்பியன் ஜர்னல் ஆஃப் கார்டியோவாஸ்குலர் மெடிசின்' இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, பிறவி இதய நோய் என்பது பச்சிளம் குழந்தைகள் இறப்பிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இந்தியாவில் தற்போதுள்ள சிசு மரணங்களில் 10% இதனுடன் தொடர்புடையது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பிறவி இதய நோயின் பாதிப்பு விகிதம் சீராகவே உள்ளது என்றும் 40-50% குழந்தைகளுக்கு பிறந்த முதல் வாரத்திலேயே வழக்கமான பரிசோதனைகளின்போதே நோய் கண்டறியப்படுகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
புவனேஸ்வரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் இதயவியல் துறை கூடுதல் பேராசிரியரான டாக்டர் தேபாசிஷ் தாஸ் இதுபற்றி கூறுகையில்,
"குழந்தைகளுக்கு பிறவி இதய நோய் கருவிலேயே உருவாகிறது. சிறிய துளைகள் முதல் அறுவைச் சிகிச்சை தேவைப்படும் சிக்கலான குறைபாடுகள் வரை பாதிப்புகள் இருக்கலாம். உலகளவில் ஒவ்வொரு 100 குழந்தைகளிலும் ஒரு குழந்தைக்கு பிறவி இதய நோய் ஏற்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
அதிக பாதிப்பு இருந்தபோதிலும் நாட்டில் அதிகம் அறியப்படாத நோயாகவே இது இருக்கிறது. கர்ப்ப கால பராமரிப்பு, பிறந்த குழந்தைகளுக்கான பரிசோதனைகள், எக்கோகார்டியோகிராபி வசதிகள் மேம்பட்டதன் காரணமாக இந்த நோயின் பாதிப்புகள் இப்போது வெளிச்சத்திற்கு வருகின்றன. ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது. பிறக்கும் ஒரு குழந்தையைப் பார்க்கும்போது சாதாரணமாக இருந்தாலும் அவர்களுக்கு இதய பாதிப்புகள் இருக்கக் கூடும் என்பதால் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்" என்கிறார்.
அறிகுறிகள்
பிறவி இதய நோய்க்கான காரணங்கள் சிக்கலானதாகவும் அறியப்படாத காரணங்களாகவும் இருக்கின்றன. பெரும்பாலும் மரபணு பாதிப்புகள், குழந்தை கருவில் இருக்கும்போது சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
இதுதவிர கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய், ரூபெல்லா தொற்று, டெரடோஜெனிக்(teratogenic) மருந்துகளை எடுத்துக்கொள்வது, மரபணு மாற்றங்கள், கர்ப்ப காலத்தில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் ஆகியவற்றால் ஏற்படலாம்.
அறிகுறிகளைப் பொருத்தவரை குழந்தைக்கு சுவாசிப்பதில் சிரமம், மீண்டும் மீண்டும் சுவாசக்குழாய் தொற்று, சரியாகப் பால் குடிக்காமல் இருப்பது , எடை கூடாமல் இருப்பது, வழக்கத்திற்கு மாறான தூக்கக் கலக்கம், நெற்றியில் அதிக வியர்வை, பால் குடிக்கும்போது சீராக குடிக்காமல் விட்டுவிட்டு குடிப்பது, தேற்ற முடியாத அழுகை, கால், பாதம் மற்றும் வயிற்றில் வீக்கம், தோல், உதடுகள் மற்றும் விரல் நகங்கள் நீல நிறமாக மாறுதல் ஆகியவை இதன் அறிகுறிகள் என்று டாக்டர் தாஸ் கூறினார்.
பிறவி இதய நோய்க்கு ஒரே ஒரு காரணம் என்று எதுவும் இல்லை, சில நேரங்களில் பரம்பரை பரம்பரையாக வருகிறது, சில நேரங்களில் எந்த காரணமும் இன்றி தானாகவே ஏற்படுகிறது என்று மூத்த குழந்தை இதய நோய் நிபுணரும் சைல்டு ஹார்ட் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான டாக்டர் விகாஸ் கோலி கூறினார்.
"பெண்கள் கர்ப்ப காலத்தில் முறையான பரிசோதனைகள் செய்வதுடன் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். மது அருந்தினாலோ, ரத்த சர்க்கரை அளவை புறக்கணித்தாலோ பாதிப்பு வரலாம். குழந்தை மிக வேகமாக சுவாசித்தால், பால் குடிக்கும்போது சோர்வடைந்தால், விரல்கள் நீல நிறமாகத் தெரிந்தால், அதிகமாக வியர்த்தால், சரியாக எடை கூடவில்லை என்றால் மீண்டும் மீண்டும் மார்புத் தொற்றுகள் ஏற்பட்டால் கவனிக்க வேண்டும். தாமதமின்றி மருத்துவரை அணுக வேண்டும்" என்றும் கூறினார்.
நோயறிதலும் சிகிச்சையும்
பிறவி இதய நோயைக் கண்டறிவதில் எக்கோ கார்டியோகிராபி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அல்ட்ராசவுண்ட் அடிப்படையிலான இந்த கருவி இதயத்தின் அமைப்பு, ரத்த ஓட்டம், ரத்த அழுத்த வேறுபாடுகளைத் தருகிறது. சிக்கலான நிகழ்வுகளில் மருத்துவர்கள் எம்ஆர்ஐ, சிடி ஆஞ்சியோகிராபி, கதீட்டர் எனும் இதய வடிகுழாய் பொருத்தி அடைப்புகளைக் கண்டறிதல் ஆகிய சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
"பிறவி இதய நோயின் முக்கிய சவால், அதை முன்கூட்டியே கண்டறிவதுதான். ஏனெனில் புதிதாகப் பிறந்த குழந்தைகளிடம் அறிகுறிகள் பெரும்பாலும் நுட்பமாக இருக்கும். இருப்பினும், ஆக்ஸிஜன் செறிவை அளவிடும் ஒரு எளிய சோதனையான பல்ஸ் ஆக்சிமெட்ரி மூலமாக குழந்தை பிறந்த உடனேயே கண்டறிய முடியும். ஒரு எளிமையான செறிவுப் பரிசோதனை ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். குழந்தை பிறப்பதற்கு முன்பேகூட இதயக் குறைபாடுகளை பரிசோதிக்க முடியும். கர்ப்ப காலத்தில் செய்யப்படும் கரு எக்கோ கார்டியோகிராபி பரிசோதனை குழந்தையின் இதயத்தை விரிவாக ஆய்வு செய்கிறது. தேவைப்பட்டால் குழந்தை பிறந்த உடனேயே சிகிச்சைக்காக மருத்துவர்கள் தயாராக இது உதவுகிறது" என்று புவனேஸ்வரத்தில் உள்ள மணிபால் மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் டாக்டர் திவ்யரஞ்சன் பெஹேரா கூறுகிறார்.
சிகிச்சை முறைகளைப் பொருத்தவரை குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாட்டின் வகை மற்றும் தீவிரத்தைப் பொருத்தது. சில குழந்தைகளில், குறிப்பாக இதய செயலிழப்பு அறிகுறிகளைக் காட்டும் குழந்தைகளில், ஆரம்பத்தில் மருத்துவ சிகிச்சை போதுமானதாக இருக்கலாம், ஆனால் மருந்துகள் சுவாசிப்பதில் உள்ள சிரமத்தைப்போக்கவும் அதிகப்படியான திரவச் சுமையைக் குறைக்கவும் மட்டுமே உதவுகின்றன. கடுமையான அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் அறுவைச் சிகிச்சை, இதய மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
சிகிச்சைக்கான செலவு என்பது நோயின் வகை, அதன் சிக்கலான தன்மை, அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய கவனிப்பு, மருத்துவமனையில் தங்கும் காலம், கூடுதல் சிகிச்சைகள் ஆகியவற்றைப் பொருத்தது என்று டாக்டர் தாஸ் கூறினார்.
தொழில்நுட்ப முன்னேற்றங்களால் குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சையில் இந்தியா வலுவாக உள்ளது. இந்தியாவில் உள்ள பல மேம்பட்ட மையங்கள் உலகத் தரத்திற்கு இணையான முடிவுகளைப் பெற்றுள்ளன. அறுவைச் சிகிச்சை செய்வது பெரிய சவால் அல்ல, ஆனால் சரியான நேரத்தில் அறுவைச் சிகிச்சை மையத்தை அடைவதுதான் சவாலானது. பிறவி இதய நோய்களுக்கான சிகிச்சை மேம்பட்டுள்ளது. பல குறைபாடுகளை திறந்த அறுவைச் சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும். இதயத்தின் அடைப்புகளைச் சரிசெய்ய சிறிய குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் செயல்முறைகள் மிகச் சிறிய குழந்தைகளுக்கும் பாதுகாப்பானவை. சில குழந்தைகளுக்கு மேலும் அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால் சரியான நேரத்தில் செய்யப்படும்போது அதன் முடிவுகள் மிகச் சிறப்பாக இருப்பதாக டாக்டர் கோலி கூறினார்.
மருத்துவம் நவீனமடைந்துவிட்டதனால் நோயைக் கண்டறிவதும் அதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதும் எளிதாகிவிட்ட நிலையில் மக்களுக்குத் தேவையானது அதுகுறித்த விழிப்புணர்வு. அறிகுறிகள் தோன்றும்பட்சத்தில் கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட நோய்களின் அபாயம் உள்ளவர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.