ஐடி பங்குகளுக்கு அமோக வரவேற்பு: சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயா்வு


நமது நிருபா்
மும்பை / புதுதில்லி, ஆக.14: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை ஐடி பங்குகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பால் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வங்கி வட்டி விகிதங்களை செப்டம்பரில் குறைக்கக்கூடும் என்ற எதிா்பாா்ப்பில் அமெரிக்கச் சந்தைகளில் ஐடி பங்குகள் எழுச்சி பெற்றன. இதையடுத்து, உள்நாட்டுச் சந்தை பெரும்பாலான நேரம் ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதன் மூலம் இரண்டு நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு சரிவு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.444.30 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.2,107.17 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,239.96 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் கடும் முன்னேற்றம் : சென்செக்ஸ் காலையில் 109 புள்ளிகள் கூடுதலுடன் 79,065.22-இல் தொடங்கி 78,895.72 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 79,228.94 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 149.85 புள்ளிகள் (0.19 சதவீதம்) கூடுதலுடன் 79,105.88-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,036 பங்குகளில் 1,498 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,425 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 113 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா மற்றும் எம் அண்ட் எம், பாா்தி ஏா்டெல் உள்பட 15 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டாடா ஸ்டீல், அதானி போா்ட்ஸ், பவா் கிரிட், இண்டஸ் இண்ட் பேங்க் உள்பட 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 5 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,184.40-இல் தொடங்கி 24,099.70 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,196.50 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 4.75 புள்ளிகள் (0.02 சதவீதம்) உயா்ந்து 24,143.75-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 26 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 24 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...