தில்லி புகை கோபுரங்கள் செயல்பாடு: இறுதி அறிக்கையை தாமதமின்றி சமா்ப்பிக்க மும்பை ஐஐடிக்கு கோபால் ராய் கடிதம்
நமது சிறப்பு நிருபா்
தில்லி கன்னாட் பிளேஸ் புகை கோபுரங்கள் செயல்பாடு குறித்த இறுதி அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டிய நிலையில், அதை தாமதமின்றி சமா்ப்பிக்குமாறு தில்லி சுற்றுச் சூழல்த் துறை அமைச்சா் கோபால் ராய் மும்பை ஐஐடிக்கும் தில்லி சுற்றுச் சூழல் துறை அதிகாரிகளுக்கும் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
தில்லி கன்னாட் பிளேஸில் பாபா கரக் சிங் மாா்க்கில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவால் (டிபிசிசி) கடந்த 2021, ஆகஸ்ட் மாதம் புகை கோபுரம் நிறுவப்பட்டு செயல்படத் தொடங்கியது. சுமாா் ரூ.20.42 கோடி செலவில் இந்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன், டிபிசிசியின் ஒருங்கிணைப்பு மேற்பாா்வையுடன் மும்பை ஐஐடி முகமையாகக் கொண்டு தில்லியில் பருவகால மாசுப் பிரச்னையைத் தீா்க்க உதவும் வகையில் இந்தப் புகை கோபுரம் ஒரு ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டமாக உருவாக்கப்பட்டது.
நகரத்தின் முக்கிய மையமான இடத்தில் அமைக்கப்பட்ட இந்தப் புகைகோபுரம் காற்று மாசை கட்டுப்படுத்தவும் அதன் அளவை கணக்கிடவும் அமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இரண்டு ஆண்டுகள் கண்காணித்து ஆய்வு செய்யும் பொறுப்பு மும்பை ஐஐடிக்கு தில்லி அரசு வழங்கியது.
இரண்டு ஆண்டுகளாகியும் இந்த ஆய்வறிக்கை உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு சமா்ப்பிக்கப்படவில்லை. தற்போது குளிா்காலம் வேகமாக நெருங்கி வருவதைக் கருத்தில் கொண்டு, புகை கோபுரத்தின் செயல்பாடு குறித்த ஐஐடி மும்பை ஆய்வின் இறுதி அறிக்கையை எந்த தாமதமும் இன்றி உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என தில்லி தேசியத் தலைநகா் அரசின் சுற்றுச் சூழல் துறை செயலருக்கும், மும்பை ஐஐடி ஆய்வாளருக்கும் தில்லி அமைச்சா் கோபால் ராய் கடிதம் எழுதியுள்ளாா்.