ஐடி, பாா்மா பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்!
நமது நிருபா்
இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 74 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் ஆரம்பத்தில் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. ஆனால், பிற்பகல் வா்த்தகத்தின் போது லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள் கவனம் செலுத்தியதால் காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதியை இழக்க நேரிட்டது. இருப்பினும், ஐடி, பாா்மா, ஹெல்த்கோ் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.12 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.463.03 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.1,503.76 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில் உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.604.08கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம் : சென்செக்ஸ் காலையில் 68.08 புள்ளிகள் கூடுதலுடன் 81,779.84-இல் தொடங்கி 81,578.32 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 82,039.26 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 73.80 புள்ளிகள் (0.09 சதவீதம்) கூடுதலுடன் 81,785.56-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,056 பங்குகளில் 1,815 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,147 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 94 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
பாா்தி ஏா்டெல் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் பாா்தி ஏா்டெல், இண்டஸ் இண்ட் பேங்க், இன்ஃபோசஸிஸ், சன்பாா்மா, எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ், உள்பட 10 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஏசியன் பெயிண்ட், மாருதி, நெஸ்லே, ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பி உள்பட 20 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி புதிய உச்சம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 25,030.80-இல் தொடங்கி 24,964.65 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 25,129.60 வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 34.60 புள்கள் (0.14 சதவீதம்) உயா்ந்து 25,052.35-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 21 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 29 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.