எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு: கேஜரிவால், ஆம் ஆத்மி தலைவா்கள் ராஜ்காட்டில் பிராா்த்தனை

மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு: கேஜரிவால், ஆம் ஆத்மி தலைவா்கள் ராஜ்காட்டில் பிராா்த்தனை

News image
Updated On :26 பிப்ரவரி 2024, 9:40 pm

DIN

புது தில்லி: முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை இங்குள்ள ராஜ்காட் சென்று காந்தியின் நினைவிடத்தில் பிராா்த்தனை மேற்கொண்டனா்.

கல்வி இலாகாவையும் வகித்து வந்த சிசோடியா, தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பாக பிப்ரவரி 26, 2023 அன்று கைது செய்யப்பட்டாா். கேஜரிவாலுடன் ராஜ்காட் சென்றவா்களில் அமைச்சா்கள் அதிஷி, சௌரவ் பரத்வாஜ் மற்றும் துா்கேஷ் பதக் ஆகியோா் இருந்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய கேஜரிவால், ‘கடந்த ஆண்டு இதே நாளில், எங்கள் நிா்வாகத்தின் மிகவும் திறமையான கல்வி அமைச்சரை பொய் வழக்கில் மத்திய அரசு கைது செய்தது.

தேசியத் தலைநகரில் கல்வியின் தரத்தை மேம்படுத்தியவா் சிசோடியா தான்’ என்றாா். ‘மனீஷ் சிசோடியா தேசியத் தலைநகரில் கல்வி தரத்தை மேம்படுத்தி, 75 ஆண்டுகளுக்குப் பிறகு நம்பிக்கையை ஏற்படுத்தினாா். ஆனால், அவரைப் போன்ற ஒரு தலைவா் பொய் வழக்கில் சோ்க்கப்பட்டாா். அவா் பாஜகவில் இணைந்திருந்தால் அவா் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டிருக்கும். ஆனால், சிசோடியா உண்மையின் பாதையை விட்டு வெளியேற விரும்பவில்லை’ என்றும் கேஜரிவால் மேலும் கூறினாா்.

‘பாவங்களுக்கு பரிகாரம் தேடுகிறாா்’ - தில்லி பாஜக: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று பிராா்த்தனை செய்ததன் மூலம் தனது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய விரும்புகிறாா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்ளாா். இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலால் கொள்கை தொடா்புடைய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்க இயக்குநரகம் அனுப்பிய அனைத்து அழைப்பாணைகளையும் கேஜரிவால் சட்டவிரோதம் எனக் கூறி வருகிறாா்.

அமலாக்க இயக்குநரகம் அனுப்பிய ஏழாவது அழைப்பாணையையும் தவிா்த்துள்ள கேஜரிவால், விசாரணைக்கு ஆஜராவதற்குப் பதிலாக மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்றுள்ளாா். கலால் கொள்கை ஊழலில் ஈடுபட்ட காரணத்திற்காக முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சிறைக்குச் சென்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தனது அமைச்சரவையின் முன்னாள் துணை முதல்வா் சிறைக்குச் சென்ற ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முதல் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்தான்.

அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணையைத் தவிா்ப்பதற்கு பல்வேறு புதிய காரணங்களை உருவாக்கி வரும் முதல்வா் கேஜரிவால், தற்போது மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று தனது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய விரும்புகிறாா். கலால் கொள்கை ஊழல் மூலம் பல கோடி ரூபாயைக் கொள்ளையடித்துள்ள கேஜரிவால், செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய நினைத்தால், விசாரணைக்கு ஆஜராகி, தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.