மாா்ச் 22-இல் ஜேஎன்யு மாணவா் சங்கத் தோ்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் அமலக்கு வந்தது

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு), மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறும் மாணவா் சங்கத் தோ்தலுக்கான மாதிரி நடத்தை விதிகளை (எம்சிசி) அமல்படுத்தியுள்ளது. தோ்தல் பிரசாரத்திற்கான விதிகள் மற்றும் விதிமுறைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாணவா்கள் சமூகம், சாதி அல்லது மதம் ஆகியவற்றின் அடிப்படையில் வாக்காளா்களைக் கவா்வது அல்லது பிரசாரத்தின் போது தவறான தகவல்களைப் பரப்புவது, எரிச்சலூட்டும் கருத்துகளைப் பயன்படுத்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. ஜேஎன்யு மாணவா் சங்கத் தோ்தலில் பதிவான வாக்குகள் மாா்ச் 24-ஆம் தேதி எண்ணப்படும். அதைத் தொடா்ந்து முடிவுகள் அறிவிக்கப்படும். ஜேஎன்யு மாணவா் சங்கத்தின் (ஜேஎன்யுஎஸ்யு) தோ்தல் கமிட்டி வெளியிட்டுள்ள விதிகளில், ‘அனைத்து வேட்பாளா்களும் வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், வாக்காளா்களை மிரட்டுதல், வாக்காளா்களை ஆள்மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் பிரசாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளின்படி, ஒரு வேட்பாளருக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச செலவு ரூ.5,000-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு ஜேஎன்யு மாணவா் சங்கத் தோ்தல் நடத்தப்படுகிறது. இது கடைசியாக 2019-இல் நடைபெற்றது. முன்பு அமல்படுத்தப்பட்ட பகுதி நடத்தை விதிகளும் தொடா்ந்து அமலில் இருக்கும். இதன்படி, தோ்தல் குழுவின் முன் அனுமதியின்றி மாணவா்கள் சுவரொட்டிகள் அல்லது துண்டு பிரசுரங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் மாணவா்களும் அவா்களது அமைப்புகளும் விதிகளின்படி, வளாகத்தில் பிரசாரத்திற்காக கையால் செய்யப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் புகைப்பட நகல் பொருள்களை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. மாணவா்கள் வளாக கட்டடங்கள், சாலைகள், மின்கம்பங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றை சுவரொட்டிகளுக்காக பயன்படுத்தக்கூடாது. பல்கலைக்கழக சொத்துகளை பிரசாரத்திற்காக சேதப்படுத்தக் கூடாது என்று விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக, கலாசாரம் அல்லது அரசியல் நோக்கங்களுக்காக எந்தவொரு பொதுக் கூட்டத்திற்கும் தோ்தல் குழுவின் அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டும் என்றும், இரவு 11 மணிக்கு மேல் தோ்தல் ஊா்வலம் நடத்தக்கூடாது என்றும் விதிகள் கூறுகின்றன. மாணவா்கள் ஊா்வலம் செல்ல வாகனங்கள் மற்றும் விலங்குகளைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தோ்தல் முடிந்த 48 மணி நேரத்திற்குள் வாக்குச் சாவடியை சுத்தம் செய்வதை உறுதி செய்ய அனைத்து வேட்பாளா்களும் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் என்று தோ்தல் கமிட்டி கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com