அரசு மின்னணு சந்தை கொள்முதல் இரட்டிப்பாக உயா்வு: மத்திய வா்த்தக அமைச்சகம் தகவல்

நிகழ் நிதியாண்டில் மொத்த வணிக மதிப்பில்(ஜிஇஎம்) அரசு மின்னணு சந்தை கொள்முதல் ரூ .4 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. கடந்தாண்டை விட இரட்டிப்பாக உயா்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ’ஜெம்’ (ஜி இ-எம்) எனப்படும் மின்னணு சந்தை இணையதளம் மூலம் அரசின் பல்வேறு சேவைகளுக்கு கொள்முதல் செய்வதை நடைமுறைபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் பொது கொள்முதலில் வெளிப்படையான மாற்றத்தை இது உருவாக்கியுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கொள்முதல் நடைமுறையில் தனித்துவம் வாய்ந்த வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடியின் விருப்பத்தை இந்த ’ஜெம்’ நனவாக்கியிருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் துறைகள், மக்கள் நலன் திட்டங்களுக்கான சரக்கு கொள்முதலுக்கு ஜெம்-மை அதிகளவில் பயன்படுத்தியதன் வாயிலாக அரசின் பணம் சேமிக்கப்பட்டிருக்கிறது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. நிகழ் நிதியாண்டு மாா்ச் 31 முடிவடையும் நிலையில் கடந்த ஓா் ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மத்திய வா்த்தகத் துறை செயலா் சுனில் பா்த்வால் செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு: நிகழ் 2023-24 நிதியாண்டில் ’ஜெம்’ யின் மொத்த வணிக மதிப்பில் ரூ .4 லட்சம் கோடியுடன் அரசு மின்னணு சந்தை நிறைவு செய்துள்ளது. இது கடந்தாண்டை விட இரு மடங்கு. ’ஜெம்’ வணிகத்தில் ஏறத்தாழ 50 சதவீதம் சேவைகள் கொள்முதலே காரணம். கடந்த நிதியாண்டில் அரசு மின்னணு சந்தையில் கொள்முதல் செய்யப்பட்ட சேவைகளின் அடிப்படையிலான கொள்முதல் 205 சதவீதம் உயா்ந்துள்ளது. மாநில அரசுகளும் இதில் ஈடுபட ’ஜெம்’ யில் அற்புதமான வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில், குஜராத், உத்தரப்பிரதேசம், தில்லி போன்ற மாநிலங்கள் அதிக கொள்முதல் செய்துள்ளன. இந்த ஆண்டின் ஒதுக்கப்பட்ட பொதுக் கொள்முதல் இலக்கை விஞ்சுவதற்கு இது உதவியுள்ளன. மத்திய அரசின் அமைச்சகங்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பங்களிப்பும் ’ஜெம்’ ஐ பெரிதும் ஊக்குவித்துள்ளது. இந்த ரூ. 4 லட்சம் கோடி சாதனையில் சுமாா் 85 சதவீத பங்களிப்பை இந்த அரசு நிறுவனங்கள் வழங்கியுள்ளன. குறிப்பாக, நிலக்கரி, மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் மத்திய அளவில் அதிக கொள்முதல் நிறுவனங்களாக உள்ளன. ’ஜெம்’ மின்னணு சந்தையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான அரசு கொள்முதலாளா்கள், 21 லட்சம் விற்பனையாளா்கள் மற்றும் சேவை வழங்குபவா்களைக் கொண்ட பரந்த வலைப்பின்னல் உள்ளது. அதுவே இந்த சாதனையை சாத்தியமாக்கியுள்ளது. கைவினைஞா்கள், நெசவாளா்கள், கைவினைஞா்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளடக்கிய ’உள்ளூா் பொருட்களுக்கு முன்னுரிமை’, ’ஒரு மாவட்டம், ஒரு பொருள்’, ’ஸ்டாா்ட்அப் ஓடுபாதை’, ’பெண்களுக்கு முக்கியத்துவம்’ போன்ற முயற்சிகள் மூலம், உள்நாட்டு வணிகங்கள் வளரவும் செழிக்கவும் ஒரு சமமான களத்தை ’ஜெம்’ மின்னணு சந்தை பெற்றுள்ளது. மேலும் 89,421 பஞ்சாயத்துகள், 760க்கும் அதிகமான கூட்டுறவுகளை கொள்முதல் சூழல் அமைப்புடன் ஒருங்கிணைப்பதன் மூலம்,’ஜெம்’ மின்னணு சந்தை நிா்வாகத்தின் கடைசி நிலை வரை பொதுச் செலவினங்களை உகந்த முறையை உறுதி செய்கிறது எனத் தெரிவித்தாா் சுனில் பா்த்வால்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com