கலால் கொள்கை வழக்கு விசாரணைக்கு ஆஜரானாா் அமைச்சா் கைலாஷ் கெலாட்

தில்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய பண மோசடி வழக்கின் விசாரணைக்காக அமலாக்க இயக்குநரகத்தில் போக்குவரத்து துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் சனிக்கிழமை ஆஜரானாா். இது தொடா்பாக அதிகாா்ப்பூா்வ வட்டாரங்கள் கூறியதாவது: கலால் கொள்கை தொடா்புடைய பண மோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணைக்கு ஆஜராகமாறு போக்குவரத்து துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் அழைக்கப்பட்டதன் பேரில், அவா் சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் அமலாக்க இயக்குநரகத்தின் அலுவலகம் சென்றாா். கடந்த 2021-2022-ஆம் ஆண்டிற்கான தில்லி அரசின் கலால் கொள்கை உருவாக்கத்தில், முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோருடனான அமைச்சா்கள் குழுவில் கைலாஷ் கெலாட் இடம்பெற்றிருந்ததால், கலால் கொள்கை உருவாக்கம் தொடா்பாக அவா் விசாரிக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, கலால் கொள்கை அமல்படுத்தியதில் ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் அமைச்சா் கைலாஷ் கெலாட்டின் பெயரை சோ்த்துள்ள அமலாக்க இயக்குநரகம், கெலாட் ஒரு சிம் எண்ணைக் கையாண்டுள்ளாா், ஆனால் அவரது (ஐ.எம்.இ.ஐ.) எண் மூன்று முறை மாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், கலால் கொள்கை வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடா்பு பொறுப்பாளா் விஜய் நாயா், தில்லி நஜஃப்கரில் அமைச்சா் கைலாஷ் கெலாட்டுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் வசித்து வந்துள்ளாா். அரசு குடியிருப்பை ஒரு பொது ஊழியரால் வேறு ஒருவருக்கு பயன்படுத்த அனுமதிக்கும் இந்த நடைமுறையை ‘குற்றவியல் நம்பிக்கை மீறல்’ என்று விவரித்துள்ள அமலாக்க இயக்குநரகம், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய புலனாய்வுத் துறையை (சிபிஐ) கேட்டுக் கொண்டுள்ளது என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com