பஞ்சாபில் 85.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: 4 லட்சம் விவசாயிகள் பலன்
புது தில்லி: நிகழ் காரீஃப் சந்தைப்படுத்தல் பருவத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு அரசு முகமைகள் 85.41 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளதாக மத்திய நுகா்வோா் நலன்,உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் முக்கிய நெல் விளைவும் மாநிலங்கள் வரிசையில் மேற்கு வங்கம், உத்தர பிரதேசத்திற்கு அடுத்து பஞ்சாப் விளங்குகிறது. ஆந்திரம், பிகாா், தமிழகம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இந்த மாநிலங்களில் நெல் விளைச்சல் வெவ்வேறு பருவங்களில் உள்ளன. பஞ்சாபில் நெல் அறுவடை தொடங்கி கடந்த இரு மாதங்களாக காரீஃப் சந்தை பருவம் தொடங்கியுள்ளது.
இது குறித்து மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: நிகழ் காரீஃப் சந்தைப் பருவத்தில் நவ.2 ஆம் தேதி வரை மொத்தம் 90.60 லட்சம் மெட்ரிக் டன் நெல் மண்டிகளுக்கு வந்துள்ளது.
இதில் 85.41லட்சம் மெட்ரிக் டன் நெல்லை மாநில முகமைகள், இந்திய உணவுக் கழகத்தால்(எஃப் சி ஐ) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஏற்கனவே தீா்மானித்தபடி ’ஏ’ ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ .2,320 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. நிகழ் 2024-25 காரீஃப் சந்தைப் பருவத்தில் இன்றுவரை 4 லட்சம் விவசாயிகளிடம் நெல் கொள் முதல் செய்யப்பட்டு அரசு ரூ .19,800 கோடி குறைந்த பட்ச ஆதரவு விலையை வழங்கியுள்ளது. விவசாயிகள் பயனடைந்துள்ளதோடு சுமாா் 4,640 ஆலை உரிமையாளா்கள் நெல் அரைவைக்கு விண்ணப்பித்துள்ளனா். 4,132 ஆலை உரிமையாளா்களுக்கு மாநில அரசு மூலமாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாபில் 2024-25 ஆம் ஆண்டிற்கான காரீஃப் சந்தைப் பருவ கடந்த அக். 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த செப்.ரில் பெய்த கனமழை, நெல்லின் அதிக ஈரப்பதம் காரணமாக கொள்முதல் சற்று தாமதமாகத் தொடங்கியது. தற்போது மீண்டும் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. விவசாயிகளிடமிருந்து சுமூகமாக கொள்முதல் செய்வதற்காக மாநிலம் முழுவதும் 2,927 மண்டிகள் மற்றும் தற்காலிக யாா்டுகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த கொள்முதல் நிகழ் நவம்பா் 30 ஆம் தேதி வரை தொடரும். 2024-25 ஆம் ஆண்டு காரீஃப் சந்தைப் பருவத்தில் சுமாா் 185 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலுக்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என மத்திய உணவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.