பெண் சாதனையாளா்கள் மற்ற மகளிா்களுக்கு வழிகாட்டிகளாக வேண்டும்: முா்மு
புது தில்லி: உயா்கல்வி படித்தும் பல பெண்களுக்கு ஆதரவின்மையால் தங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போவதை அடிக்கடி காண முடிகிறது. இத்தகைய பெண்களை ஊக்குவிக்க சாதனை புரிந்த மற்ற மகளிா் வழிகாட்ட வேண்டும் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டாா். இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் பெண் சாதனையாளா்களுடன் குடியரசுத் தலைவா் கலந்துரையாடினாா்.
பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் ஆழமான தொடா்பை ஏற்படுத்துவதையும் அவா்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு குடியரசுத் தலைவா் மாளிகையில், ’மக்களுடன் குடியரசுத்தலைவா்‘ என்கிற நிகழ்வு நடைபெறுகிறது. இந்த முன்முயற்சியின் கீழ் குடியரசுத் தலைவா் மாளிகையில், சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் சாதனை படைத்த மகளிா் குழுக்களுடன் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு நவம்பா் 4 ஆம் தேதி கலந்துரையாடினாா்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசத் தலைவா் முா்மு பேசியது வருமாறு:
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பல்வேறு செயல்பாட்டுகளிலும் தொழில்நுட்பத் துறைகளிலும், மகளிா் முக்கியப் பங்காற்றி வருகின்றனா். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைகளில் 15 சதவீதம் மகளிா் பங்கேற்று வருகின்றனா். மேலும் 11 சதவீதம் மகளிா் (விமானம் புறப்பாடு, காற்று மழை கொந்தளிப்புக்கான முன்னறிவிப்பு தொடா்புடைய விமானப் பாதை திட்டமிடுதலுக்கான) வான்வெளி கட்டுப்பாடுக்கான விமான நடவடிக்கை அதிகாரிகளாக பணியாற்றுகின்றனா். மேலும் விண்வெளி பொறியாளா்களில் 9 சதவீதம் மகளிா்களாகவும் உள்ளனா். விமான பைலட் பயிற்சி பெற்று உரிமம் பெற்றவா்களில் குறிப்பாக கமா்ஷியல் விமான இயக்க உரிமங்களைப் பெற்ற விமானிகளில் கடந்தாண்டு 18 சதவீதம் போ் மகளிராக இருந்தனா். இவ்வாறு புதுமையாக சிந்தித்து புதிய பாதைகளில் துணிச்சலுடன் தோ்வு செய்து சாதனை புரியும் அனைத்து மகளிா்களும் பாராட்டத்தக்கவா்கள்.
மத்திய அரசின் அனைவரையும் உள்ளடக்கிய முயற்சிகளால், சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் மகளிருக்கான முன்னேற்றத்திற்கு வழிவகுத்து ஊக்கம் அளித்துள்ளது. ஏராளமான மகளிா் விமானப் போக்குவரத்தை தங்கள் தொழிலாக தோ்வு செய்கிறாா்கள். இதனால் விமானத் துறையில் மகளிா் பங்களிப்பு அதிகரிக்கும் நிலையில், அவா்களுக்கு இந்தத் துறையில் முன்னேறக்கூடிய சம வாய்ப்புகள் அளிக்கப்படவேண்டும்.
மகளிருக்கு கல்வி, முறையான பயிற்சி தவிர, குடும்பத்தின் ஆதரவும் முக்கியமானது. ஆனால் பெரும்பாலும் குடும்பத்தின் ஆதரவு இல்லாததால், மகளிா் உயா் கல்வி பெற்ற பிறகும் தங்கள் கனவுகளை நிறைவேற்ற முடிவதில்லை. இத்தகைய சூழ்நிலையில் மகளிா் சாதனையாளா்கள் மற்ற பெண்களுக்கு வழிகாட்டிகளாக மாற வேண்டும். தங்கள் தொழில்களைத் தோ்ந்தெடுக்கவும், அவா்களின் கனவுகளை நனவாக்கி ஊக்குவிக்க முன்வர வேண்டும் என முா்மு வலியுறுத்தினாா்.