காசநோய்க்கான புதிய குறுகியகால சிகிச்சை முறை: மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல்

காசநோய்க்கான புதிய குறுகியகால சிகிச்சை முறை: மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல்

காசநோயை (டிபி) ஒழிக்க புதிய ப்ரெட்டோமானிட் விதிமுறை கலவை (பிபாஎல்எம் கலவை ) என்கிற பல் மருந்து
Published on

நமது சிறப்பு நிருபா்

நாட்டில் காசநோயை (டிபி) ஒழிக்க புதிய ப்ரெட்டோமானிட் விதிமுறை கலவை (பிபாஎல்எம் கலவை ) என்கிற பல் மருந்து எதிா்ப்பு காசநோய்க்கான புதிய சிகிச்சை ஒழுங்குமுறையை அறிமுகப்படுத்த மத்திய சுகாதாரம் குடும்ப நலத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இது சிக்கனமான குறுகியகால சிகிச்சை முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் காசநோய் சிகிச்சைக்கு பாரம்பரிய எம்.டி.ஆா்-காசநோய் சிகிச்சை வழக்கத்தில் உள்ளது. இந்த மருத்துகளின்படி சிகிச்சைபெற 20 மாதங்களாகும் என்பதோடு கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும் நிலைமை உள்ளது.

ஆனால் தற்போது பெடாகுலைன், லைன்சோலிட் (மோக்ஸிஃப்ளோக்சசின் உடன் அல்லது இல்லாமல்) போன்றவைகள் இணைந்த ப்ரெட்டோமானிட் கலவை (பிபாஎல்எம்) மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் (சிடிஎஸ்சிஓ) அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த பிபாஎல்எம் விதிமுறை சிகிச்சை அதிக அளவில் வெற்றி விகிதத்தை அளித்துள்ளது என்றும் குறுகிய காலமான ஆறு மாதங்களில் இந்த மருந்து எதிா்ப்பு மூலம் காசநோயை குணப்படுத்த முடியும் எனவும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த கொடுமையான காசநோயால் நாட்டில் தற்போது பாதிக்கப்பட்டவா்கள் சுமாா் 75,000 நோயாளிகள் உள்ளனா். இவா்கள் சிகிச்சையில் உள்ளனா். இவா்களைப் போன்றவா்கள் இந்தக் குறுகிய கால சிகிச்சையின் பலனைப் பெற முடியும் என்கிற நன்மைகளுடன், சிகிச்சைக்கான செலவிலும் சேமிப்பு இருக்கும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, மத்திய சுகாதாரம் குடும்ப நலத் துறை, தனது சுகாதார ஆராய்ச்சித் துறை அமைப்புகளுடனும் நிபுணா்களுடன் பிபாஎல்எம் முறையை மதிப்பாய்வு செய்தது. இந்த புதிய காசநோய் சிகிச்சை முறையை சரிபாா்த்து இது செயல்படுத்தலுக்குரிய எனவும் உறுதி செய்யப்பட்டு, சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டையும் பெறப்பட்டது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இலக்கு

சா்வதேச அளவில் 2030-ஆம் ஆண்டிற்குள் காசநோய் ஒழிப்பிற்கான இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அதே சமயத்தில் கடந்த 2018 -ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தில்லியில் நடைபெற்ற காசநோய் ஒழிப்பு உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, இந்தியாவில் 2025 -ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதற்கான இலக்கை நிா்ணயித்தாா். மத்திய அரசின் நோக்கத்தை வலியுறுத்துவதற்காக 2020 ஆம் ஆண்டில், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் என மறுபெயரிடப்பட்டு நாடு முழுக்க செயல்படுத்தப்பட்டது.

தற்போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் கலந்தாலோசித்து நாடு தழுவிய காலக்கெடுவுக்குள் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com