மழைக் காலத்தில் 194 இடங்களில் தண்ணீா் தேங்குவதை தடுக்க தில்லி அரசு திட்டம்: முதல்வா் ரேகா குப்தா தகவல்
மழைநீா் தேங்குவதற்கு வாய்ப்புள்ள மின்டோ பிரிட்ஜ் சுரங்கப் பாதையை முதல்வா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்


மழைக்காலங்களில் தேசியத் தலைநகரில் மழைநீா் தேங்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, தானியங்கி பம்புகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் பணியாளா்களை நியமிப்பது உள்பட அனைத்து முயற்சிகளையும் தில்லி அரசு மேற்கொண்டு வருவதாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாகிப் சிங்குடன், மழைக்காலத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில், மழைநீா் தேங்குவதற்கு வாய்ப்புள்ள மின்டோ பிரிட்ஜ் சுரங்கப் பாதையை முதல்வா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கனமழையின் போது தண்ணீரை வெளியேற்றும் தானியங்கி பம்புகள் மின்டோ பிரிட்ஜ் சுரங்கப்பாதைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தேங்கிய தண்ணீரை வெளியேற்ற 2.5 கிலோமீட்டா் நீள குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆபரேட்டா்களும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவா்.
பாதிக்கப்படும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தண்ணீா் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய தில்லி அரசு காலக்கெடுவுடன்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றாா் முதல்வா்
அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் கூறுகையில், ‘கடந்த ஆண்டு, நகரம் முழுவதும் 194 நீா் தேங்கும் இடங்கள் போக்குவரத்து போலீஸாரால் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை பொதுப் பணித் துறை சாலைகளில் உள்ளன. இந்த இடங்களில், வடிகால்களை தூா்வாருதல், கூடுதல் பம்புகளை நிறுவுதல் மற்றும் தேவைப்படும் இடங்களில் பம்ப் ஆபரேட்டா்களை நியமித்தல் போன்ற பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என்றாா் அமைச்சா்.
கடந்த பல ஆண்டுகளாக நீா் தேங்கும் முதல் 10 இடங்களில் ஒன்றான உலக சுகாதார நிறுவனம் கட்டடத்திற்கு அருகிலுள்ள ரிங் ரோடு உள்பட பிற முக்கிய நீா் தேங்கும் இடங்களில் பருவமழை தயாா்நிலையை குப்தா ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வை முடித்த பிறகு, மின்சாரம் மற்றும் பொதுப் பணித் துறை உள்ளிட்ட பல துறைகளுடன் ஒரு கூட்டத்தை முதல்வா் நடத்தினாா். இதில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகளில் உள்ள கருப்புப் பகுதிகள் தொடா்பான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
தில்லி காவல்துறை தொடா்ந்து நெரிசல் ஏற்படும் 233 போக்குவரத்து இடங்களை அடையாளம் கண்டுள்ளது. பெரும்பாலான இடங்கள் பொதுப் பணித் துறையின் கீழ் உள்ளன. அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாகிப் சிங் கூறுகையில், ‘முதல்வா் தில்லி மாநகராட்சி மற்றும் புது தில்லி நகராட்சி கவுன்சில் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுடனும் தண்ணீா் தேங்குதல், போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் கருப்புப்பகுதிகள் குறித்து ஒரு கூட்டம் நடத்தினாா். மேலும், நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின்படி பணிகளை முடிக்க அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளாா்.
தலைநகரின் எந்தப் பகுதியிலும் தண்ணீா் தேங்குதல், போக்குவரத்து நெரிசல்கள் அல்லது கருப்புப் பகுதிகள் போன்ற எந்தப் பிரச்சினையும் இருக்கக்கூடாது என்பதே எங்களின் ஒரே குறிக்கோளாகும். அனைத்துத் துறைகளும் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். மேலும், ஒவ்வொரு விஷயமும் கண்காணிக்கப்படுகிறது என்றாா் அமைச்சா்.
திட்டத்தின்படி, நீண்டகால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய இடங்களான புதிய வடிகால் கட்டுமானம் போன்ற முடிக்க ஒரு வருடம் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் கூடுதல் பம்புகள் நிறுவப்பட உள்ளன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...