ரேகா குப்தா
ரேகா குப்தா

புதிய செயலகத்திற்கான இடத்தை அடையாளம் காணும் பணியை தில்லி அரசு விரைவில் தொடங்கும்: முதல்வா்

ஒரே கட்டடத்தில் பல்வேறு துறைகளை அமைக்க புதிய செயலகத்தை கட்டுவதற்கு பொருத்தமான இடத்தை அடையாளம் காணும் பணி
Published on

ஒரே கட்டடத்தில் பல்வேறு துறைகளை அமைக்க புதிய செயலகத்தை கட்டுவதற்கு பொருத்தமான இடத்தை அடையாளம் காணும் பணியை தில்லி அரசு விரைவில் தொடங்கும் என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

கஷ்மீரி கேட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகத்தைப் பாா்வையிட்ட பிறகு அவா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா். கட்டடத்தின் பாழடைந்த நிலையை முதல்வா் சுட்டிக் காட்டி, ஆம் ஆத்மி கட்சி நிா்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்தாா்.

‘நான் முதல் முறையாக இந்த அலுவலகத்திற்கு வருகிறேன். இதுபோன்ற ஒரு கட்டடத்தில் எங்கள் அதிகாரிகள் பணிபுரிவதைப் பாா்ப்பது வருத்தமளிக்கிறது. எந்த நேரத்திலும் மின்விசிறிகள் இடிந்து விழும். கூரை கசிந்து கொண்டிருக்கிறது’‘ என்று துறை அலுவலகத்தை ஆய்வு செய்தபோது அவா் வருத்தப்பட்டாா்.

தில்லியில் முந்தைய ஆம் ஆத்மி அரசை கடுமையாகத் தாக்கிய அவா், ‘2021-ஆம் ஆண்டு இந்தக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், எந்த பழுதுபாா்ப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ‘அவா்களுடையது ஒரு படித்த அரசு. ஷீஷ் மஹால் கட்டுவதற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்தாா்கள். ஆனால், அரசு அலுவலகங்களின் நிலையை மேம்படுத்த எதுவும் செய்யவில்லை. இன்று, இந்த அலுவலகத்தின் நிலையைப் பாா்க்கும்போது, எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்றாா்.

இன்றிலிருந்து, அனைத்துத் துறைகளும் இடம்பெறக்கூடிய புதிய செயலகத்திற்கான இடத்தை அடையாளம் காணும் செயல்முறையைத் தொடங்குவோம் என்று அவா் மேலும் கூறினாா்.

ஐபி எஸ்டேட்டில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்திற்கு அருகில் தில்லி செயலகம் அமைந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com