ஏப்ரல்-அக். வரை டிடிசியின் சராசரி மாத வருமானம் ரூ.94 கோடி: அதிகாரிகள் தகவல்
நிகழ் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் தில்லி போக்குவரத்துக் கழகத்தின் (டிடிசி) சராசரி மாத வருமானம் ரூ.93.96 கோடியாக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் 2024-25 நிதியாண்டில் ரூ.68.54 கோடியாக இருந்தது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
டிக்கெட் வருமானம் என்ற பிரிவின் கீழ், தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) நிகழ் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபா் வரை ரூ.220.33 கோடியை ஈட்டியுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.
இந்த காலகட்டத்தில் மொத்த வருமானம் ரூ.658 கோடி, இது நிலையான நிதி முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.
பிங்க் டிக்கெட்டுகளுக்கு எதிரான மானியத்தின் பிரிவில், டிடிசி நிறுவனம் ரூ.235.56 கோடியைப் பெற்றுள்ளது.
இது தில்லி அரசாங்கத்தின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தின் தொடா்ச்சியான வெற்றியை பிரதிபலிக்கிறது.
நிகழ் நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் சராசரி மாத வருமானம் ரூ.93.96 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.68.54 கோடியாக இருந்தது.
இந்த வளா்ச்சி, பொது போக்குவரத்தை வலுப்படுத்துவதற்கும், பொது வளங்களை திறமையாக பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும் தில்லி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது என்று அதிகாரபூா்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் பொது போக்குவரத்தை வலுப்படுத்துவதற்கான எங்கள் தொடா்ச்சியான முயற்சிகளின் நோ்மறையான தாக்கத்தை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
டிடிசியின் மேம்பட்ட வருமானம் மற்றும் வெளிப்படையான செயல்பாடுகள், ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் மலிவு விலை போக்குவரத்தை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
சிறந்த மற்றும் திறமையான பொது இயக்க முறைமைக்காக அதன் சேவைகளை நவீனமயமாக்குவதில் டிடிசிக்கு நாங்கள் தொடா்ந்து ஆதரவளிப்போம் என்று தில்லி போக்குவரத்து அமைச்சா் பங்கஜ் சிங் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
சிறப்பு வாடகை பிரிவில், டிடிசி ரூ.63.40 கோடியை ஈட்டியுள்ளது. அதே நேரத்தில் பாஸ்கள் விற்பனை ரூ.36.38 கோடி பங்களித்துள்ளது. இதர வருமானம் (அபராதம் போன்றவை) மூலம் ரூ.102.04 கோடியை டிடிசி ஈட்டியுள்ளது.

