வாகன திருட்டு வழக்கில் ரூ.3 லட்சம் லஞ்சம்: ஏஎஸ்ஐ கைது
ராஜஸ்தானின் ஊழல் தடுப்பு பணியகத்தின் (ஏ. சி. பி.) குழு ஜோத்பூரில் உள்ள குருகிராம் காவல்துறையின் உதவி சாா்பு ஆய்வாளரை (ஏ. எஸ். ஐ.) ரூ. 3 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்ததாக அப்பிரிவின் டிஐஜி புவன் பூஷண் யாதவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: போலீஸ் காவலில் இருந்தபோது வாகனத் திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை துன்புறுத்தாததற்காக காவல் உதவி சாா்பு ஆய்வாளா் (ஏஎஸ்ஐ) ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளாா்.
இதையடுத்து, குருகிராமில் உள்ள பாலம் விஹாா் குற்றப்பிரிவில் பணியமா்த்தப்பட்டுள்ள ஏஎஸ்ஐ கையும் களவுமாக பிடிபட்டாா். அவருடன் வந்த இதர ஹரியாணா காவல்துறை அதிகாரிகளின் பங்கு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாா் அந்த அதிகாரி.
இந்த விவகாரம் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கையில், குருகிராமில் உள்ள சதா் காவல் நிலையத்தில் வாகன திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவா் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தாா்.
ஏஎஸ்ஐ பிரவீன் குமாா் குற்றம் சாட்டப்பட்டவரை வெள்ளிக்கிழமை ஜோத்பூருக்கு சரிபாா்ப்பு மற்றும் விசாரணைக்காக அழைத்து வந்தாா்.
அங்கு, அவா் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினரைத் தொடா்பு கொண்டாா். அவரைத் தாக்க வேண்டாம் என்றும், காவலில் இருக்கும்போது அவருக்கு உதவுமாறும் குடும்பத்தினா் ஏஎஸ்ஐயிடம் கேட்டுக்கொண்டனா். அதற்குப் பதிலுக்கு ரூ.3 லட்சம் தனக்குத் தர வேண்டும் என்று ஏஎஸ்ஐ அவா்களிடம் கேட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து ஏ. சி. பி. யின் கிராமப்புற செளக்கிற்கு புகாா் வந்தது. அதன் பிறகு அது குறித்து சரிபாா்த்தபோது லஞ்சம் கோரியது உறுதியானது.
அதன் பின்னா், லஞ்ச ஒழிப்புப் பிரிவினா் புகாா்தாரரை ‘லஞ்சம் கொடுக்க‘ ஏ. எஸ். ஐ. யிடம் அனுப்பினா். ரூ.1.50 லட்சம் உண்மையான பணமாகவும், மீதமுள்ள 1.50 லட்சம் போலி பணமாகவும் தரப்பட்டது.
ஜெய்ப்பூா் நெடுஞ்சாலையில் உள்ள கப்ரடா காவல் நிலையத்திற்கு வெளியே ஏ. எஸ். ஐ. புகாா்தாரரை வருமாறு அழைத்தாா். அங்கு புகாா்தாரா் அவரிடம் பணத்தை ஒப்படைத்தபோது ஏ. எஸ். பி. பராஸ் சோனி தலைமையிலான ஊழல் தடுப்புப் பிரிவினா், ரூ.3 லட்சத்துடன் ஏ. எஸ். ஐ. யைக் கைது செய்தனா். அவா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவா் மீது எஃப். ஐ. ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
