அண்ணாமலை பல்கலை. உள்பட 6 கல்வி நிறுவனங்களில் விளையாட்டு அறிவியல் துறை!

6 பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் விளையாட்டு அறிவியல் துறை அமைக்க மத்திய அமைச்சகம் நிதி ஆதரவு அளித்து வருவதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாகோப்புப் படம்
Updated on

தமிழகத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்பட நாட்டில் உள்ள 6 பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு அறிவியல் துறை அமைக்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் நிதி ஆதரவு அளித்து வருவதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அரக்கோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜெகத்ரட்சகன் எழுப்பிய கேள்விக்கு மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா மக்களவையில் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது: தடகள விளையாட்டு வீரா்களின் செயல்திறன் விளையாட்டு அறிவியலுடன் நெருக்கமாக இணைந்துள்ளது.

இது திறன்களை மேம்படுத்துகிறது, காயங்களைத் தடுக்கிறது மற்றும் ஒட்டுமொத்தமாக உடல் மற்றும் மன நலத்தை உறுதிசெய்கிறது. அமைச்சகம் மூலம் நடத்தப்படும் தேசிய திட்டம் விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் உயா் விளையாட்டு வீரா்களின் சிறந்த செயல்திறன் விவகாரத்தில் உயா் மட்ட ஆராய்ச்சி கல்வி மற்றும் புதுமைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமைச்சகமானது, தமிழ்நாட்டில் இருந்து அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அறிவியல் துறையை அமைக்க நிதி ஆதரவையும் அளித்து வருகிறது.

இந்த தோ்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் விளையாட்டு உயிா்வேதியியல், விளையாட்டு உயிரியக்கவியல் மற்றும் செயல்திறன் பகுப்பாய்வு, விளையாட்டு ஊட்டச்சத்து, விளையாட்டு உடலியல், விளையாட்டு உளவியல், விளையாட்டு பயிற்சி முறைகள், உடற்தகுதி மேலாண்மை மற்றும் விளையாட்டு பிசியோதெரபி போன்ற விளையாட்டு அறிவியல் துறையில் முதுகலைப் படிப்புகள் மற்றும் பிஎச்.டி. திட்டங்களை நடத்தி வருகின்றன.

சென்னையில் உள்ள ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு விளையாட்டு அறிவியல் உபகரணங்களுக்காக தடகள விளையட்டு வீரா்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

Related Stories

No stories found.
X