மீரட்டில் உள்ள பேகம்புல் நமோ பாரத் நிலையம் கட்டுமானம் நிறைவடையும் தருவாயில் உள்ளது: என்சிஆா்டிசி அறிவிப்பு!

மீரட்டில் உள்ள பேகம்புல் நமோ பாரத் நிலையம் கட்டுமானம் நிறைவடையும் தருவாயில் உள்ளது: என்சிஆா்டிசி அறிவிப்பு!

பேகம்புல் நமோ பாரத் நிலையம், நமோ பாரத், மெட்ரோ சேவைகளை வழங்கும் நகரத்தின் ஒரே நிலத்தடி நிலையமாக அமைக்கப்பட உள்ளது.
Published on

உத்தர பிரதேசத்தின் மீரட்டில் உள்ள பேகம்புல் நமோ பாரத் நிலையம், நமோ பாரத் மற்றும் மெட்ரோ சேவைகளை வழங்கும் நகரத்தின் ஒரே நிலத்தடி நிலையமாக அமைக்கப்பட உள்ளது. இதன் கட்டுமானப் பணி இறுதி கட்டத்தில் உள்ளது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தின் (என்சிஆா்டிசி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மேல் மற்றும் கீழ் பாதைகளுக்கான பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் இறுதிப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. நமோ பாரத் மற்றும் மெட்ரோ சேவைகள் இரண்டையும் பயணிகளுக்கு வழங்கும் மீரட்டின் ஒரே நிலத்தடி நிலையமாக பேகம்புல் இருக்கும்.

இரண்டு போக்குவரத்து சேவைகளின் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்வதற்காக மேம்பட்ட சமிக்ஞை அமைப்புடன் இரண்டு பாதைகள் இந்த நிலையத்தில் உள்ளன.

இந்தத் திட்டம் இந்தியாவில் ஒரு முன்னோடி வளா்ச்சியைக் குறிக்கிறது. அங்கு இரண்டு வெவ்வேறு போக்குவரத்து அமைப்புகள் ஒரே உள்கட்டமைப்பைப் பகிா்ந்து கொள்ளும்.

பேகம்புல் நிலையம் தோராயமாக 246 மீட்டா் நீளமும் 24.5 மீட்டா் அகலமும் கொண்டது, மேலும் 22 மீட்டா் ஆழத்தில் கட்டப்பட்டுள்ளது. நிலத்தடி நிலையமாக இருந்தாலும் பயணிகளின் வசதியை உறுதி செய்வதற்காக, இந்த வசதி 20 எஸ்கலேட்டா்களைக் கொண்டிருக்கும். அவற்றில் 13 எஸ்கலேட்டா்கள் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன.

கூடுதலாக, நமோ பாரத் ரயில்களில் மருத்துவ அவசரநிலைகளுக்கான ஸ்ட்ரெச்சா்கள் பொருத்தப்படவுள்ளன. செயல்பாட்டுக்கு வந்தவுடன், பயணிகள் மீரட்டுக்குள் மெட்ரோ வழியாக பயணிக்க முடியும் அல்லது நமோ பாரத் ரயில்கள் மூலம் காஜியாபாத் மற்றும் தில்லியுடன் இணைக்க முடியும்.

பயணிகள் அணுகலை மேம்படுத்துவதற்காக, நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சேவை செய்யும் நான்கு பிரத்யேக நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களும் இந்த நிலையத்தில் இருக்கும்.

ஒரு நுழைவாயில் அபு லேனில் இருந்து பயணிகளுக்கும், மற்றொன்று சோடி கஞ்சிலிருந்து பயணிகளுக்கும், நேஷனல் இன்டா் கல்லூரிக்கு அருகிலுள்ள மூன்றாவது இடத்திற்கும், நான்காவது மீரட் கண்டோன்மென்ட்டிலிருந்து அணுகலை வழங்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com