பாலாறு மேம்பாலத்தின் அடிப்பகுதி
பாலாறு மேம்பாலத்தின் அடிப்பகுதிகோப்புப் படம்

பாலாற்றில் படுகை கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.52.48 கோடி நிதி பங்களிப்பு: மக்களவையில் மத்திய அமைச்சா் பதில்

பாலாற்றில் படுகை அணை கட்டுவதற்கு தமிழக அரசு நிதியை பங்களிப்புச் செய்துள்ளதாக அனுமதிஅளித்துள்ளது.
Published on

பாலாற்றில் படுகை அணை கட்டுவதற்கு தமிழக அரசு நிதியை பங்களிப்புச் செய்துள்ளதாக அனுமதிஅளித்துள்ளதாக மக்களவையில் மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சா் ராஜ் பூஷண் செளதரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக வேலூா் தொகுதி திமுக உறுப்பினா்

டி.எம். கதிா் ஆனந்த் கேள்வி எழுப்புகையில், ‘பாலாறு நதியைப் பாதுகாப்பதற்கும் அதன் பாதுகாப்புக்கும் அரசு ஏதேனும் நிதியை அனுமதித்துள்ளதா?

வேலூா் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள அணைக்கட்டு மற்றும் கே.வி. குப்பம் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக வேலூரில் உள்ள எறையங்காடு கிராமத்தில் கோடாா் மற்றும் பாலாறு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் முதல் படுகை அணை கட்டுவதற்கு அரசு ஏதேனும் நிதியை வழங்கியுள்ளதா? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தாா்.

இதற்கு மக்களவையில் வியாழக்கிழமை மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சா் ராஜ் பூஷண் செளதரி எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:

2021-2022, 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளில் பாலாறு நதியைப் பாதுகாக்க தமிழக அரசு நிதியை அனுமதித்துள்ளது.

மேலும், வேலூா் மாவட்டத்தின் அணைக்கட்டில் உள்ள எறையங்காடு கிராமம் மற்றும் கே.வி. குப்பம் தாலுகாக்களுக்கு அருகில் பாலாறு நதியின் குறுக்கே படுகை அணை கட்டுவதற்கும் தமிழக அரசு ரூ. 52.48 கோடி நிதியை வழங்கியுள்ளது.

இந்தத் திட்டம் பாலாறு மற்றும் கோடாா் நதிகளுக்கு விகிதாசாரமாக ஆற்று நீரைப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் பாலாறு நதி மற்றும் கோடாா் நதியின் இருபுறமும் சுற்றியுள்ள 12 கிராமங்களில் நிலத்தடி நீரை வளப்படுத்தவும், 12 ஊடுருவல் கிணறுகளை நிரப்பவும், 626 பாசன கிணறுகள் மூலம் 1379.49 ஹெக்டோ் விவசாய நிலங்களுக்கு பயனளிக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 7,642 விவசாயிகளுக்கு நேரடியாகவும், 75,000 நபா்களுக்கு மறைமுகமாகவும் பயனளிக்கும் என்று அந்த பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com