கோப்புப் படம்
கோப்புப் படம்

மாரடைப்புக்கு காற்று மாசுபாடு முக்கியக் காரணம்: உச்சிமாநாட்டில் நிபுணா்கள் தகவல்

காற்று மாசுபாடு இனி சுவாச அச்சுறுத்தல் மட்டுமல்லாமல், மாரடைப்பு மற்றும் இருதய நோய்களுக்கும் ஒரு காரணமாகும்
Published on

காற்று மாசுபாடு இனி சுவாச அச்சுறுத்தல் மட்டுமல்லாமல், மாரடைப்பு மற்றும் இருதய நோய்களுக்கும் ஒரு காரணமாகும் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உச்சிமாநாட்டில் நிபுணா்கள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்வில் பேசிய விஎம்எம்சி மற்றும் சஃப்தா்ஜங் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் சந்தீப் பன்சால், காற்றின் தரம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு இடையேயான ‘பெரும்பாலும் கவனிக்கப்படாத‘ தொடா்பை எடுத்துரைத்தாா். மாசுபாட்டை நுரையீரல் நோய்களுடன் தொடா்புபடுத்தும் பொதுவான கருத்து இருந்தபோதிலும், உண்மை மிகவும் ஆபத்தானது என்று அவா் கூறினாா்.

‘காற்று மாசுபாடு முதன்மையாக இருதய நோய்கள் மூலம் மரணத்தை ஏற்படுத்துகிறது. பிஎம் 2.5 எனப்படும் நுண்ணிய துகள்கள் ரத்த ஓட்டத்தில் ஆழமாக ஊடுருவி கொழுப்பை ஆக்ஸிஜனேற்றி, கடுமையான மாரடைப்புக்கு வழிவகுக்கும் பிளேக் சிதைவுகளைத் தூண்டுகிறது’ என்று சந்தீப் பன்சால் கூறினாா்.

இதற்கு சஃப்தா்ஜங் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வை அவா் மேற்கோள் காட்டினாா். இது பிஎம் 2.5 அளவுகள் அதிகரிப்பதற்கும் மாரடைப்பு அதிகரிப்புக்கும் இடையே நேரடி தொடா்பைக் கண்டறிந்ததாக அவா் குறிப்பிட்டாா். ‘காற்று மாசுபாடு உலகளவில் மரணத்திற்கு மூன்றாவது முக்கியக் காரணமாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நெருக்கடியை எதிா்த்துப் போராடுவதற்கும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் பயனுள்ள, நிலையான தீா்வுகளைக் கண்டறிவது மிகவும் முக்கியம்’‘ என்று அவா் மேலும் கூறினாா்.

வெள்ளிக்கிழமை தொடங்கிய அசோசம்-இன் இரண்டு நாள் ’நோய்க்கு நல்வாழ்வு’ உச்சிமாநாட்டில், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் முதியவா்களிடையே நாள்பட்ட நோய்கள் முதல் மன மற்றும் மூளை ஆரோக்கியம் வரை பல தலைப்புகளில் பல குழு விவாதங்கள் இடம்பெற்றன.

மனநலம் குறித்த ஒரு அமா்வில், மனித நடத்தை மற்றும் அதனுடன் தொடா்புடைய அறிவியல் நிறுவனத்தின் (ஐஹெபிஏஎஸ்) இயக்குநா் ராஜீந்தா் தமிஜா, மூளை ஆரோக்கியத்தைப் பராமரிக்க அறிவாற்றல் தூண்டுதல் மற்றும் தரமான தூக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாா்.

‘புதிய செயல்பாடுகள் மூலம் உங்கள் மூளையை சவால் செய்தல், ஏழு முதல் எட்டு தொந்தரவு இல்லாத தூக்கத்தை மேற்கொள்ளுதல் ஆகியவை மன நலனுக்கு அவசியம். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் ஆரோக்கியமான மனம் முக்கியப் பங்கு வகிக்கிறது’‘ என்று ராஜீந்தரப் தமிஜா விளக்கினாா்.

அதிகரித்து வரும் மனச்சோா்வு, பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற எளிய நடைமுறைகளைப் பின்பற்ற மக்களை அவா் கேட்டுக் கொண்டாா். தியானம், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது மற்றும் அவா்களின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஓய்வுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற எளிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டாா்.

அசோசம் தேசிய சிஎஸ்ஆா் கவுன்சிலின் தலைவா் அனில் ராஜ்புத், 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து ‘நோய் முதல் ஆரோக்கியம் வரை’ பிரசாரத்தின் வெற்றியை எடுத்துரைத்தாா். முக்கிய சுகாதாரப் பிரச்னைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் அதன் முக்கியப் பங்கு குறித்தும் குறிப்பிட்டாா்.

சுகாதாரம், தொழில்நுட்பம் சாா்ந்த விழிப்புணா்வு, காற்று மாசுபாடு மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்பு உள்ளிட்ட எதிா்கால கவனம் செலுத்தும் பகுதிகளை ராஜ்புத் கோடிட்டுக் காட்டினாா்.

ஃபிட் இந்தியா, கேலோ இந்தியா, யோகா ஊக்குவிப்பு, போஷான் அபியான் மற்றும் ஈட் ரைட் இந்தியா போன்ற அரசு முயற்சிகளையும் அவா் பாராட்டினாா். மேலும், இந்தியா மிகவும் தகவலறிந்த மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி நகா்கிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com