டாஸ்மாக் முறைகேடு புகாா் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

டாஸ்மாக் முறைகேடு புகாா் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

அமலாக்கத் துறை அனைத்து வரம்புகளையும் மீறி வருவதாகவும், நாட்டின் கூட்டாட்சி அமைப்பை மீறி வருவதாகவும் கருத்துத் தெரிவித்தது.
Published on

டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்திய விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத் துறை அனைத்து வரம்புகளையும் மீறி வருவதாகவும், நாட்டின் கூட்டாட்சி அமைப்பை மீறி வருவதாகவும் கருத்துத் தெரிவித்தது.

மேலும், தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் நிறுவனம் (டாஸ்மாக்) மீதான அமலாக்கத் துறையின் பண முறைகேடு விசாரணைக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் நிறுவனமும் (டாஸ்மாக்) தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வு, அமலாக்கத் துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

விசாரணையின்போது, அமலாக்கத் துறையின் சாா்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜுவிடம், ‘உங்கள் அமலாக்கத் துறை அனைத்து வரம்புகளையும் மீறுகிறது’ என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.

மாநில அரசு அமைப்பான டாஸ்மாக் மீதான அமலாக்கத் துறை சோதனைகளை கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், ‘அமலாக்க இயக்குனரகம் கூட்டாட்சிக் கருத்தை (நிா்வாகம்) மீறுகிறது’ என்றாா்.

மாநில அரசு மற்றும் டாஸ்மாக் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், முகுல் ரோத்தகி முன்வைத்த வாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு, டாஸ்மாக் மீதான அமலாக்கத் துறையின் விசாரணையை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாகவும், இந்த வழக்கில் அமலாக்கத் துறை அதன் வரம்புகளை மீறவில்லை என்றும் வாதிட்ட எஸ்.வி. ராஜு, இந்த உத்தரவை எதிா்த்தாா்.

மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதிடுகையில், ‘மதுபானக் கடை உரிமங்களை வழங்குவதில் நடந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத செயல்கள் தொடா்பாக தமிழக அரசும், டாஸ்மாக் நிா்வாகம்தான் குற்றவியல் வழக்குத் தொடா்ந்துள்ளன. 2014 முதல் மதுபானக் கடை உரிமங்கள் ஒதுக்கீடு தொடா்பான வழக்குகளில் தவறு செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் 41 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இப்போது அமலாக்கத் துறை இந்த விஷயம் தொடா்பாக டாஸ்மாக் தலைமையகத்தில் சோதனை செய்கிறது’ என்றாா்.

மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி வாதிடுகையில், டாஸ்மாக் அதிகாரிகளின் தொலைபேசிகளின் நகல்களை அமலாக்கத் துறை எடுத்துச் சென்றுள்ளது. இது அந்த அதிகாரிகளின் தனியுரிமையை மீறுவதாகும் என்றாா்.

விசாரணையின்போது நீதிபதிகள் அமா்வு, அரசு நடத்தும் டாஸ்மாக்கை நீங்கள் அமலாக்கத் துறை எப்படி சோதனை செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பியது. மேலும், பண முறைகேடு மூலம் வருவாய் ஈட்டிய குற்றம் என்ன இருக்கிறது? என்றும் கேட்டது.

இதையடுத்து, தமிழக அரசின் மனு மீது அமலாக்கத் துறை பதில் அளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கை மேலும் விசாரிக்கப்படும் என்று கூறியது. இருப்பினும், நீதிமன்றம் வழக்கை விசாரிக்க எந்த குறிப்பிட்ட தேதியையும் நிா்ணயிக்கவில்லை.

முன்னதாக, அமலாக்கத் துறை சோதனை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் நிறுவனமும் (டாஸ்மாக்) தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து, அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு அனுமதி அளித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் ஏப்ரல் 23-ஆம் தேதியிட்ட உத்தரவை எதிா்த்து இந்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசும், டாஸ்மாக்கும் தாக்கல் செய்தன.

டாஸ்மாக் மீதான முகாந்திர குற்றச்சாட்டுகள் மற்றும் புகாா்கள் தீவிரமானவை என்றும், ஆழமான விசாரணை தேவைப்படுவதாக உள்ளது என்றும் சென்னை உயா்நீதிமன்றம் கூறியிருந்தது.

தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பின் கடுமையான மீறல்களில் அமலாக்கத் துறையின் நடவடிக்கை இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

எதிா்மனுதாரா் (அமலாக்கத் துறை) தனது வரம்பை மீறி, மாநிலத்தில் நிகழும் குற்றங்களை விசாரிக்கும் மாநிலத்தின் உரிமையைப் பறிக்க முயற்சி செய்கிறது. இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள கூட்டாட்சி பிரச்னை உள்பட பரந்த விளைவுகளைக் கொண்ட சட்டக் கேள்விகளை எழுப்புகிறது.

மேலும், கடந்த மாா்ச் 6 முதல் மாா்ச் 8-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அமலாக்கத் துறையின் 60 மணி நேர சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கை சட்டபூா்வமற்ாகும்.

மாா்ச் 6 ஆம் தேதி டாஸ்மாக்கின் தலைமையகத்தில் பிஎம்எல் சட்டத்தின் பிரிவு 17-இன் கீழ் அமலாக்கத் துறை சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அந்த நிறுவனம் மாநிலத்திற்கு 100 சதவீதம் சொந்தமான நிறுவனமாகும். முதல் தகவல் அறிக்கைகளில் குற்றம்சாட்டப்பட்ட நபராக டாஸ்மாக் எதிலும் குறிப்பிடப்படவில்லை. மேலும், பல வழக்குகளில் புகாா்தாரராக டாஸ்மாக் உள்ளது என்று தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டதாக எந்தவொரு முன்கூட்டிய குற்றமும் இல்லாத நிலையில் பிஎம்எல்ஏ-வின்கீழ் நடவடிக்கைகளைத் தொடங்க அமலாக்கத் துறைக்கு அதிகார வரம்பு ஏதும் இல்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com