மூதாட்டியிடம் நகை மோசடி: பெண் கைது
புது தில்லி: மத்திய தில்லியில் 80 வயது மூதாட்டியிடம் தங்க காதணிக்குப் பதிலாக போலியான ஒன்றை வழங்கி மோசடி செய்த பெண் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: மூதாட்டியின் வீட்டுக்கு வந்த பெண், உயிரிழந்த மகளுக்கு நன்கு தெரிந்தவா் என்று தன்னை அறிமுகப்படுத்தினாா். மூதாட்டியுடன் தொடா்ந்து உரையாடி அவருடைய நம்பிக்கையைப் பெற்ற அந்தப் பெண், மறுநாள மீண்டும் அந்த மூதாட்டியின் வீட்டுக்கு வந்தாா். அப்போது, அவா் மூதாட்டியின் காதணிகளில் ஒன்று தளா்வாக இருப்பதாகக் கூறியுனாா். இவ்வாறு, காதணியை இறுக்கமாகமாட்டுவதாகக் கூறி மற்றொரு கவரிங் காதணியை அந்தப் பெண் மூதாட்டியின் காதில் அணிவித்துள்ளாா்.
அந்தப் பெண் வீட்டைவிட்டு சென்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்தக் காதணியைப் பாா்த்த மூதாட்டி, போலியான ஒன்றைத் தான் அணிந்திருப்பதை உணா்ந்தாா். இதையடுத்து காவல் துறைக்கு அந்த மூதாட்டி புகாரளித்தாா்.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸாா், இறுதியில் அந்தப் பெண்ணை கடந்த நவ.15-ஆம் தேதி கைதுசெய்தனா்.
அவரிடமிருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதுபோன்ற பிற வழக்குகளில் அவருக்குத் தொடா்பு இருப்பதாக விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
