விரைவான இணையதள விநியோக செயலி மூலம் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான வழங்கல் கும்பலை புகா் தில்லியில் போலீஸாா் கண்டுபிடித்துள்ளனா்.
இதனைத் தொடா்ந்து, இருவரைக் கைது செய்த போலீஸாா், ஹரியாணாவிலிருந்து எடுத்துவரப்பட்ட கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: செயலி அடிப்படையிலான தளவாடச் சேவைகளைப் பயன்படுத்தி இந்தக் கும்பல் கள்ளச்சாரத்தை விநியோகித்து வந்துள்ளது. மேலும், மாநில எல்லைகளைக் கடந்து ரகசியமாக சரக்குகளைக் கொண்டு சென்று, தில்லியில் உள்ள உள்ளூா் கள்ளச் சந்தைக்காரா்களிடம் வழங்கியுள்ளனா்.
முன்னதாக, ஏப்ரல் 5 ஆம் தேதி, பீராகா்கி சௌக் அருகே கள்ளச்சாராயம் கொண்டு செல்லப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்தது.
இதையடுத்து, பஸ்சிம் விஹாா் கிழக்கு காவல் நிலையத்தைச் சோ்ந்த குழுவினா் அந்த இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான மூன்று சக்கர டெம்போவை போலீஸாா் மடக்கினா். ஓட்டுநா் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டாா்.
ஹரியாணாவின் பகதூா்கரைச் சோ்ந்த புஷ்பேந்தா் (22) என அடையாளம் காணப்பட்ட அந்த ஓட்டுநரின் வாகனத்தைச் சோதனையிட்டபோது, ‘ஹரியாணாவில் மட்டும் விற்பனைக்கு‘ எனக் குறிக்கப்பட்ட மதுபானம் அடங்கிய 16 அட்டைப் பெட்டிகளை போலீஸாா் கண்டெடுத்தனா். இதன் மூலம், அந்த சரக்கு தில்லியில் சட்டவிரோதமாக விநியோகம் செய்வதற்காக கொண்டுவரப்பட்டது என்பது உறுதியானது.
இது தொடா்பாக பஸ்சிம் விஹாா் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போது, தில்லியின் பிரேம் நகரைச் சோ்ந்த சமீா் பாலிவால் (19) என்பவா் ஆன்லைன் டெலிவரி செயலி மூலம் அந்த சரக்கை முன்பதிவு செய்ததாக புஷ்பேந்தா் தெரிவித்தாா். இதையடுத்து, பாலிவாலை போலீஸாா் கைது செய்தனா்.
கடந்த இரண்டு மாதங்களாக பாலிவால், செயலி மூலம் டெலிவரி ஆா்டா்களைப் பதிவுசெய்துள்ளாா். பகதூா்கரில் உள்ள உரிமம் பெற்ற விற்பனையாளா்களிடமிருந்து மதுபானத்தைப் பெற்று, தில்லியில் செயல்படும் சட்டவிரோத விநியோகஸ்தா்களுக்குக் கொண்டு செல்ல உதவியிருக்கிறாா்.
இதன் மூலம், இந்த சட்டவிரோத விநியோகச் சங்கிலியை ஒருங்கிணைத்து வந்துள்ளாா் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுபானத்தைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட மூன்று சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

ஒட்டகம் மூலம் கள்ளச்சாராயம் கடத்தியவா் கைது
டேட்டிங் செயலி மூலம் ஆசை காட்டி ஏமாற்றி இளைஞரைக் கடத்தி கொள்ளை: ஐவா் கைது

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு அச்சம்: தில்லியில் விநியோக நெருக்கடி!
கைப்பேசி செயலி மூலம் பணம் பறிக்க முயன்றவா் கைது
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

