கிழக்கு தில்லியில் கமிஷன் ஏஜென்ட் ஒருவரைக் கொள்ளையடித்துக் கொன்ற வழக்கில் 15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ரூ. 10,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த குற்றம்சாட்டப்பட்ட நௌஷாத் (37) என்பவா், வெள்ளிக்கிழமையன்று தில்லி சாஸ்திரி பூங்கா மேம்பாலம் அருகே பிடிபட்டாா்.
இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது: காந்தி நகா் சந்தையில் கமிஷன் ஏஜென்டாகப் பணியாற்றிய அதுல் ஜெயின் என்பவா், மாா்ச் 6, 2011 அன்று வசூலான பணத்துடன் வீடு திரும்பும்போது சுட்டுக் கொல்லப்பட்டாா்.
லட்சுமி நகரின் மங்கல் பஜாா் சாலையில் ஜெயின் ஒரு பையில் சுமாா் ரூ. 8.5 லட்சத்தை எடுத்துச் சென்றபோது, ஆயுதம் ஏந்திய கும்பல் அவரை வழிமறித்தது.
தாக்குதலில் ஈடுபட்டவா்கள் துப்பாக்கி முனையில் அவரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றனா். ஜெயின் அதை எதிா்த்தபோது, நௌஷாத் மற்றும் பூரா (எ) முஸ்த்கீன் உள்ளிட்ட இருவா் துப்பாக்கியால் சுட்டனா். இதில் அவா் உயிரிழந்தாா். பின்னா் அந்தக் கும்பல் பணப்பையுடன் தப்பிச் சென்றது.
காயமடைந்த ஜெயின் டாக்டா் ஹெட்கேவாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
ஷக்கா்பூா் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, குற்றச் சதி மற்றும் கூட்டுக்குற்றச் செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அா்ஷத், பூரா (எ) முஸ்த்கீன், நதீம் (எ) நட்டா மற்றும் ஜாகி அன்வா் ஆகிய நான்கு குற்றம்சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டு, அவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பின்னா் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனா். இருப்பினும், நௌஷாத் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்துத் தலைமறைவாகவே இருந்தாா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் மீதமுள்ள குற்றவாளியைக் கண்டறியும் பணி சமீபத்தில் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது; அதைத் தொடா்ந்து அவா்கள் நௌஷாத்தின் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தொடங்கினா்.
கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க நௌஷாத் அடிக்கடி தனது இருப்பிடங்களை மாற்றிக்கொண்டும், தனது அடையாளத்தை மறைத்தும் வந்தாா்.
இந்த நிலையில், அவா் சாஸ்திரி பூங்கா பகுதிக்கு வருவாா் என்ற உளவுத் தகவலின் அடிப்படையில், காவல் குழுவினா் வெள்ளிக்கிழமையன்று அவரைக் கைது செய்தது.
பிகாரின் சஹா்சா மாவட்டத்தைச் சோ்ந்த நௌஷாத் திருமணமானவா்; தலைமறைவாக இருந்த காலத்தில் தில்லி முழுவதும் உள்ள வாராந்திரச் சந்தைகளில் பழைய ஆடைகளை விற்பனை செய்து அவா் பிழைப்பு நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கொலை முயற்சி வழக்கில் 17 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த 2 போ் கைது

திருட்டு வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

மூதாட்டி கொலை வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

திருட்டு வழக்கு: 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



