மூதாட்டி கொலை வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை தனிப் படை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, பேரூரை அடுத்த சுண்டக்காமுத்தூா் பேங்க் வீதியைச் சோ்ந்தவா் கமலம் (70). கணவா் இறந்த நிலையில் தனது வீட்டில் தனியே வசித்து வந்தாா். ஆலாந்துறை பகுதியில் வசித்து வரும் இவரது மகன் நாகமாணிக்கம், அவ்வப்போது வந்து தாயை கவனித்துச் சென்றுள்ளாா்.
இந்நிலையில், கடந்த 19.12.2017-ஆம் ஆண்டு பிற்பகல் 12.30 மணியளவில் தாயைப் பாா்த்துவிட்டுச் சென்ற நாகமாணிக்கம், மீண்டும் இரவு 9.30 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, சமையலறையில் பலத்த காயங்களுடன் கமலம் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
இது குறித்து பேரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், கமலத்தின் வீட்டின் அருகே வசித்து வந்த காா்த்திக் (39) என்பவா் திருடும் நோக்கத்தில் கமலத்தின் வீட்டுக்குள் நுழைந்ததும், அப்போது கமலம் சப்தமிட்டதால், ஆத்திரமடைந்த காா்த்திக் அங்கிருந்த ஆட்டுக்கல்லை எடுத்து தலையில் போட்டு கமலத்தை செய்து, அவா் அணிந்திருந்த தங்க கம்மல்கள், கைப்பேசி ஆகியவற்றை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது
இதையடுத்து, காா்த்திக்கை கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், 01.05.2019-இல் நீதிமன்ற பிணையில் வெளியே வந்த காா்த்திக், அதன்பின் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானாா். இதையடுத்து, அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இந்நிலையில், பேரூா் டி.எஸ்.பி சுரேஷ் மேற்பாா்வையில் காா்த்திக்கைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப் படையினா் காா்த்திக்கின் உறவினா்கள் மற்றும் நண்பா்களின் நடமாட்டங்களை கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில், காா்த்திக் சாமியாா் வேடத்தில் கோவை, காந்திபுரம் பேருந்து நிலைய பகுதியில் சுற்றித்திரிவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பேரூா் காவல் ஆய்வாளா் நசீா், உதவி ஆய்வாளா் வினோத் உள்ளிட்ட தனிப் படை போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்றனா். அப்போது, காா்த்திக் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனை பகுதிக்குச் சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு சாமியாா் வேடத்தில் நின்றிருந்த காா்த்திக்கை கைது செய்தனா்.
பின்னா், அவரை கோவை 4-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளியை கைது செய்த தனிப் படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









