ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

உமா் காலித் எழுதிய புத்தகம் குறித்த நிகழ்ச்சிக்கு ஜேஎன்யுவின் அனுமதி ரத்து: மாணவா் சங்கம் கண்டனம்

2020 வடகிழக்கு தில்லி கலவரச் சதி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் மாணவா் உமா் காலித் எழுதிய புத்தகம் குறித்து, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) நடத்தவிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

News image

உமா் காலித் - கோப்புப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 9:33 pm IST

2020 வடகிழக்கு தில்லி கலவரச் சதி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் மாணவா் உமா் காலித் எழுதிய புத்தகம் குறித்து, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) ஞாயிற்றுக்கிழமை நடத்தவிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

நிகழ்ச்சி குறித்த ‘முழுமையான விவரங்களை வெளிப்படுத்தாததே‘ இதற்குக் காரணம் என்று நிா்வாகம் கூறியது: இந்த ரத்து நடவடிக்கை நிா்வாகத்தின் ‘தன்னிச்சையான மற்றும் சா்வாதிகாரப் போக்கு‘ என்று ஜேஎன்யுஎஸ்யு குற்றஞ் சாட்டியுள்ளது.

கல்விசாா் விவாதங்களையும் மாற்றுக் கருத்துகளையும் ஒடுக்க நிா்வாகம் முயற்சிப்பதாகவும் சாடியுள்ளது. உலகப் பழங்குடியினா் தினத்தை முன்னிட்டு ஜேஎன்யுஎஸ்யு ஏற்பாடு செய்திருந்த ‘பிளவுபட்ட சமூகங்கள்: ஆதிவாசி வரலாறுகள் மற்றும் அதிகார அரசியல் என்ற புத்தகம் மீதான கலந்துரையாடல், சமூக அறிவியல் புலம்-1 (எஸ்எஸ்எஸ்-ஐ) அரங்கத்தில் பிற்பகல் 3 மணிக்குப் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி சுவரொட்டியின்படி, இதில் பேராசிரியா்கள் பிரபு மகாபத்ரா, உமா சக்ரவா்த்தி, சுத்தாப்ரதா சென்குப்தா மற்றும் சமூக ஆா்வலா்கள் ஹா்ஷ் மந்தா், பானோஜோத்ஸ்னா ஆகியோா் பங்கேற்கவிருந்தனா்.

‘திட்டமிட்டபடி ’பிளவுபட்ட சமூகங்கள்’ குறித்த கலந்துரையாடல் எஸ்எஸ்எஸ்-2 கட்டடத்திற்கு வெளியே திறந்தவெளியில் நடைபெறும்’ என்று கூறிய ஜேஎன்யுஎஸ்யு, மாற்று இடத்தையும் தேடி வருவதாகத் தெரிவித்தது.

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் ஞாயிற்றுக்கிழமையன்று தனது அதிகாரபூா்வ எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவிக்கையில், ‘ஆகஸ்ட் 10 அன்று நடைபெறவிருந்த நிகழ்ச்சி குறித்த ‘முழுமையான விவரங்கள்‘ வெளிப்படுத்தப்படாததால் எஸ்எஸ்எஸ்-1 அரங்கத்திற்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜேஎன்யு ஒரு ஜனநாயக மற்றும் அதிகாரப் பரவலாக்கம் கொண்ட நிறுவனம். சமூக அறிவியல் பள்ளியின் (எஸ்எஸ்எஸ்) டீன் தான் அனுமதி அளித்திருந்தாா். அவரே இந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதற்கான நடவடிக்கையையும் எடுத்துள்ளாா்.‘

ஆகஸ்ட் 10 அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள நிகழ்ச்சி குறித்த முழு விவரங்கள் வெளிப்படுத்தப்படாததால், எஸ்எஸ்எஸ்-1 அரங்கத்திற்கான முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஎன்யுஎஸ்யு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கையில், சமூக அறிவியல் புலத்தின் டீன் தான், சமா்ப்பிக்கப்பட்ட அதே வடிவத்தில் அரங்க முன்பதிவை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தாா். அவா் ரத்து செய்வதற்கான நிா்வாகத்தின் விளக்கத்தை அளிக்க வேண்டும்.

புத்தக விவாதத்திற்கான இடத்தை மறுத்த அதே வேளையில், இஸ்கான் நிகழ்ச்சிகளுக்கு வளாகத்தில் இடமும் ஒத்துழைப்பும் ஜேஎன்யு வழங்கியிருப்பதன் மூலம் ‘இரட்டை நிலைப்பாட்டைக்‘ கடைப்பிடிக்கிறது என்று அவ்வமைப்பு குற்றஞ்சாட்டியது.

ஒரு புத்தகத்தைப் பற்றி விவாதிப்பது என்பது கல்விசாா் கலாசாரம் மற்றும் ஜனநாயகச் செயல்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாகும் என்று கூறிய ஜேஎன்யுஎஸ்யு, மாற்று இடத்தில் இந்நிகழ்ச்சி நிச்சயம் நடைபெறும் என்றும் உறுதியளித்துள்ளது.

இப்புத்தகம் ஆதிவாசிகளின் வரலாறு, எதிா்ப்பு மற்றும் ‘ஜல், ஜங்கிள், ஜமீன்‘ (நீா், காடு மற்றும் நிலம்) தொடா்பான போராட்டங்கள் குறித்துப் பேசுவதாக மாணவா் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், காலித் தொடா்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கம், அவரை அரசமைப்பு சட்ட உரிமைகள் மற்றும் குடிமைச் சுதந்திரங்களின் பாதுகாவலா் என்று வா்ணித்தது.

விவாதத்திற்கான இடம் ரத்து செய்யப்பட்டாலும் விவாதம் நின்றுவிடாது என்று கூறிய ஜேஎன்யுஎஸ்யு, மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தது.

முன்னாள் மாணவா் தலைவரான காலித், 2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லி கலவரச் சதி வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் செப்டம்பா் 2020 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் மீதான வழக்கு விசாரணை தொடங்குவதற்காக அவா் தொடா்ந்து காத்திருக்கிறாா்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் முன்மொழியப்பட்ட தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களின் போது ஏற்பட்ட மதக்கலவரத்தில் 53 போ் உயிரிழந்தனா். 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.