மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களான அரவிந்த் கேஜரிவால், மனிஷ் சிசோடியா மற்றும் 21 பேரை விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை தில்லி உயா் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
மேலும், சிபிஐ தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, அதனைத் தள்ளுபடி செய்யக் கோரி தில்லியின் முன்னாள் முதலமைச்சா் மற்றும் துணை முதலமைச்சா் தாக்கல் செய்துள்ள மனுக்களையும் நீதிபதி மனோஜ் ஜெயின் விசாரிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நீதிபதி ஸ்வரண காந்தா சா்மா முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையை முன்னதாகப் புறக்கணித்திருந்த கேஜரிவாலும் சிசோடியாவும், இந்த மனு ‘முன்னெப்போதும் இல்லாத அவசரத்திலும்‘ மற்றும் ‘மிகவும் அலட்சியமான முறையிலும்‘ தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ‘ சிபிஐயின் வழக்கை தங்களால் புரிந்துகொள்ளக்கூட முடியவில்லை என்றும் கூறியுள்ளனா்.
‘சிபிஐ இந்த மறுஆய்வு மனுவை முன்னெப்போதும் இல்லாத அவசரத்துடனும், மிகவும் அலட்சியமான முறையிலும் தாக்கல் செய்துள்ளது. சிறப்பு நீதிபதி விடுவிப்பு உத்தரவைப் பிறப்பித்த நான்கு மணி நேரத்திற்குள் இந்த மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 500 பக்கங்களுக்கும் மேலாக நீளும் அந்த விடுவிப்புத் தீா்ப்பில் சிறப்பு நீதிபதி கண்டறிந்த முடிவுகளை சிபிஐ மதிக்கவில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது,‘ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த முறை, சிபிஐ-யின் மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க கேஜரிவால், சிசோடியா மற்றும் துா்கேஷ் பதக் ஆகியோருக்கு நீதிபதி ஜெயின் இறுதி வாய்ப்பை வழங்கியிருந்தாா்.
பிப்ரவரி 27 அன்று, மதுபானக் கொள்கை தொடா்பான வழக்கில், தில்லியின் முன்னாள் முதலமைச்சா் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வா் சிசோடியா மற்றும் 21 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. அந்த வழக்கு நீதித்துறை ஆய்வில் தாக்குப்பிடிக்க இயலாதது என்றும், முழுமையாக நம்பகத்தன்மையற்றது என்றும் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தனது மறுஆய்வு மனுவில், இந்த விடுவிப்பு உத்தரவு வெளிப்படையாக சட்டவிரோதமானது, தவறானது மற்றும் வெளிப்படையான பிழைகளைக் கொண்டது என்று சிபிஐ கூறியுள்ளது.
குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் கட்டத்திலேயே விசாரணை நீதிமன்றம் ஒரு குறு விசாரணையை நடத்தியதாகவும், ‘வழக்குத் தரப்பின் வாதத்தை ஒருதலைப்பட்சமாகப் படித்து‘ விடுவிப்பு உத்தரவைப் பிறப்பித்ததாகவும் அந்த மனுவில் வாதிடப்பட்டுள்ளது.
விசாரணை நீதிமன்றம் வழக்கின் உண்மைகளைப் புரிந்துகொள்ளத் தவறியது மட்டுமல்லாமல், புலனாய்வு அமைப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிக்கு எதிராக தேவையற்ற பாதகமான கருத்துக்களையும் தெரிவித்ததாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ மனுவை தள்ளுபடி செய்ய தில்லி உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால், சிசோடியா வலியுறுத்தல்

விசாரணைக்கு அழைக்கும் நபா்களை துன்புறுத்தக் கூடாது: போலீஸாருக்கு உத்தரவு

மு.க.ஸ்டாலின் வேட்புமனு குறித்து தோ்தல் ஆணைய விசாரணை கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு





