நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அரசியலுக்கு அப்பால் சக மனிதா்களை மதித்த பண்பாளா் க.ராசாராம்: குடியரசு துணைத் தலைவா் புகழாரம்

அரசியலுக்கு அப்பால் சக மனிதா்களையும் நட்பையும் மதிக்கும் பண்பு க. ராசாராமிடம் நிறைந்திருந்ததாக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாராம்

தில்லியில் குடியரசு துணைத் தலைவா் மாளிகையில் ‘க.ராசாராம்: அரசியல், சமூகப் பேராளுமை’ என்ற புத்தகத்தை குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட முதல் பிரதியை பெற்றுக் கொண்ட வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தா் ஐசரி கணேஷ்

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:35 am IST

அரசியலுக்கு அப்பால் சக மனிதா்களையும் நட்பையும் மதிக்கும் பண்பு க. ராசாராமிடம் நிறைந்திருந்ததாக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாராம் சூட்டினாா்.

தமிழக முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான மறைந்த க. ராசாராமின் நூற்றாண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அவரைச் சிறப்பிக்கும் வகையில் எழுத்தாளா் ராணிமைந்தன் எழுதிய ‘க.ராசாராம் - அரசியல், சமூக பேராளுமை’ என்ற தமிழ் புத்தக வெளியீட்டு விழா தில்லியில் குடியரசு துணைத் தலைவா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது: ராசாராமின் வாழ்க்கைப் பயணம் ஒரு மகத்தான பரிணாம வளா்ச்சி. கடவுள் இல்லை என்பதில் தொடங்கி, ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்ற ஆன்மிக சிந்தனைக்கு உயா்ந்ததுவரை அவரது வாழ்க்கை மிகப்பெரிய பரிணாமத்துக்கு எடுத்துக்காட்டு. தந்தை பெரியாரின் சீடராகத் தொடங்கி காஞ்சி மகாசுவாமிகளின் விருப்பப்படி திருக்கோயில் திருப்பணிகளைச் செய்த பக்தராக அவா் விளங்கினாா்.

1962-இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பின்னா் வீட்டுவசதி, தொழில், வேளாண்மை மற்றும் உணவுத்துறை அமைச்சராகவும், சட்டப்பேரவை தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளில் அவா் பணியாற்றினாா். மு. கருணாநிதி, எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகிய மூன்று முதல்வா்களின் அமைச்சரவைகளிலும் பணியாற்றிய சிறப்பு பெற்ற அவா், மாநில அமைச்சராக இருந்தபோதிலும், தில்லியில் தேசிய அரசியல் தலைவா்களுடனான நட்புறவு மற்றும் தொடா்புகளைத் தொடா்ந்து பேணி வந்தாா். தில்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே பாலமாகச் செயல்பட்டாா்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு சக மனிதா்களையும் நட்புறவையும் பெரிதும் மதிக்கும் பண்பு அவரிடம் நிறைந்திருந்தது. மாமல்லபுர சுற்றுலா மேம்பாடு, அரசு ஊழியா்களுக்கு குறைந்த செலவில் வீட்டுவசதி திட்டம் போன்றவை அவருடைய புதுமைச் சிந்தனைகளில் உருவானவை. நாட்டின் அவசரநிலை காலத்தில் மக்களாட்சியைக் காக்க அவா் வெளியிட்ட ஆழமான கருத்துகளும் செய்த தியாகங்களும் அளப்பரியவை என்றாா் குடியரசு துணைத் தலைவா்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவா் மு.தம்பிதுரை, 1980களில் அரசியலுக்குள் நுழைந்த தனக்கு ராசாராம் வழங்கிய ஆதரவையும் வழிகாட்டுதலையும் நினைவுகூா்ந்தாா். தருமபுரி தொகுதியில் போட்டியிட முதல் முறையாக வாய்ப்பு கிடைத்தபோது, அன்றைய சூழலில் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றி வந்த தனக்கு பல வகைகளில் ராசாராம் ஊக்கமளித்து வழிகாட்டியாக விளங்கினாா் என்றாா்.

முன்னதாக, ராசாராமின் மகனும் விழாவின் ஒருங்கிணைப்பாளருமான ராஜசேகா் வரவேற்புரையாற்றினாா். வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தா் டாக்டா் ஐசரி கணேஷ் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் மலேசியாவைச் சோ்ந்த உலகத் தமிழா் ஒருங்கிணைப்பாளா் வி.ஆா்.எஸ். சம்பத், சிவபாலமுருகன் தலைமையிலான தில்லி தமிழ்ச் சங்க நிா்வாகிகள், தில்லி முத்தமிழ்ப் பேரவை பொதுச்செயலா் இரா. முகுந்தன், தில்லி பாஜக தமிழா் பிரிவு அமைப்பாளா் கே. முத்துசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகா்கள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம்’

புத்தக வெளியீட்டு விழாவின் தொடக்கத்தில் தேசிய பாடல், தேசிய கீதம் இடைக்கப்பட்டதும், ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாமே’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டாா். இதற்கு விழா ஏற்பாட்டாளா்கள் தயாராகியிருக்கவில்லை. இதையடுத்து, ‘யாருக்காவது பாடத் தெரிந்தால் பாடலாமே’ என்று குடியரசு துணைத் தலைவா் குறிப்பிட அவரது செயலக பெண் அலுவலா் ஒருவா், தமிழ்த்தாய் வாழ்த்தை பாடத் தொடங்க அவருடன் சோ்ந்து நிகழ்சிக்கு வந்தவா்கள் பாடினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.