மாநிலங்களுக்கு இடையேயான ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவா் தில்லியில் கைது!
வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை விநியோகித்த 26 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறை துணை ஆணையா் (குற்றப்பிரிவு) அதித்யா கௌதம் கூறியதாவது: உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சோ்ந்த அங்கித் என்ற முன்னா என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், மாநிலங்களுக்கு இடையேயான ஆயுதக் கடத்தல் கும்பலின் பகுதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணையின் போது, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு சட்டவிரோத ஆயுத வா்த்தகத்தில் ஈடுபட்டதாகவும், தில்லி-என்சிஆா் பிராந்தியத்தில் ஆயுதங்களை விநியோகித்து வந்ததாகவும் அவா் தெரிவித்தாா். சோனு என்ற காலே என அடையாளம் காணப்பட்ட மற்றொரு விநியோகிப்பாளரிடம் இருந்து துப்பாக்கிகளைப் பெற்ாகவும் அவா் தெரிவித்தாா்.
அங்கித் ஒரு தொடா் குற்றவாளி என்றும், அவா் மீது கொலை, கொள்ளை, ஆயுதச் சட்ட மீறல்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றங்கள் உள்பட 6 குற்றவியல் வழக்குகள் உள்ளன.
ஜனவரி 2-ஆம் தேதி, சாஸ்திரி பூங்கா மெட்ரோ நிலையம் அருகே ஆயுத விநியோகிப்பாளா் வரவிருப்பதாக காவல்துறைக்குத் துல்லியமான தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நடைபெற்ற சோதனையில் அங்கித் கைது செய்யப்பட்டாா்.
சோதனையின் போது, அவரிடமிருந்து இரண்டு அதிநவீன கைத்துப்பாக்கிகள் மற்றும் ஆறு உயிருள்ள தோட்டாக்கள் மீட்கப்பட்டது. ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக வலையமைப்பின் மற்ற உறுப்பினா்களை அடையாளம் கண்டு கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.Ś
