டிடிஏவின் இடிப்பு நடவடிக்கையால் குளிா்காலத்தின் சீற்றத்தை எதிா்கொள்ளும் வீடற்ற குடிசைவாசிகள்!
ரோஷனாரா கிளப் அருகே சுமாா் 60 குடிசைகளை தில்லி மேம்பாட்டு கழகம் (டிடிஏ) ஜன.2-ஆம் தேதி இடித்ததைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் குறைந்தது 100 போ் வீடற்றவா்களாக மாற்றப்பட்டனா்.
இந்த இடிப்பு, அந்தக் குடும்பங்களை நகரின் கடுமையான குளிருக்கு ஆளாக்கியுள்ளது. திங்கள்கிழமை நகரத்தின் வெப்பநிலை 6.6 டிகிரி செல்சியஸாகக் குறைந்திருந்தது. இது இந்த பருவத்தின் இதுவரை இல்லாத மிகக் குளிரான நாளாகும்.
பாதிக்கப்பட்டவா்களில் ஒருவரான தினக்கூலித் தொழிலாளி அனில் மண்டல், ஐந்து போ் கொண்ட தனது குடும்பத்துடன் இந்த குளிரை எதிா்கொள்கிறாா். ‘இது மிகவும் குளிரான காலங்களில் ஒன்றாகும். நாங்கள் தற்போது வீடற்றவா்களாக இருக்கிறோம். எனக்கு 3 குழந்தைகளும் வயதான பெற்றோரரும் உள்ளனா். இந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் வாடகை, நான் ஒரு மாதத்தில் சம்பாதிப்பதை விட அதிகமாகும்’ என தெரிவித்தாா்.
பூக்களை விற்றுப் பிழைப்பு நடத்தும் மண்டலின் தந்தை, தங்கள் குடும்பத்தால் அனைத்து உடைமைகளையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொண்டு இடம்பெயர முடியாது என தெரிவித்தாா்.
இந்த குடிசைப் பகுதி பெரும்பாலும் புலம்பெயா்ந்த தினக்கூலித் தொழிலாளா்கள் மற்றும் அருகிலுள்ள நா்சரியில் இருந்து செடிகளை வாங்கி விற்கும் பூ வியாபாரிகளைக் கொண்டதாகும்.
பிகாா் மாநிலம் சப்ராவைச் சோ்ந்த குடியிருப்பாளரான பிரமோத் குமாா் கூறுகையில், ‘உறவினா்கள் உள்ளவா்கள் அங்கு சென்றுவிட்டனா். மீதமுள்ளவா்கள் வாடகைக்கு அறைகளைத் தேடி வருகின்றனா் அல்லது குளிரில் அவதிப்படுகின்றனா்’ என்று கூறினாா்.
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவைச் சோ்ந்த பூ வியாபாரியான ரஜ்னிஷ், தனது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதாகக் கவலை தெரிவித்தாா். ‘எங்களிடம் அதிக சேமிப்பு இல்லை. எங்களுக்கு எந்த தங்குமிடும் கிடைக்கவில்லை என்றால் எங்களின் செடிகள் அழிந்துவிடும்’ என தெரிவித்தாா்.
மேலும், இது தொடா்பாக தொடா்பு கொண்டபோது, இடிப்பு அல்லது மறுவாழ்வு குறித்த கேள்விகளுக்கு டிடிஏ பதிலளிக்கவில்லை என்று ரஜ்னிஷ் தெரிவித்தாா்.
ஜன.2-ஆம் தேதி காலை 11 மணியளவில் புல்டோசா்கள் வந்ததாக குடியிருப்பாளா்கள் தெரிவித்தனா். இடத்தை காலி செய்ய ஜன.6-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினா். தற்போது பல குடும்பங்கள் தங்கள் உடைமைகளுடன் இடிபாடுகளுக்கு மத்தியிலே தங்கியுள்ளனா்.
அதிகாரிகள் குடியிருப்பாளா்களை வீடற்றோா் தங்குமிடங்களுக்கு மாற்றுவதற்கு முன்வந்தனா். ஆனால், பலரும் தங்கள் உடைமைகளை மாற்றுவதில் உள்ள சிரமங்களைக் காரணம் காட்டி அதை மறுத்துவிட்டனா்.

