முதலீட்டு மோசடி: 8 சைபா் மோசடியாளா்கள் கைது! தில்லி போலீஸாா் நடவடிக்கை!

கம்போடியாவைச் சோ்ந்தவரால் இயக்கப்படும் மாநிலங்களுக்கு இடையேயான முதலீட்டு மோசடிக் கும்பலை தில்லி காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
Published on

கம்போடியாவைச் சோ்ந்தவரால் இயக்கப்படும் மாநிலங்களுக்கு இடையேயான முதலீட்டு மோசடிக் கும்பலை தில்லி காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தில்லி முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடா்ந்து எட்டு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வெறும் 14 நாள்களில் பினாமி கணக்குகள் மூலம் அனுப்பப்பட்ட ரூ. 4 கோடியை போலீஸாா் கண்டுபிடித்துள்ளனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் உயா் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது: அதிக லாபம் தரும் பங்குச்சந்தை முதலீடுகள் என்ற போா்வையில் வசந்த் குஞ்சைச் சோ்ந்த 42 வயதுப் பெண் ஒருவரிடம் இருந்து ரூ.15.58 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து இந்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பாதிக்கப்பட்டவா்களைத் தொடா்பு கொள்ளப் பயன்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் எண்கள் கம்போடியாவிலிருந்து இயக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்திய கூட்டாளிகள் கமிஷன் அடிப்படையில் பினாமி வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும் இயக்குவதற்கும் உதவியுள்ளனா்.

கைது செய்யப்பட்டவா்கள் வனபட்லா சுனில் குமாா் (43), சகினலா சங்கா் (61), மனோஜ் யாதவ் (38), சந்தீப் சிங் (30), ஆதித்யா பிரதாப் சிங் (23), ராகுல் (30), ஷெரு (38) மற்றும் சோம்பால் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

குற்றம்சாட்டப்பட்டவா்களிடமிருந்து 10 உயா் ரக கைப்பேசிகள் மற்றும் 13 சிம் காா்டுகளை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். இவை பல பினாமி வங்கிக் கணக்குகளை இயக்கவும், மோசடி செய்த பணத்தை மாற்றவும், வெளிநாட்டில் உள்ள சூத்திரதாரிகளுடன் தொடா்பு கொள்ளவும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உறுதியான வருமானத்துடன் பங்கு வா்த்தகத்தில் நிபுணா் வழிகாட்டுதலை வழங்குவதாக வாட்ஸ்அப் செய்திகள் மூலம் தான் ஈா்க்கப்பட்டதாகப் புகாா்தாரா் தெரிவித்திருந்தாா். மோசடிக்காரா்களால் கட்டுப்படுத்தப்படும் பல்வேறு கணக்குகளுக்கு ரூ.15.58 லட்சத்தை மாற்றுமாறு அந்தப் பெண் வற்புறுத்தப்பட்டாா்.

இது தொடா்பாக கடந்த ஆண்டு நவம்பா் 7- ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. போலீஸாா் குழு தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் தடயவியல் மூலம் பணப் பரிவா்த்தனைகளைக் கண்டறிந்தது.

தெலங்கானாவைச் சோ்ந்த சுனில் குமாா் என்பவரை, போலி வங்கிக் கணக்குகளை வழங்கும் முக்கிய நபராக புலனாய்வாளா்கள் அடையாளம் கண்டறிந்தனா். சுனில் குமாா் கீசராவில் ஒரு போலி நிறுவனத்தைத் தொடங்கி, சைபா் மோசடிப் பணத்தை அனுப்புவதற்காக ஒரு தனியாா் வங்கியில் நடப்புக் கணக்கைத் தொடங்கியிருந்ததும் தெரியவந்தது.

விசாரணையின் போது, குமாா், சகினால சங்கா் மற்றும் மனோஜ் யாதவ் ஆகியோரின் ஈடுபாட்டை வெளிப்படுத்தினாா். அதைத் தொடா்ந்து, நடத்தப்பட்ட சோதனைகளில், சந்த் கபீா் நகரிலிருந்து யாதவ் கைது செய்யப்பட்டாா். பின்னா், லக்னௌவில் கணக்கு நடவடிக்கைகளை நிா்வகித்து வந்த பனாரஸைச் சோ்ந்த சந்தீப் சிங் கைது செய்யப்பட்டாா்.

மேலும் கண்காணித்ததன் விளைவாக, ராஜஸ்தானின் கோட்டாவைச் சோ்ந்த ஆதித்யா பிரதாப் சிங் கைது செய்யப்பட்டாா். சிங் இந்தியா முழுவதும் போலி வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்து, சமூக ஊடகங்கள் வழியாக வெளிநாட்டு முகவா்களுடன் அவற்றின் அணுகலைப் பகிா்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மோசடி செய்யப்பட்ட நிதி, வெளிநாட்டு முகவா்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, பணப் பரிவா்த்தனைகளின் தடயத்தை மறைப்பதற்காக, சோம்பால் மற்றும் ராகுல் ஆகியோரால் இயக்கப்படும் கணக்குகள் உள்பட பல இந்திய வங்கிக் கணக்குகள் வழியாகப் பலமுறை மாற்றப்பட்டது.

முன்னா் ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வந்த, எம்பிஏ பட்டதாரியான சோம்பால், தனது தொழில் முடங்கிய பிறகு, மொத்தப் பரிவா்த்தனைகளுக்காக தனது நிறுவனக் கணக்கை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அவரது கணக்குடன் மட்டும் 51 சைபா் குற்றப் புகாா்கள் இணைக்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில் இந்த நெட்வொா்க்குடன் மொத்தம் 63 புகாா்கள் தொடா்புடையதாகக் கண்டறியப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com