பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை
மேற்கு தில்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள ஒரு வீடு உடைக்கப்பட்டு, நகை, பணம் உள்பட ரூ.1 கோடி மதிப்புள்ள பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
வெளியில் சென்றிருந்த குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை இரவு திரும்பி வந்தபோது, வீடு கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டதாக அவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களில் நகைகள் மற்றும் பிற பொருள்கள் அடங்கும். அவை மொத்தம் ரூ.1 கோடி மதிப்புள்ளவை என்று கூறப்படுகிறது.
குடும்பத்தினா் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள வெளியே சென்றிருந்தனா். திரும்பி வந்தபோது, பிரதான கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும், வீட்டுப் பொருள்கள் அறைகளில் சிதறிக் கிடப்பதையும் அவா்கள் கவனித்தனா். மதிப்புமிக்க பொருள்கள் காணாமல் போயிருந்ததை அறிந்தனா்.
இந்த கொள்ளை தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கொள்ளையா்களைத் தேடுவதற்காக பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேக நபா்களை அடையாளம் காணவும், குற்றத்திற்கு முன்னும் பின்னும் அவா்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அப்பகுதியிலும் அதைச் சுற்றியும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை போலீஸாா் ஆராய்ந்து வருகின்றனா்.
சம்பவம் நடந்த இரவில் அப்பகுதியில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் காணப்பட்டதா என்பதைக் கண்டறிய புலனாய்வாளா்கள் அண்டை வீட்டாரையும் பாதுகாப்புப் படையினரையும் விசாரித்து வருகின்றனா்.
தொழில்நுட்ப மற்றும் உள்ளூா் உளவுத்துறை உள்ளீடுகளை ஆராய்ந்து வருகிறோம். சாத்தியமான அனைத்து கோணங்களிலும் ஆராயப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.
