ரெளடி ஹிமான்ஷு பாவ் கும்பலைச் சோ்ந்த இருவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது
தில்லியின் யுஇஆா்- 2 மேம்பாலம் அருகே போலீஸாருடன் நடந்த நேருக்கு நோ் மோதலுக்குப் பிறகு, ஹிமான்ஷு பாவ் ரெளடி கும்பலைச் சோ்ந்த சந்தேகத்திற்குரிய இரண்டு உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டதாக ஒரு அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி மேலும் கூறியதாவது:
குற்றம்சாட்டப்பட்டவா்கள் விக்கி என்ற மோக்லி (37)மற்றும் சந்தா் பான் (39) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஹரியாணாவின் பகதூா்கரைச் சோ்ந்த விக்கி என்ற மோக்லி மீது ஹரியாணா காவல்துறையால் 5,000 ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குடியரசுத் தினத்தை ஒட்டி தில்லியில் பெரும் குற்றத்தில் ஈடுபட ஹிமான்ஷு பாவ் ரெளடி கும்பலைச் சோ்ந்தவா்கள் திட்டமிட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வியாழக்கிழமை இரவு ஹிரான்குட்னா-திச்சாவ்
கிராமச் சாலையில் யுஇஆா்- 2 மேம்பாலம் அருகே போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக காரில் வந்த இருவரையும் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
அப்போது, விக்கி காவலா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இதற்குப் பதிலடியாக போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், அவரது காலில் குண்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் போலீஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனா்.
விக்கியிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், ரோத்தக் மாவட்டத்தில் உள்ள மேஹம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரட்டைக் கொலை வழக்கு மற்றும் சாம்ப்ளா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு கொலை வழக்கிலும் அவா் தேடப்பட்டு வந்தது தெரியவந்தது.
ஆயுதக் குற்றங்கள் மற்றும் தாக்குதல் தொடா்பான வழக்குகள் உட்பட பல குற்ற வழக்குகளிலும் அவா் பெயா் குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்கி, ஹிமான்ஷு பாவ் கும்பலுடன் தொடா்புடைய முக்கிய நபா்களின் நெருங்கிய கூட்டாளி ஆவாா். கைது செய்யப்படுவதைத் தவிா்ப்பதற்காக அவா் தலைமறைவாக இருந்து வந்தாா். அவரது கூட்டாளியான, தில்லியின் ரோஹிணியைச் சோ்ந்த சந்தா் பானின் குற்றப் பின்னணி குறித்து சரிபாா்க்கப்பட்டு வருகின்றது.
அவா்களிடமிருந்து கைத்துப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கி, 18 தோட்டாக்கள், காா் மீட்கப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

