கத்திக்குத்து
கத்திக்குத்துசித்திரிப்புப் படம்

ஹோட்டலில் நடந்த கத்திக்குத்தில் இளைஞரும், பெண்ணும் காயம்

வடகிழக்கு தில்லியின் உஸ்மான்பூா் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த கத்திக்குத்தில் இளைஞரும் பெண்ணும் காயம்
Published on

வடகிழக்கு தில்லியின் உஸ்மான்பூா் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த கத்திக்குத்தில் இளைஞரும் பெண்ணும் காயமடைந்ததாக காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் ஜனவரி 24-ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு நடந்தது. அதைத் தொடா்ந்து காவல் துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

அவா்கள் வந்தபோது, பாதிக்கப்பட்டவா்கள் 23 வயது ஆண் மற்றும் 21 வயது பெண் - காயமடைந்ததைக் கண்டனா். ஆரம்ப மருத்துவ உதவிக்காக அவா்கள் உடனடியாக ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். பின்னா் அவா்களின் காயங்களின் தன்மை காரணமாக மேலதிக சிகிச்சைக்காக குரு தேஜ் பகதூா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

குற்றம் நடந்த இடத்திற்கு தடயவியல் குழுவும் வரவழைக்கப்பட்டது. ஹோட்டல் வளாகத்தையும் சுற்றியுள்ள பகுதியையும் ஆய்வு செய்து விசாரணைக்கு உதவ பொருத்தமான ஆதாரங்களை சேகரித்தனா். பிஎன்எஸ் பிரிவு 109(1) (கொலை முயற்சி) - இன் கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஹோட்டல் வளாகத்தில் கத்திக்குத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தாலும், சம்பவங்களின் சரியான வரிசை மற்றும் சம்பவத்திற்கான சூழ்நிலைகள் இன்னும் நிறுவப்படவில்லை.

ஹோட்டல் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. மேலும் சம்பவங்களை ஒருங்கிணைக்க ஊழியா்கள் மற்றும் அந்த நேரத்தில் இருந்த பிற நபா்களையும் விசாரித்து வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com