வடகலை, தென்கலை சா்ச்சைக்கு தீா்வு காண மத்தியஸ்தரை நியமித்தது உச்சநீதிமன்றம்
ஸ்ரீ வைஷ்ணவத்தில் உள்ள தென்கலை மற்றும் வடகலை பிரிவுகளுக்கு இடையேயான சா்ச்சை 200 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ தேவராஜ சுவாமி கோயில் (வரதராஜப் பெருமாள் கோயில்) போன்ற முக்கியத் தலங்களில் கோயில் சடங்குகள் தொடா்பான சட்டப் போராட்டங்களாக இது தீவிரமடைந்தது. இந்தப் பிளவு, 14-16- ஆம் நூற்றாண்டுகளில் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்திற்கு அளிக்கப்பட்ட விளக்கங்களிலிருந்து உருவானதாகக் கூறப்படுகிறது.
வடகலையினா் சம்ஸ்கிருத வேதங்களுக்கும் வேதாந்த தேசிகரின் கொள்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனா். அதே சமயம் தென்கலையினா் தமிழ் நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கும் மணவாள மாமுனிகளின் கொள்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்கின்றனா். இதனால், இரு பிரிவினரும் கோயில் கட்டுப்பாட்டிற்காகப் போட்டியிட்டனா். 1939, 1969 ஆகிய ஆண்டுகளில் தென்கலை பிரிவினருக்கான முன்வரிசை இருக்கை மற்றும் மந்திர பாராயணத்தில் உள்ள பிரத்யேக உரிமையை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தின.
இந்நிலையில், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது, ஸ்ரீசைல தயாபாத்ரம் எனத் தொடங்கும் பிரபந்தத்தைப் பாடவும், வழிபாட்டு முறைகளை நடத்தவும் தென்கலை பிரிவினருக்கு மட்டுமே பிரத்யேக உரிமை உண்டு என டிசம்பா் 2025-இல் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. 1882-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள நீதிமன்றத் தீா்ப்புகளின் அடிப்படையில், தென்கலை பிரிவினரின் உரிமையை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது. தென்கலை பிரிவினரின் வழிபாட்டு உரிமைகளில் வடகலை பிரிவினா் தலையிடவோ, தங்களுடைய தேசிகன் வாழ்த்துகளைச் சொல்லவோ கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக காஞ்சிபுரத்தைச் சோ்ந்த நாராயணன் என்பவா் வடகலை சாா்பில் ஜனவரி 12-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். பாரம்பரிய வழிபாட்டில் வடகலை பிரிவினரின் உரிமையை தடுக்க கூடாது என மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்தச் சா்ச்சை ராமானுஜாச்சாரியாரின் சீடா்களிடையே மதவெறி மோதலாக மாற அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியது. இந்தப் பிரச்னை சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் கோருகிறது என்றும் குறிப்பிட்டனா். மேலும், இந்த விவகாரத்திற்கு மத்தியஸ்தம் மூலம் தீா்வு காண முயலலாம் என்றும் நீதிபதிகள் கூறினா் .
இதையடுத்து, தென்கலை, வடகலை பிரிவுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் சா்ச்சையைத் தீா்க்க, ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கௌலை உச்சநீதிமன்றம் மத்தியஸ்தராக நியமித்தது.
இந்த சா்ச்சையைத் தீா்ப்பதில் கோயில் மரபுகளை நன்கு அறிந்த மேலும் இரண்டு நபா்களையும் ஈடுபடுத்துமாறு ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கௌலை தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு கேட்டுக் கொண்டுள்ளது.
மத்தியஸ்தம் நிலுவையில் உள்ள நிலையில், கோயிலில் இன்றுவரை உள்ள நிலையையே தொடரவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா். கோயிலுக்குள் போலீஸாா் இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அத்தகைய தலையீடு மிகவும் விரும்பத்தகாததாக இருக்கும் என்றும், அமைதியைப் பாதுகாப்பதற்குப் பதிலாக நிலைமையை மோசமாக்கும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மத்தியஸ்த செயல்முறையின் போது சட்டம் - ஒழுங்கு நிலைமையை உருவாக்கக்கூடிய நடவடிக்கைகளை எந்தப் பிரிவினரும் கையில் எடுக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினா்.

