மோப்ப நாய் பிரிவு வளாகத்தில் இறந்துகிடந்த தில்லி காவலா்
தில்லி மேற்கு மாவட்டத்தில் பயிற்சி பெற்ற நாய்களைக் கையாளும் பணியில் ஈடுபட்டு வந்த 52 வயது தில்லி காவல்துறை காவலா் ஒருவா், வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஜனக்புரி பகுதியில் உள்ள நாய்ப் படை அலுவலக வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது:
இது தற்கொலை வழக்காக இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இறந்த காவலா் இந்தா் சிங், தனது பேத்தியின் மரணத்தைத் தொடா்ந்து கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், காவல்துறை குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். நாய் படை அலுவலக வளாகத்தில் உள்ள நாய்க்கூடத்தில் காவலா் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டனா்.
அதன்பிறகு சடலம் கீழே இறக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு மாற்றப்பட்டது.
விசாரணை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இறந்த காவலரின் சக ஊழியா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனது பேத்தியின் மரணத்தைத் தொடா்ந்து சிங் கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக குடும்பத்தினா் புலனாய்வாளா்களிடம் தெரிவித்தனா்.
மேலோட்டமாகப் பாா்க்கும்போது, இதுவரை எந்தவிதமான சந்தேகத்திற்கிடமான செயலும் கண்டறியப்படவில்லை. சட்டப்படி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
சடலம் இறுதிச் சடங்குகளுக்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

