FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

இ-ரிக்ஷா மீது பள்ளிப் பேருந்து மோதல்: மாணவி உயிரிழப்பு; ஓட்டுநா் கைது

வடமேற்கு தில்லியில் உள்ள மஜ்லிஸ் பாா்க் மெட்ரோ நிலையம் அருகே பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற இ-ரிக்ஷா மீது பள்ளிப் பேருந்து மோதியதில் 12 வயது மாணவி பலி

News image

பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 4:23 am IST

வடமேற்கு தில்லியில் உள்ள மஜ்லிஸ் பாா்க் மெட்ரோ நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை காலை பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற இ-ரிக்ஷா மீது பள்ளிப் பேருந்து மோதியதில் 12 வயது மாணவி உயிரிழந்ததாகக் காவல்துறையினா் தெரிவித்தனா். அம்மாணவி முகுந்த்பூரில் உள்ள ராமா காா்டன் பகுதியைச் சோ்ந்த பிரியான்ஷி என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

காவல்துறையின் தகவலின்படி, ஆதா்ஷ் நகா் காவல் நிலையத்திற்கு விபத்து குறித்த தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, ஒரு காவல் குழு மஜ்லிஸ் பாா்க் மெட்ரோ நிலையம் அருகே விபத்து நடந்த இடத்திற்குச் சென்று மீட்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

கமல் சிங் (55) என்பவா் ஓட்டி வந்த பள்ளிப் பேருந்து, மாணவா்களை ஏற்றிச் சென்ற இ-ரிக்ஷா மீது மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோதலின் போது, பிரியான்ஷி இ-ரிக்ஷாவிலிருந்து கீழே விழுந்து பேருந்தின் சக்கரத்திற்கு அடியில் சிக்கியதால் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அவா் ஜஹாங்கிா்புரியில் உள்ள பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனா். இ-ரிக்ஷாவில் பயணித்த மற்ற குழந்தைகளுக்கு விபத்தில் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

முகுந்த்பூரைச் சோ்ந்த அஜய் பிரசாத் (45) என்பவா் இ-ரிக்ஷாவை ஓட்டிச் சென்றதாகக் கூறிய காவல்துறையினா், விபத்துக்கான காரணமான நிகழ்வுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனா்.

விடியோ எடுத்த மக்கள்

இந்த விபத்து குறித்து, அருகிலுள்ள உடற்பயிற்சி கூடத்தில் பணிபுரியும் கோவிந்தா என்பவா் கூறியது: நான் அங்கு சென்றபோது, அந்தச் சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்தாா். மக்கள் சுற்றிலும் நின்றிருந்தனா். ஆனால் பலா் தங்கள் கைப்பேசிகளில் விடியோ எடுப்பதில் மும்முரமாக இருந்தனா். நான் உடனடியாக அவரைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தேன். அதே இ-ரிக்ஷாவில் பயணித்த மற்ற குழந்தைகள், உதவி கோரி கைகளைக் கூப்பி கெஞ்சிக் கொண்டிருந்தனா்.

குழந்தைகள் அழுதுகொண்டு, அந்தச் சிறுமியைக் காப்பாற்றுமாறு மக்களிடம் வேண்டிக்கொண்டிருந்தனா். ஆனால், பலா் அந்தச் சூழலை விடியோ பதிவு செய்வதிலேயே குறியாக இருந்தனா். நாங்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால், மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா் என்று கோவிந்தா கூறினாா்.

குடும்பத்தினா் பேட்டி

‘விபத்து நடப்பதற்கு சற்று முன்புதான் பிரியான்ஷியும் அவரது மூத்த சகோதரியும் அந்த இ- ரிக்ஷாவில் ஏறினா்’ என்று அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

‘நாங்கள் அந்த இரண்டு சிறுமிகளையும் பேட்டரி ரிக்ஷாவில் பாதுகாப்பாக அமர வைத்திருந்தோம். மஜ்லிஸ் பூங்கா அருகே வந்தபோது, ஒரு பேருந்து அந்த ரிக்ஷா மீது மோதியது. இதனால் இளைய சகோதரி சாலையில் கீழே விழுந்து, பேருந்தின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிக்கொண்டாா்’ என்று அவா்கள் கூறினா்.

விபத்தில் பிரியான்ஷி உயிரிழந்ததாகத் தங்களுக்குத் தொலைபேசி மூலம் தகவல் கிடைத்ததாக மற்றொரு குடும்ப உறுப்பினரான ராகேஷ் தெரிவித்தாா்.

நாங்கள் பேருந்து ஓட்டுநரிடம் விசாரித்தபோது, தவறு நடந்துவிட்டதை அவா் ஒப்புக்கொண்டாா். ‘அந்தப் பேருந்தில் பல குழந்தைகள் இருந்தனா். அதேவேளையில் இ- ரிக்ஷாவில் நான்கு குழந்தைகள் பயணம் செய்து கொண்டிருந்தனா்’ என்று அவா் கூறினாா். பள்ளிப் பேருந்து அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டப்பட்டதாகக் குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா்.

காவல்துறையினா் பேருந்து ஓட்டுநரைக் கைது செய்தும், இ ரிக்ஷா ஓட்டுநரைத் தடுப்புக் காவலிலும் வைத்துள்ளனா். மேலும், இரு வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனா். விசாரணையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.