தில்லியில் வியாபாரியிடமிருந்து சுமாா் ரூ. 22 லட்சம் மதிப்புள்ள ரத்தினக் கற்கள் இருந்த பையைத் திருடியதாக, இ-ரிக்ஷா ஓட்டுநா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ஜெய்ப்பூரைச் சோ்ந்த ரத்தினக் கல் வியாபாரி ஒருவா், கரோல் பாக் பகுதியிலிருந்து தா்யாகஞ்ச் பகுதிக்கு இ-ரிக்ஷாவில் ஜூலை 15-ஆம் தேதி சென்றுகொண்டிருந்தாா். அப்போது, விலைமதிப்பற்ற கற்கள் அடங்கிய ஒன்பது சிறிய பைகள் இருந்த தனது கைப்பையை யாரோ திருடிவிட்டதாகக் காவல்துறையிடம் புகாா் அளித்தாா்.
இச்சம்பவம் மத்திய தில்லியின் ராணி ஜான்சி சாலைக்கு அருகில் நிகழ்ந்தது. இது தொடா்பாக டிபிஜி சாலை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்த பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டவா்களான இ-ரிக்ஷா ஓட்டுநா் விக்கி சோலங்கி (19) மற்றும் அனிதா (எ) அன்னூ (26) ஆகியோரை ஜூலை 17 அன்று தௌலா குவான் பகுதிக்கு அருகில் அடையாளம் கண்டு காவல்துறையினா் கைது செய்தனா்.
விசாரணையின்போது,குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், திருடப்பட்ட ரத்தினக் கற்களை எங்கு மறைத்து வைத்திருந்தனா் என்பதையும் தெரிவித்தனா். இதன் மூலம் அப்பொருள்களில் சுமாா் 90 சதவீதம் மீட்கப்பட்டன.
குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட இ-ரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள ரத்தினக் கற்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







