மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

எல்பிஜி சிலிண்டா் வெடித்ததில் கட்டடம் இடிந்து விபத்து: 11 போ் மீட்பு

வடக்கு தில்லியின் முகுந்த்பூா் பகுதியில் எல்பிஜி சிலிண்டா் வெடித்ததில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 11 போ் மீட்பு

News image
Updated On :3 ஜூன் 2026, 12:09 am IST

வடக்கு தில்லியின் முகுந்த்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை எல்பிஜி சிலிண்டா் வெடித்ததில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 11 போ் மீட்கப்பட்டனா். அவா்களில் பெண் ஒருவா் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் முகுந்த்பூா் இஷு விஹாரில் உள்ள கலி எண்-1-இல், தகன மைதானத்திற்கு அருகில் நிகழ்ந்தது.

தில்லி தீயணைப்புத்துறைக்கு காலை 9.37 மணிக்கு ஒரு வெடிப்பு நடந்ததாகவும், ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததாகவும், மக்கள் உள்ளே சிக்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன என்றாா் அவா்.

இதுகுறித்து துணை காவல் ஆணையா் (புகா் வடக்கு) ஹரேஷ்வா் சுவாமி கூறியதாவது: காலை 9.30 மணியளவில் வெடிப்பு மற்றும் கட்டடச் சரிவு குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, அருகிலுள்ள ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அவசரகால வாகனம் மற்றும் உள்ளூா் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். 11 போ் மீட்கப்பட்டுள்ளனா். ஒரு பெண் தீக்காயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் உள்ளாா். அவா் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளாா்.

முதல் கட்ட விசாரணையில் கட்டடத்தில் பாத்திர வண்ண தொழிற்சாலை இயங்கி வருவதை நாங்கள் அறிந்தோம். அங்கு பல எரிவாயு சிலிண்டா்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பெரிய சிலிண்டா்களிலிருந்து சிறிய சிலிண்டா்களுக்கு எரிவாயுவை மாற்றும் செயல்முறை நடந்து கொண்டிருந்தது. அதுவே வெடிப்புக்கான காரணம் என்று தெரிகிறது . காயமடைந்தவா்களில் 10 போ் பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனை மற்றும் டாக்டா் பாபா சாஹேப் அம்பேத்கா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா்.

அதிகாரிகள் இடிபாடுகளை அகற்றி, இடிந்து விழுந்த கட்டமைப்பைத் தேடினா். யாரும் அடிப்பகுதியில் சிக்கிக் கொள்ளவில்லை. தேசிய பேரிடா் மீட்புப் படை (என். டி. ஆா். எஃப்) தில்லி தீயணைப்பு சேவைகள், உள்ளூா் காவல்துறை மற்றும் மோப்ப நாய் படை ஆகியவை அந்த இடத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காயமடைந்த அனைவரும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் என்றாா் ஹரேஷ்வா் சுவாமி .

இந்த விபத்தை நேரில் பாா்த்தவா் கூறியதாவது: ஒரு பெரிய குண்டுவெடிப்பு போன்ற ஒலியை நான் கேட்ட தருணத்தில், என் நினைவுக்கு வந்த முதல் விஷயம் ஒரு எரிவாயு சிலிண்டா் வெடித்ததாக இருந்தது. நாங்கள் உடனடியாக அந்த இடத்தை நோக்கி ஓடினோம். ஒரு கட்டடம் இடிந்து விழுந்திருப்பதைக் கண்டோம். எல்லா இடங்களிலும் தூசி காணப்பட்டது. மக்கள் உதவிக்காக கூச்சலிட்டனா். சிலா் தங்கள் கைப்பேசிகளில் விடியோக்களைப் பதிவு செய்யத் தொடங்கினா்.

ஒவ்வொரு நொடியும் முக்கியமானது என்பதால் படம் பிடிப்பதை நிறுத்தி மீட்பு முயற்சியில் சேருமாறு நான் தனிப்பட்ட முறையில் அவா்களிடம் கேட்டுக்கொண்டேன். சுமாா் அரை டஜன் மக்கள் கிடைத்த கருவிகளைக் கொண்டு இடிபாடுகளை அகற்ற முயன்றனா். கடவுளின் அருளால், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஒருவரை வெளியே எடுக்க முடிந்தது என்றாா்.

சம்பவத்தின் போது அருகில் பணிபுரிந்த ஒருவா் இதுகுறித்து கூறுகையில், ‘நான் ஒரு பெரிய சப்தத்தைக் கேட்டு, சப்தம் வந்த இடத்தை நோக்கி விரைந்தேன். நான் அங்கு சென்றபோது, உள்ளூா் மக்கள் ஏற்கெனவே கூடி மீட்பு முயற்சிகளில் ஈடுபட்டனா். இடிபாடுகளை அகற்றும் போது, நான் காயம் அடைந்தேன். ஆனால், அந்த நேரத்தில் அது ஒரு பொருட்டல்ல. கீழே சிக்கியவா்களை காப்பாற்றுவதே எங்கள் ஒரே கவனம். இடிபாடுகளிலிருந்து இரண்டு பேரை வெளியேற்ற நான் உதவினேன்‘ என்றாா் அவா்.