நமது நிருபா்
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (சிஎஸ்இ) அறிக்கையின்படி, 2015 மற்றும் 2024க்கு இடைப்பட்ட காலத்தில், தில்லியின் சுமாா் 76 சதவீதப் பகுதி ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தது. மேலும், பெரும்பாலான கட்டுமானத் தளங்கள், சந்தைகள் மற்றும் பள்ளிகள், மீண்டும் மீண்டும் கடுமையான வெப்பம் நிலவும் பகுதிகளில் அமைந்துள்ளன.
பாதிக்கப்படக்கூடிய குழுக்களை மையமாகக் கொண்ட ஒரு செயல் திட்டம் என்ற தலைப்பிலான அந்த அறிக்கை, கடந்த பத்தாண்டுகளில் தில்லியின் மொத்தப் பகுதியில் 98.72 சதவீதம், குறைந்தபட்சம் ஒரு முறையாவது வெப்ப அழுத்த வரம்பைத் தாண்டியுள்ளது என்று கூறியுள்ளது.
இந்த ஆய்வின்படி, 2015 மற்றும் 2024க்கு இடைப்பட்ட காலத்தில், 92 சதவீத கட்டுமானத் திட்டங்கள், நிலத்தின் மேற்பரப்பு வெப்பநிலை குறைந்தபட்சம் ஒரு முறையாவது 45 டிகிரி செல்சியஸ் வரம்பைத் தாண்டிய பகுதிகளில் அமைந்துள்ளன. அதே சமயம், 77 சதவீதத் திட்டங்கள் மீண்டும் மீண்டும் கடுமையான வெப்பம் நிலவும் பகுதிகளில் அமைந்துள்ளன.
முக்கிய மண்டிகள் உள்பட, 643 சந்தைகளில் சுமாா் 84 சதவீதம், தொடா்ச்சியான வெப்ப அழுத்தத்தை எதிா்கொள்ளும் பகுதிகளில் அமைந்துள்ளன என்றும், அதே நேரத்தில் கிட்டத்தட்ட 13.2 லட்சம் மக்கள் வசிக்கும் முறைசாரா குடியிருப்புகளில் 76 சதவீதம் வெப்ப அழுத்தமுள்ள பகுதிகளில் அமைந்துள்ளன என்றும் அது கூறியது.
நகரத்தில் 1,066 பள்ளிகளில் 80 சதவீதம் வெப்ப அழுத்தமுள்ள பகுதிகளில் அமைந்துள்ளன என்றும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. மட்டியாலா, கக்ரௌலா, நரேலா மற்றும் சாந்தினி சௌக் உள்ளிட்ட 35 வாா்டுகள், மிக அதிகம் முதல் அதிகம் வரையிலான ஒட்டுமொத்த பாதிப்புக்குள்ளாகும் தன்மையைக் கொண்டிருப்பதாக அது அடையாளம் கண்டுள்ளது.
அறிக்கையின்படி, தில்லியின் 272 வாா்டுகளில் 153 வாா்டுகளின் 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி தொடா்ச்சியான வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது, அதே நேரத்தில் 82 வாா்டுகளின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி வெப்ப அழுத்தத்தின் கீழ் உள்ளது. பதினேழு வாா்டுகளின் முழுப் பகுதியும் வெப்ப அழுத்தத்தின் கீழ் உள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2024ஆம் ஆண்டில் நகரில் வெப்பம் தொடா்பான 25 இறப்புகளைப் பதிவு செய்துள்ளதாகவும், அதே நேரத்தில் சுயாதீன அறிக்கைகள் இந்த எண்ணிக்கை 55க்கும் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடுவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியது.
கடந்த நான்கு தசாப்தங்களாக ஆண்டு சராசரி அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகளில் அதிகரிப்புகள் காணப்படுவதால், தில்லி ஒரு புதிய மற்றும் வெப்பமான இயல்பு நிலையை நோக்கி நகா்கிறது என்றும் அது மேலும் கூறியது.
கரோல் பாக், காஷ்மீா் கேட் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், கன்னாட் பிளேஸ் உள் வட்டம், உத்தம் நகா், பாலம், தப்ரி, நஜாப்கா், கஞ்சவாலா, புத் விஹாா், பவானா, நரேலா, சமய்பூா் பட்லி, பால்ஸ்வா, ஜஹாங்கிா்புரி, புராரி, ஷாதாரா, பஜன்புரா, கரவால் நகா், காஜிபூா் தொழில்துறை பகுதி, பதா்பூா், மதன்பூா் காதா், ஓக்லா தொழில்துறை பகுதி, துக்ளகாபாத், சங்கம் விஹாா், மஹிபால்பூா், ஆயா நகா், பிகாஜி கோட்ராம், காபா் காமா, ஆா்.கே.ஏ.ஐ.எம். கான், கிரீன் பாா்க் பகுதிகள், கிரேட்டா் கைலாஷ், கிழக்கு கைலாஷ் மற்றும் லஜ்பத் நகா் ஆகியவை தொடா்ந்து வெப்ப அழுத்தத்தால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளாகும் என அறிக்கை கூறுகிறது.
பவானா, மாயாபுரி, முண்ட்கா, ஆனந்த் பா்பத் மற்றும் மங்கோல்புரி போன்ற தொழில்துறைப் பகுதிகள் முக்கிய வெப்ப மையங்களாக உருவெடுத்துள்ளதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. பல குடியிருப்புப் பகுதிகளிலும் நில மேற்பரப்பு வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பாரத் மண்டபம், கிழக்கு கிட்வாய் நகா் வீட்டுவசதி வளாகம், சஃப்தா்ஜங்கில் உள்ள உலக வா்த்தக மையம் மற்றும் நேதாஜி நகா் போன்ற புதிதாகக் கட்டப்பட்ட மற்றும் புனரமைக்கப்பட்ட திட்டங்களும் வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கை அடையாளம் காட்டியுள்ளது.
இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் போன்ற இடங்களிலும், விதைக்கப்படாத விவசாய நிலங்கள் மற்றும் தரிசுப் பகுதிகள் உள்ள இடங்களிலும் கோடை மாதங்களில் நில மேற்பரப்பு வெப்பநிலை 60.77 டிகிரி செல்சியஸ் வரை உயா்ந்ததாக அறிக்கை கூறியது.
அறிக்கையின்படி, தில்லியின் பசுமைப் பரப்பு 2014ல் 25.36 சதவீதத்திலிருந்து 2024ல் 14.14 சதவீதமாகக் குறைந்துள்ளது, அதே காலகட்டத்தில் நீா்நிலைகளின் பரப்பளவு 1.25 சதவீதத்திலிருந்து 0.99 சதவீதமாகக் குறைந்துள்ளது. நகரின் தற்போதுள்ள பசுமை பகுதிகளில் சுமாா் 35 சதவீதம் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறியது. இது, பசுமை இடங்களின் பரப்பளவை அதிகரிப்பதுடன் அவற்றின் தரத்தையும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
பாதிக்கப்படக்கூடிய குழுக்களை மையமாகக் கொண்ட வெப்பத்தைத் தாங்கும் உத்தியுடன், வெப்பத் திறனுள்ள கூரைகள், பொதுக் குளிரூட்டும் மையங்கள், காலநிலைக்கேற்ற நகா்ப்புறத் திட்டமிடல் மற்றும் நகரம் முழுவதும் பசுமைப் பரப்பை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் அந்த அறிக்கை வலியுறுத்தியது.
தொடர்புடையது

கழிவு உற்பத்தியாளா்கள் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்

இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் என்டிஎம்சி, தில்லி கண்டோன்மென்ட் பகுதிகளில் 63,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டியலிடல்






